Monday 26 February 2018

திரு.கமலகாசன் அவர்களுக்கு

திரு.கமலகாசன் அவர்களுக்கு கவலையுடன் மணிவண்ணன் எழுதுவது.
நீங்கள் விரும்பியபடியே உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டீர்கள் அதுவும் திரு.அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து. கலாம் அவர்கள் பார்பனிய இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகையால் உங்களது அரசியல் பயணம் எப்படிப்பட்டது என்பது நீங்கள் சொல்லாமலேயே எங்களுக்கு நன்றாக விளங்குகிறது. உங்கள் நிறமும் காவிதான் என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம் கமலகாசன் அவர்களே.
இனி ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று வீரமாக முழங்கி உள்ளீர்கள். இதற்கு முன்னர் ஊழல்கள் நடைபெற்ற போதெல்லாம் உங்கள் வீரம் எங்கே போயிருந்தது, வாயை மூடிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எதனால், ஊழல் புரிந்தவர்கள் மீதிருந்த பாசமா இல்லை பயமா கமலகாசன் அவர்களே.
சாராயக்கடைகளை அரசே நடத்துவதாக வருத்தப்பட்டீர்கள் இப்போது மட்டுமல்ல பல ஆண்டுகளாகவே அப்படித்தான் நடக்கிறது. அரசின் மதுக்கொள்கைக்கு எதிராக உண்மையான மக்கள் கலைஞன் கோவன் அவர்கள் குரல் எழுப்பி அரசு அடக்குமுறைக்கு ஆளாகி சிறை சென்றபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் உங்கள் படப்பிடிப்பு வேலைகளில் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்தீர்களா கமலகாசன் அவர்களே.
நான் படிக்காதவன் அதனால் எனக்கு “நீட்”டைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள். இப்போது அரசியலுக்கு வந்து விட்டீர்கள் முதலமைச்சராகவும் ஆகப் போகிறீர்கள் இப்போதாவது சொல்லுங்கள் நீட்டை பற்றிய உங்கள் கருத்து என்ன, அப்படியே சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றியும் உங்கள் மனதில் உள்ளதை தெளிவாகச் சொல்லுங்கள் கமலகாசன் அவர்களே.
நாங்கள் கூடங்குளம்,கதிராமங்கலம்,நெடுவாசல்,காவிரி,முல்லைப்பெரியார்,மீனவர் போராட்டம்,விவசாயிகள் போராட்டம் என்று நாள் தோறும் போராடிக்கொண்டிருந்த போது நீங்கள் எங்கே போய் பதுங்கி இருந்தீர்கள் கமலகாசன் அவர்களே.
உரையாடினால் தீர்ந்து விடும் காவிரிச் சிக்கல் என்கிறீர்கள்,உரையாடலை முன்னெடுத்துச் சென்று யாருக்கும் தீங்கு இல்லாத வகையில் நல்ல தீர்வினைக் காட்ட வேண்டிய நடுவண் அரசு கள்ள மவுனம் சாதித்து நழுவல் போக்கை கடைபிடிக்கிறதே அதற்கும் ஏதாவது சொல்லுங்கள் கமலகாசன் அவர்களே.
சாதி மதத்தை வைத்து விளையாடுவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறீர்கள், விளையாடுவது யார் என்று தெளிவாகச் சொல்லுங்கள். தேவர் மகன்,விருமாண்டி,சபாஷ் நாயுடு என்று சாதியை வைத்து விளையாடும் உங்களுக்கு இதைப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது கமலகாசன் அவர்களே.
