Tuesday 28 November 2017

திரு.வைரமுத்து அவர்களுக்கு

திரு.வைரமுத்து அவர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நான் கவிதை எழுதவும் கவிதை நூல்கள் வாசிக்கவும் பழகிய காலமது. உங்களுடைய படைப்புகளை மட்டுமே தேடித்தேடி வாசித்தேன். தமிழின் ஆகச் சிறந்த கவிஞர் நீங்கள் மட்டும்தான் என்ற மூடநம்பிக்கையுடன் இருந்தேன் அப்போது.
உங்கள் மீது தணியாத பாசம் இருந்தது அதற்கு ஒரு காரணமும் இருந்தது. பெரியார் திடலுக்கு ஒரு நிகழ்வுக்கு வந்தபோது ஏன் கருப்புசட்டை அணியவில்லையென்று செய்தியாளர் வீரபாண்டியன் கேட்டதற்கு நான் கருப்புத் தோலுடன் வந்துள்ளேன்,சட்டையை கழற்றி விடலாம் தோலை கழற்ற முடியாது என நீங்கள் சொன்னதாக நான் படித்திருக்கிறேன். அட இவரும் நம்ம ஆளுதான் என்றெண்ணி மகிழ்ந்த காலமது.
பெரியாரை அதிகமாக உள்வாங்க ஆரம்பித்த பிறகும், ஒடுக்கப்பட்டடோரின் குரலாய் ஒலித்த உண்மையான கலைஞர்களின் படைப்புகளைப் படிக்க ஆரம்பித்த பிறகும் தான் நீங்கள் ஒரு சிறந்த படைப்பாளி இல்லை சிறந்த வியாபாரி என்பதை புரிந்து கொண்டேன். உங்களிடம் எந்த கொள்கையும் இல்லை முற்போக்கும் இல்லை என்பது தெரிந்த பிறகு உங்களிடமிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன்.
தமிழ் எனக்குச் சோறு போட்டது, நான் இப்போது தமிழுக்குச் சோறு போடுகிறேன் என்று நீங்கள் சொன்னபோது நான் வாய் விட்டுச் சிரித்தேன் உங்களை எண்ணி அல்ல தமிழின் நிலைமையை எண்ணி.
நீங்கள் எப்போதும் எங்களுக்கானவரில்லை, ஷங்கர்களுக்கும் மணிரத்னங்களுக்கும் மட்டுமே பிடித்துப்போன வார்த்தை வியாபாரி. நீங்கள் அவர்களுக்கு மட்டுமானவர்களாகவே இருங்கள்,எங்களுக்கு வேண்டாம் நீங்கள்.
திராவிடம் வேறு ஆரியம் வேறு, திராவிடத்தின் எதிரி ஆரியமே என்று முழங்கிய பெரியார் மண்ணில், எப்போது நீங்கள் ஆரிய உதடுகள் உன்னது திராவிட உதடுகள் என்னது, ஆரியம் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே என்று எழுதினீர்களோ அப்போதே நினைத்தேன் உங்கள் மனதில் ஏதோ பெரிய திட்டம் இருக்கிறது என்று, இப்போது புரிந்து விட்டது. உங்களை அண்ணா அறிவாலயமும், கோபாலபுரமும் இனியாவது புரிந்து கொள்ளுமா.
விளைந்த கதிர் வளைந்து நிற்பதைப் பார்த்தபோது, மருத்துவக் கனவோடு சுற்றித் திரிந்த மாணவி அனிதா மண்ணுக்குள் போனது மறந்தே போனதா. நட்டு வைத்த வேலுக்கு பொட்டு வைத்தது போல நிமிர்ந்து நிற்பதைப் பார்த்தபோது சூடு பட்ட மீனவர்கள் உங்கள் நினைவில் இருந்து தொலைந்தே போனார்களா.
உங்களைப் போன்றவர்களுக்காகவே பெரியார் அன்று சொன்னது,
“நாய் எலும்பைக் கடிக்குமாம். அந்த எலும்பில் சதையே இருக்காதாம். நாயின் எயிறில் பட்டு இரத்தம் வருமாம். அந்த இரத்தம் எலும்பிலிருந்து வருவதாக கருதி மேலும் கடித்து எயிறை எல்லாம் கிழித்துக் கொள்ளுமாம். அது போன்று தான் நம் புலவர்கள் பழைய குப்பைகளைக் கிளறி அதன் மூலம் கிடைக்கும் பதவி எலும்பைக் கடிக்க ஆசைப்படுகின்றார்களே தவிர, உண்மையை எடுத்துச் சொல்லி மக்களை முன்னேற்றுவோம் – அறிவுடையவர்களாக்குவோம் என்று எவரும் பாடுபடுவது கிடையாது.” (விடுதலை 06.08.1968)
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு

திரு.ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது.