தமிழ்நாட்டின் சிஸ்டம் பற்றி மட்டும் தான் எப்போதும் பேசுவீர்களா, இந்தியாவின் சிஸ்டம் பற்றி எதுவும் பேச மாட்டீர்களா, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, கருப்புப்பண ஒழிப்பு, வங்கி மோசடி இவைகளை பற்றியும் கொஞ்சம் வாய் திறவுங்கள் கமலகாசன் அவர்களே.
உங்கள் வழிகாட்டி காமராசரா,காந்தியா,பெரியாரா,அம்பேத்கரா என்ற கேள்விக்கு எல்லோரையும் பிடிக்கும் என்று திருவாய் மலர்ந்துள்ளீர்கள், பெரியாரும் அம்பேத்கரும் ஏறக்குறைய ஒரே திசையில் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்தவர்கள். ஆனால் காந்தி இவர்களிடமிருந்து முற்றிலும் விலகி எதிர்த் திசையில் பயணித்தவர். ராமபக்தர் காந்தி, ராமர் படத்தை எரித்தவர் பெரியார். தனித்தொகுதி இரட்டை வாக்குரிமையை ஆதரித்தவர் அம்பேத்கர், எதிர்த்தவர் காந்தி. பிறகு எப்படி உங்களுக்கு எல்லோரையும் பிடிக்கிறது. இதில் உங்கள் ஞான குரு பாரதியை விட்டு விட்டீர்கள். எல்லோரையும் எனக்கு பிடிக்கும் என்பவனும், எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என்பவனும் காரியவாதிகளே. நீங்களும் காரியவாதி தான் கமலகாசன் அவர்களே.
உங்கள் கொள்கை எதுவெனக் கேட்டால் கொள்கையை தெளிவாகச் சொல்ல வேண்டும் அதை விடுத்து இதுவரை செய்யாமல் விட்டதைச் செய்வதுதான் கொள்கை என்கிறீர்கள். எங்களை குழப்புவது ஒன்றே தான் உங்கள் கொள்கையா. விளங்க முடியாக் கவிதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் பேச்சும் தான். உங்கள் கொள்கையையே தெளிவாகச் சொல்ல முடியாத நீங்களா கட்சியை நடத்தி ஆட்சி செய்யப் போகிறீர்கள் கமலகாசன் அவர்களே.
வலது சாரியா இடது சாரியா என்று கேட்டதற்கு நான் நடுநிலையாளன் என்கிறீர்கள். நடுநிலையாளர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள், இவர்கள் சாலைகளில் எந்த ஓரத்திலும் செல்லாமல் நடுவிலேயே செல்பவர்களைப் போன்றவர்கள், திடீரென்று ஏதாவது ஒரு பக்கம் திரும்பி பெரும் விபத்தையும் பேரிழப்பையும் உண்டாக்குபவர்கள். நீங்களும் மிகவும் ஆபத்தானவர்தான் கமலகாசன் அவர்களே.
நீங்கள் உங்களை நடுநிலையாளர் என்று சொல்லிக்கொண்டாலும் உங்களது கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள, இணைந்த வலது கரங்களைப் பார்க்கும்போது உங்களது அரசியல் கொள்கை வலதுசாரிக் கொள்கையாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது கமலகாசன் அவர்களே.
சொகுசான வாழ்கையை தந்த இம்மக்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கட்சியை தொடங்கியதாகச் சொல்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு வாக்களித்து விட்டு ஏன் வாக்களித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். நீங்கள் எந்த குற்ற உணர்ச்சியும் அடையத் தேவை இல்லை உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது இளம் வயது நடிகைகளுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதற்கு, நீங்கள் இந்த கலைச்சேவையை தொடர்ந்து செய்து ஆஸ்கார் விருது பெற முயலுங்கள். இதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை கமலகாசன் அவர்களே.
க.ம.மணிவண்ணன்
23/02/2018