நா ஒங்களோட பெரிய ரசிகனா இருந்தேன், டிவி யில ஒங்களோட பேட்டிய தவறாம பாப்பேன், ஒங்களோட ஒலக அரசியல் பொருளாதார அறிவ பாத்து அப்படியே அசந்து போயிருவேன், தமிழ்நாட்டுலேயே நீங்கதான் பெரிய அறிவாளின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். ஒங்களுக்கு எப்படியாவது ஒரு ரசிகர் மன்றம் வக்கணும்னு ஆசப்பட்டேன்.

கொஞ்ச நாளக்கி முன்னாடி நீங்க இயக்குனர் எஸ்.எ.சந்திரசேகர பேட்டி எடுத்தப்ப நீங்க கேட்ட கேள்விக்கு அவரு பதில் சொல்ல முடியாம தெணறுனப்ப ஒங்க அறிவப்பாத்து அப்படியே புல்லரிச்சுப் போயிட்டேன். ஒங்களுக்கு ரசிகர் மன்றம் வச்சே ஆகணும்னு முடிவே பண்ணிட்டேன்.

அப்ப தான் திரு.ப.சிதம்பரம் அவுகள நீங்க பேட்டி எடுத்தத டிவியில பாத்தேன், எப்போதும் போல நீங்க யார்க்கர் பாலா போட்டு அவர ரன் எடுக்க விடாம போல்டு ஆக்கிருவீங்கன்னு ஆசயோட ஒக்காந்து இருந்தேன். ஆனா மனுசன் அசராம நீங்க போட்ட ஒவ்வொரு பாலயும் சிக்ஸரா அடிச்சப்ப நா கலங்கிப் போயிட்டேன், என்னடா இது நம்ம தலயவே அசிங்கப்படுத்திட்டாறேன்னு பயங்கர கோவமாயிட்டேன். புலி பதுங்குறதே பாயிறதுக்குதான்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா அதுக்கப்புறந்தான் நீங்க எல்லா பாலயும் நோபாலும் வைடுமா போட ஆரம்பிச்சீங்க, ஒரு கட்டத்துல பேட்ஸ்மேனே(ப.சிதம்பரம்) ஒங்ககிட்ட தம்பி பால ஸ்டம்புக்கு நேரா போடலன்னாலும் பரவாயில்ல பிட்சுகுள்ளயாவது போடுங்கன்னு சொன்னாரு( புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க மிஸ்டர் பாண்டே) ச்ச என்ன ஒரு அசிங்கம். நீங்களும் வலிக்காத மாதிரியே நடிச்சிக்கிட்டு இருந்தீங்க. ஆனா அவரு நெனச்சுருப்பாரு எவ்வளவு அசிங்கப்படுத்துனாலும் தாங்குறானே இவன் ரொம்ப நல்லவேன்னு.

சில பேரு வருசம் பூரா நல்லா படிச்சிட்டு நமக்குத்தான் எல்லாம் தெரியுமேன்னு பரீட்சைக்கு மொத நாளு படிக்காம பரீட்சை எழுதி அதுல பெயிலா போயிருவாங்க, சில பேரு ஒன்னுமே தெரியாம மொத நாளு நைட்டு பரீட்சைக்கு வர்ற கொஷ்டீன மட்டும் அரகொறயா படிச்சு பாஸ் பண்ணீருவாங்க. இதுல நீங்க ரெண்டாவது ரகம், வர்றவங்க மொத ரகம். வர்றவங்க எல்லாரும் தெளிவா வந்தா ஒங்கள எல்லாருமே வச்சு செய்யலாம்னு இப்ப தாங்க தெரிஞ்சுக்கிட்டேன்.

நீங்களும் என்ன மாதிரியே ஒன்னுந்தெரியாத சின்னப்பயதாங்கிறத நா புரிஞ்சுக்கிட்டேன், அப்ப நீங்களும் அப்ரசன்டி தானா.

புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க பாண்டே.

இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

Saturday 11 November 2017

மதிப்புக்குரிய ஆட்சியாளர்களுக்கு

மதிப்புக்குரிய ஆட்சியாளர்களுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நா ஒரு சாதரணமான ஆளு, எனக்கு ஒங்க அளவுக்கு பெரிய அறிவெல்லாம் கெடையாது, நா எழுதுனதுல ஏதாவது தப்பு இருந்துச்சுன்னா என்ன மன்னிச்சுக்குங்க.
ரொம்ப நாளாவே நீங்க எல்லாரும் இந்தியா வல்லரசு ஆகணும் வல்லரசு ஆகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, ஆனா எனக்கு தெரிஞ்சதெல்லாம் எங்க ஊருல இருக்க வல்லத்தரசு அப்புடிங்கிறவரத்தான், சரி நமக்குத்தான் தெரியல நல்லா படிச்சவங்ககிட்ட கேப்போம்னு ஒருத்தர்கிட்ட போயி கேட்டேன்.
அவரு சொன்னாரு வல்லரசுன்னா வலிமையான பாரதம் அப்படின்னு, அய்யா நம்ம மரமண்டையில ஒன்னும் ஏறல கொஞ்சம் வெவரமா சொல்லுங்கன்னேன், அதுக்கு அவரு எல்லா நாடுகளும் நம்மள பாத்து பயப்படுற மாதிரி நாம ராணுவ பலத்தோட இருக்கிறதுக்கு பேரு தான் வல்லரசு அப்படின்னாரு.
நா வாய மூடிக்கிட்டு பேசாம இருந்துருக்கணும் அவருக்கிட்ட கேட்டேன் அப்படி வல்லரசு ஆயிட்டா எல்லாருக்கும் மூணு வேள சோறு கெடைக்குமான்னு, அதுக்கு அவரு என்ன கோவமா மொறச்சாரு நா வாய மூடிக்கிட்டு பேசாம வந்துட்டேன்.
ஏங்க வல்லரசா இருக்குறது முக்கியமா இல்ல நல்லரசா இருக்குறது முக்கியமா, இங்க நெறைய பேரு சோத்துக்கு வழியில்லாம கெடக்குறான், என்ன மாதிரி நெறைய பேரு படிப்பில்லாம இருக்குறான், படிச்சுப்புட்டு நெறைய பேரு வேல கெடைக்காம திரியுறான், அதுக்கு ஏதாவது பண்ணுங்கன்னா அத விட்டுப்புட்டு வல்லரசு ஆகணும் வெங்காயம் ஆகணும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, வரிசையா ராக்கெட் விடுறீங்களே எல்லா ஊருக்கும் பஸ் விட்டுட்டீங்களா.
இந்தியா வளர்ந்துருச்சு வளர்ந்துருச்சுன்னு சொல்றீங்களே, 1947 ல இருந்து நீங்க மட்டுந்தான் வளர்ந்து இருக்கீங்க நாங்க என்னமோ இன்னும் அப்படியே தான் இருக்கோம், மத்தவங்கல்லாம் அவங்க பொருளுக்கு வெள வச்சுக்கிறாங்களே நாங்க வெவசாயம் பண்ற பொருளுக்கு ஏங்க எங்களால வெள வக்க முடியல, நீங்க எங்களுக்கு எதுவும் இலவசமா தர வேணாங்க நாங்க நல்லபடியா பொழைக்கிறதுக்கு வழி பண்ணுங்க நாங்களே எல்லாத்தையும் காசு கொடுத்து வாங்கிக்கிறோம்.
எங்க பக்கத்து வீட்டுல இருக்குற தம்பி ஏதோ டிஜிட்டல் இந்தியான்னு சொல்லிக்கிட்டு இருந்தான், என்னடா இது புது இந்தியாவா இருக்கேன்னு அப்படின்னா என்னன்னு கேட்டேன், அதுக்கு அந்த பய இனிமே நாடு முழுக்க கம்ப்யூட்டர் தான் இன்டர்நெட் தான் அத வச்சே எல்லா வேலயயும் முடிச்சுறலாம் அப்படின்னான், நா கேட்டேன் மனுசனோட மலத்த மனுசனே அள்ளுறானே, கழிவுத் தொட்டிக்குள்ள எறங்கி சுத்தம் பண்றானே அதுக்கு ஏதாவது டிஜிட்டல் இந்தியாவுல திட்டம் இருக்கான்னு, அதுக்கு அவன் இங்கிலிசுல ஏதோ திட்டுனான் எனக்குத்தான் ஒன்னும் புரியல, ஏங்க நா கேட்டதுல என்னங்க தப்பு.
நா எழுதுனத படிச்சுட்டு என்ன நீங்க ஆண்டி இந்தியன்னு நெனச்சுக்காதீங்க, நா வெறும் அன்னக்காவடி இந்தியன் தான்.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...