Wednesday 21 February 2018

இது பெரியாரின் மண் தான்

இது பெரியாரின் மண் தான்.
1. காந்தி கொலையுண்டு இறந்தபோது, கொலை செய்தவன் கோட்சே என்ற பார்ப்பனன் என்ற காரணத்தால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கலவரமும் பார்ப்பனர்களின் மீது தாக்குதலும் நடந்தது. அவ்வாறு தமிழகத்திலும் நடைபெறாமல் தவிர்ப்பதற்காக யார் சொன்னால் தமிழகம் கேட்குமோ அவரை வானொலியில் பேசச் செய்தார்கள்,அவரும் பேசினார் அவர்தான் பெரியார்.அவரது பேச்சினால் தமிழகத்தில் எந்த கலவரமும் நடைபெறாமல் தடுக்கப்பட்டது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
2. குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வர முயற்சி செய்த இராஜாஜி பெரியாருக்கு பயந்தே அத்திட்டத்தை கைவிட்டார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
3. எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டாலும் பெரியார் எதிர்த்த இந்தியை இன்று வரை தமிழகம் எதிர்க்கவே செய்கிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
4. மண்டல் கமிஷன் பரிந்துரையை திரு.வி.பி.சிங் செயற்படுத்த முனைந்தபோது அதை எதிர்த்து வடமாநில உயர்சாதி மாணவர்கள் போராட்டம் செய்தார்கள்,ஆனால் அதுபோன்ற நிகழ்வு தமிழகத்தில் இல்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
5. நீட் தேர்வை மற்ற மாநிலங்கள் ஏற்ற போதிலும் தமிழகம் மட்டும் எதிர்த்து போராடுகிறது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
6. ஒரு சாமியாருக்கு தண்டனை வழங்கப்பட்டதற்காக மிகப்பெரிய கலவரமே வெடித்தது வட மாநிலத்தில் ஆனால் இங்கு சங்கராச்சாரியே கைது செய்யப்பட்டாலும் யாரும் கண்டு கொள்வதில்லை – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
7. கலவரத்தை உண்டாக்க மத வெறியர்கள் ஒவ்வொரு முறை முயற்சி செய்யும்போதும் அவர்களது திட்டத்தை நீர்த்துப்போக செய்து விடுகிறார்கள் தமிழக மக்கள் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
8. சாதிப் பெயரை தன் பெயரோடு இணைப்பதை தவிர்த்து தன் பெயரை மட்டுமே அடையாளப்படுத்துகிறார்கள் தமிழக மக்கள் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
9. சாதி மத கலவரங்கள் சிறு நெருப்பாக எரிய ஆரம்பிக்கும்போதே அதை அணைக்கின்ற நீராக இங்கு பெரியாரியம் இருக்கின்றது – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
10. நாட்டை ஆளுகின்ற, 19 மாநிலங்களில் ஆட்சி செய்கிற ஒரு தேசிய மதவாத கட்சியின் தேசியச் செயலாளர் சாரண சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் வெறும் 46 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோற்றுப் போனார்,சட்ட மன்றத் தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர் நோட்டாவைக் காட்டிலும் குறைவாக வெறும் 1368 வாக்குகள் மட்டுமே பெற்றுத் தோல்வி அடைந்தார் – ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
11. இறந்து 40 ஆண்டுகள் ஆன பிறகும் ஏற்றுக்கொண்டோருக்கு பெரும் உற்சாகத்தையும் எதிரிகளுக்கு பெரும் அச்சத்தையும் தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருக்கிறார் பெரியார் - ஆகையினால் இது பெரியாரின் மண் தான்.
க.ம.மணிவண்ணன்
15/02/2018

Friday 9 February 2018

நான் மதுரை மீனாட்சி அம்மன் பேசுகிறேன்.

நான் மதுரை மீனாட்சி அம்மன் பேசுகிறேன்.
அம்பாள் எந்த காலத்துல பேசுனான்னு எங்கிட்டேயே கேக்காதீங்க,கேள்வி கேக்குறது சுலபம் பதில் சொல்றது தான் ரொம்ப கஷ்டம். எனக்கு சக்தி இருந்தா இப்படி தீப்பிடிச்சு எரியுமான்னு கேக்கிறீங்க சரியான கேள்வி தான் கேக்கிறீங்க ஆனா தப்பான ஆளுங்க கிட்ட கேக்கிறீங்க. நா எப்பாவது எனக்கு சக்தி இருக்குன்னு சொன்னேனா, உழைக்காம ஊரான் காசுலேயே உடம்ப வளர்க்குற ஒரு கூட்டம் அவன் பொழைப்பு நடத்துறதுக்கு ஏதோ கதைய சொல்லி வச்சிருக்கான் அத நம்பி நாட்ட ஆண்ட அரசருங்க எல்லாம் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணுவோம்னு இல்லாம கோவிலா கட்டி வச்சிருக்காங்க.
நா வெறும் கல்லுதான், நா மட்டுமில்ல என்ன மாதிரி இருக்க எல்லாமே வெறும் கல்லுதான், நாங்களும் துணி துவைக்கிற கல்லுமாதிரியும் மாவாட்டுற கல்லுமாதிரியும் தான், அதுகளாவது துணி துவைக்கிறதுக்கும் மாவாட்டுறதுக்கும் பயன்படுது, நாங்க ஒன்னுத்துக்கும் லாயக்கு இல்லமா வெட்டியா உக்காந்து இருக்கோம்.எங்களுக்கு சக்தி இருந்திருந்தா, எங்களுக்கு எல்லாம் சக்தி இருக்குன்னு சொன்ன தேவநாத பாப்பான் கருவறைக்குள்ளே அந்த அசிங்கத்தப் பண்ணி இருப்பானா, சங்கர்ராமன கோவிலுக்குள்ளே வச்சு கொல பண்ணியிருப்பாங்களா, நாங்க தான் அத தடுக்காம இருந்திருப்பமா.
எனக்கு கோபம் வந்ததால தான் தீப்புடிச்சுச்சுன்னு சொல்றாங்க, கல்லுக்கு எப்படிங்க கோவம் வரும் அப்படியே வந்தாலும் அங்க இருக்க கடைகள ஏங்க எரிக்கணும், எல்லோரையும் ஏமாத்திக்கிட்டு ஒரு கூட்டம் கருவறைக்குள்ள நிக்கிதே அதுங்க மேலேயில்ல கோவம் வரணும்.வள்ளலாரையும் நந்தனாரையும் கண்ணு முன்னாலேயே கொலை செஞ்சப்ப வராத கோவம் இனிமேயா வரப்போகுது.
மத்த மதத்துக்காரங்களும் கடை வச்சுருக்கனாலதான் கடையெல்லாம் எரிஞ்சு போச்சுன்னு சொல்லுறாங்க ஒருத்தங்க, அது அவங்களோட தனிப்பட்ட கருத்து எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல, மத்த மதத்துக்காரங்களும் கடை வச்சிருக்கதால உங்க ஆளுங்க வயிறு தானே எரியும் எப்படிங்க கடை எரியும்.
அறநிலையத்துறையோட நிர்வாகம் சரியில்ல அதுனால தான் இதுமாதிரியெல்லாம் நடக்குது அதுனாலே இனிமே நாங்களே பாத்துக்குறோம் எங்க கிட்டயே கோவில் நிர்வாகத்த கொடுத்துருங்க அப்படின்னு ஒருத்தரு சொல்றாரு நாங்கன்னு அவரு சொல்றது உடம்புல குறுக்க ஒரு நூலு போட்டுருப்பாங்கள்ள அவங்கள சொல்றாருன்னு நெனைக்கிறேன், காலங்காலமா கோவில் சொத்தையும் பணத்தையும் சுரண்டி தொப்பைய வளர்த்தது போதாதா இனிமேலயும் சுரண்டிப் பொழைக்கணுமா, இது மீனாட்சியம்மன் ஆன என்னோட தனிப்பட்ட கருத்து இதுக்கும் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.
மறுபடியும் சொல்றேன் நா வெறும் கல்லு தான் கடையில புடிச்ச தீ கருவறையில புடிச்சிருந்தா நானும் எரிஞ்சு போயிருப்பேன் நீங்களாவது அய்யோ அம்மான்னு கத்துவீங்க என்னாலே அது கூட முடியாது கருவறையில நிக்கிறவனுக எல்லாம் என்னைய அம்போன்னு விட்டுட்டு துண்டக்காணோம் துணியக்காணோம்னு தொப்பைய தூக்கிட்டு ஓடிப் போயிருப்பானுக. அதுனாலதான் சொல்றேன் எனக்கு சக்தி இருக்கு நான் உங்கள காப்பாத்துவேன் அப்படின்னு என்னைய நம்பிக்கிட்டு இருக்காம உங்க அறிவை பயன்படுத்தி முன்னேறுற வழிய பாருங்க அவ்வளவு தான் நா சொல்லுவேன் அதுக்கு மேல உங்க விருப்பம்.

Tuesday 6 February 2018

தொலைந்துபோன அறம் - எங்கே போகிறோம் நாம்

தொலைந்துபோன அறம் - எங்கே போகிறோம் நாம்

ஊழல் என்றால் அரசியல்வாதிகள் என்பதிலிருந்து தொடங்கி பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் வரை வந்து இப்போது எல்லோருக்கும் பொதுமை என்றாகி விட்டது. பணம் படைத்தவர்கள் மட்டுமே வாழ்வாங்கு வாழ முடியும் என்றதொரு காலச்சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நாம்.
ஊழலின் ஊற்றுக்கண் குடும்பத்தில் தான் இருக்கிறது. பெரியவர்கள் சிறியவர்களிடம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் ‘நல்லாப் படிக்கணும், கை நிறைய சம்பாதிக்கணும்’ என்பது.
நல்லாப் படிக்கணும் என்பது அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுகிறதே தவிர நல்லதைப் படிக்க வேண்டும் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை அதாவது நல்லொழுக்கம் நன்னடத்தை மனிதநேயம் என்ற கருத்தில் சொல்லப்படுவது இல்லை. கை நிறைய சம்பாதிக்கணும் என்பது அதிகமாக பொருள் ஈட்டவேண்டும் என்ற பொருளில் சொல்லப்படுகிறதே தவிர நல்வழியில் ஈட்ட வேண்டும் என்ற பொருளில் இல்லை.
இங்கு குழந்தைகளுக்கு அறம் சொல்லித் தரப்படுவது இல்லை மாறாக பொருள் மட்டுமே சொல்லித் தரப்படுகிறது. அதுவும் அய்யன் வள்ளுவன் சொல்லிய அதிகாரங்களின் படி அல்ல, தனி மனித அதிகாரங்களின் படியே. அறத்தை மீறிய பொருள் எப்போதும் ஊழல் நிறைந்ததாகவே இருக்கும்.
பல இலட்ச ரூபாய் செலவு செய்து கல்வி கற்று, பல இலட்ச ரூபாய் கையூட்டாகக் கொடுத்து பணியில் சேரும் ஒருவன் எவ்வாறு நல்வழியில் பொருள் ஈட்டுவான்.
பல்கலைக்கழக துணை வேந்தரின் ஊழல் பற்றிய செய்தி ஊடகங்களில் உலா வருகிறது, இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அனைவருமே நன்றாகப் படித்தவர்கள்தான், ஆனால் நல்லதைப் படித்தவர்கள் இல்லை.கை நிறைய சம்பாதிப்பவர்கள் தான், ஆனால் நல்வழியில் சம்பாதிக்கிறவர்கள் இல்லை.
துணை வேந்தர் ஆவதற்கு அவர் எவ்வளவு கையூட்டு கொடுத்தாரோ தெரியவில்லை,முன்பு கொடுத்ததை இப்போது மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்கிறார். தற்போது இவரிடம் கொடுப்பவர் பிற்காலத்தில் மற்றவர்களிடமிருந்து பெற்றுக்கொள்வார் இது ஒரு சங்கிலித்தொடர் நிகழ்வு.
உதவிப் பேராசிரியர் நியமனத்திற்காக ஒருவரிடமிருந்து முப்பது இலட்சம் கையூட்டாக பெற்றுள்ளார். துணை வேந்தராக பதவியேற்று இரண்டு வருடங்களில் அவர் 82 பேரை பல்வேறு பணியிடங்களுக்கு பணி நியமனம் செய்துள்ளார். அப்படியானால் அவர் பெற்ற கையூட்டு எவ்வளவு. இவர் ஊழல்வாதி என்றால் பணி நியமனம் பெற்றவர்களும் ஊழல்வாதிகள் தானே. இவர்களுக்கு எல்லாம் கிடைக்கப்போகும் தண்டனை தான் என்ன. பணம் ஒன்று மட்டுமே போதுமானதா அனைத்திற்கும். தகுதி திறமை எல்லாம் தேவை அற்றதா.
இது ஒன்றும் முதல் நிகழ்வு இல்லை, இது போன்ற முறை கேடுகள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன இதற்கு முடிவுதான் என்ன. அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி என அமைதியாக இருந்துவிட வேண்டியது தானா.
பொருளாதார வசதியற்று, அல்லல்பட்டு கல்வி கற்று, அரசு வேலை எனும் கனவோடு காத்திருக்கும் இளைஞர்களுக்கு இந்த சமுதாயம் சொல்லும் செய்திதான் என்ன, பொருள் நிறைந்தவர்களுக்கு மட்டுமே வாழ்க்கை பொருள் நிறைந்ததாய் இருக்கும் பொருளற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்ற எதிர்மறை சிந்தனையை மட்டும் தானா.
குழந்தைகளுக்கு நாம் அறத்தை மட்டும் கற்றுத்தருவோம், பொருள் செய்வது பற்றி அவர்கள் கற்றுக்கொள்வார்கள். அறத்தை மீறிய பொருளும் காமமும் அழிவை நோக்கியே இட்டுச்செல்லும்.
க.ம.மணிவண்ணன்
06/02/2018

Saturday 3 February 2018

சந்திர கிரகணம் – அறிவியலும் மூட நம்பிக்கையும்

சந்திர கிரகணம் – அறிவியலும் மூட நம்பிக்கையும்
(i) இன்று வானில் தோன்றிய நிலவுக்கு சில சிறப்புகள் உண்டு.
1) ப்ளூ மூன் – ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக வரக்கூடிய முழு நிலவுக்கு ப்ளூ மூன் என்று பெயர், இது நீல நிறமாகத் தோன்றாது. இந்த ஜனவரி மாதத்தில் 1 ஆம் தேதி முதல் முறையும் இன்று 31 ஆம் தேதி இரண்டாவது முறையாகவும் முழு நிலவு வந்துள்ளது.
2) சூப்பர் மூன் – நிலவானது நீள் வட்டப்பாதையில் சுற்றி வருவதால் மாதத்தில் ஒரு நாள் புவியிலிருந்து வெகு தூரத்திலும்,ஒரு நாள் வெகு அருகிலும் இருக்கும்,இன்று புவிக்கு அருகில் நிலவு வருவதால் வழக்கத்தை விட 15 விழுக்காடு பெரியதாகவும் 30 விழுக்காடு வெளிச்சமாகவும் இருக்கும். இதனால் சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.
3) இன்று சந்திர கிரகணம் ஆகும்.
இந்த மூன்று நிகழ்வும் சேர்ந்து வருவது 152 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தான் நிகழ்ந்துள்ளது என்றும் இனி 2028 ஆம் ஆண்டு தான் நிகழும் என்றும் கூறப்படுகிறது.
(ii)சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது?
சூரியன்,பூமி,சந்திரன் ஒரே வரிசையில் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை அவ்வாறு நேர்கோட்டில் இருக்கும்போதே சந்திர கிரகணம் ஏற்படுகிறது.சூரியனின் ஒளியானது பூமியில் விழும்போது பூமியின் நிழல் நிலவின் மீது படிவதால் நிலவானது ஒளியிழந்து இருளாக காணப்படுகிறது.சந்திர கிரகணம் முழு நிலவு நாள் அன்றே தோன்றும்,ஆனால் எல்லா முழு நிலவு நாட்களிலும் தோன்றாது.
(iii)செந்நிறமாகத் தோன்றுவது ஏன்?
முழுக் கிரகணத்தின் போது நிலவு செந்நிறமாக காட்சி அளிக்கும்.சூரிய ஒளியானது பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள தூசுக்களால் ஒளிச் சிதறல் அடைகிறது,ஒளிச் சிதறல் அடையும் போது நீலம்,பச்சை போன்ற நிறங்கள் காற்று மண்டலத்தால் கவரப்படுகிறது,ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் மட்டும் வளைந்து சென்று நிலவின் மீது படிகிறது,இதுவே செந்நிறமாக தோன்றுவதற்குக் காரணம்.
(iv)கிரகணம் பற்றிய மூட நம்பிக்கைகள்
ராகு கேது ஆகிய பாம்புகள் நிலவை விழுங்கி விடுவதாக மூட நம்பிக்கை நிறைந்த கதைகள் சொல்லப்படுகிறது, கிரகண நேரத்தில் நீர் அருந்தக் கூடாது, உணவு உண்ணக்கூடாது,கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் வரக்கூடாது போன்றவை முழுக்க முழுக்க மூட நம்பிக்கையே. கோவில்கள் கூட கிரகண நேரத்தில் மூடப்படுகின்றன.
அறிவியல் அறிவோம்,மூட நம்பிக்கை தவிர்ப்போம்.

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...