Sunday 28 January 2018

சங்கர மடத்திற்குச் சில கேள்விகள்

சங்கர மடத்திற்குச் சில கேள்விகள்
1) அண்மையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தனி        மேடை அமைத்து சங்கராச்சாரியை அமர வைத்தது ஏன்? எல்லோரயும் விட, பார்ப்பானாகவே இருந்தாலும் அவர்களையும் விட சங்கராச்சாரிகள் உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டுவதற்காகவா?
2) தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது, தமிழ் நீஷ பாஷை என்ற சங்கராச்சாரிகளுடைய எண்ணத்தின் வெளிப்பாடா?
3) கடவுள் வாழ்த்து பாடப்படும்போது சங்கராச்சாரிகள் எழுந்து நிற்கும் வழக்கமில்லை – தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் கடவுள் வாழ்த்துக்கும் வேறுபாடு அறியாதா சங்கர மடம்?
4) தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் மரபு இல்லை – தண்டத்தை மடத்திலேயே போட்டு விட்டு நேபாளம் சென்றவரை திரும்ப மடத்திற்கு அழைத்து வந்தது என்ன மரபு? ஆடிட்டர் சங்கரராமன் கொலை எந்த மரபின் கீழ் வருகிறது? இன்னும் சில கேள்விகள் உள்ளது பலான விடயத்தைப் பற்றி பொது வெளியில் கேட்பதற்கு நான் நேசிக்கும் என் தமிழ் மரபு தடுக்கிறது.
5) தமிழ்வாழ்த்துப் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாமல் தியானம் செய்யும் சங்கராச்சாரி, தியானம் செய்ய வேண்டிய நேரத்தில் என்ன செய்து கொண்டு இருந்தார்?
6) நாட்டுப்பண் பாடப்படும்போது மட்டும் எழுந்து நிற்பது ஏன்? இந்து என்ற மதமும் இந்தியா என்ற நாடும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்படாமல் போயிருந்தால், பிழைப்பதற்கு வழி இல்லாமல் போயிருக்குமே என்ற எச்ச்சரிக்கை உணர்வா?
7) வைரமுத்து ஆண்டாள் நிகழ்வுக்கு எதிர் வினை ஆற்றும் பொருட்டு தமிழை அவமானப்படுத்துவதற்காக சங்கர மடமும் எச்.ராஜாவும் சேர்ந்து புரிந்திட்ட பார்ப்பனக் கூட்டு அரசியலா?
8) தமிழை அவமதித்ததற்காகச் சங்கராச்சாரிகளும் எச்.ராஜாவும் எப்போது மன்னிப்பு கேட்கப் போகிறீர்கள்?
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

Tuesday 23 January 2018

ஒரு சாமானியனின் உள்ளக்குமுறல்

ஒரு சாமானியனின் உள்ளக்குமுறல்.

தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்யும் சாமானியர்களில் நானும் ஒருவன், மாதந்தோறும் பேருந்திற்காக தொள்ளாயிரம் ரூபாய் செலவு செய்யும் நான் இனிமேல் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் செலவழிக்க வேண்டும். நிதி நெருக்கடியை சரி செய்வதற்காக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக கூறுகிறீர்கள், கூடுதல் செலவின் காரணமாக ஏற்படப் போகும் எனது நிதி நெருக்கடியை யார் சரி செய்வது. எனக்கு ஏற்படப் போகும் கூடுதல் செலவைச் சரிக்கட்ட நான் வேலை பார்க்கும் இடத்தில் சம்பளத்தை உயர்த்தப் போகிறார்களா என்ன.
கனத்த இதயத்தோடு கட்டணத்தை உயர்த்துவதாகச் சொல்லும் நீங்கள் எந்த இதயத்தோடு உங்கள் சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டீர்கள். மக்களின் பொருளாதாரம் உயர்ந்து விட்டது அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள் என கேலி செய்கிறீர்கள். ஆமாம் கோடிக்கணக்கான ரூபாயை வங்கியில் வைத்துக்கொண்டு பொழுது போக்கிற்காக பேருந்தில் பயணம் செய்கிறோம் நாங்கள்.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டால் நிதி நெருக்கடியை சரி செய்து விடலாம் என்பது என்ன விதமான புரிதல் என்பது தான் புரியவில்லை. பயணிகள் அரசுப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய வேண்டுமல்லவா, நீங்கள் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பே தனியார் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் ஆனால் அரசுப்பேருந்துகள் காலி இருக்கைகளுடனே சென்று வரும். அரசுப்பேருந்துகள் எல்லாம் வருவாய் இழப்புடன் இயங்கும்போது தனியார் பேருந்துகள் மட்டும் எப்படி நிறை வருவாயுடன் இயங்குகின்றன.
காலாவதியான, சுத்தமற்ற, பேரிரைச்சல் எழுப்புகின்ற, நல்ல இருக்கைகளற்ற, மழை பெய்தால் ஒழுகுகின்ற, போகும் வழியில் பாதியிலே நின்று விடுகிற, குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேராத பேருந்துகளை வைத்துக்கொண்டு, மேலே கூறிய எல்லாக் குறைகளையும் சரி செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தி விடுவதால் நிதி நெருக்கடியை சரி செய்து விட முடியுமா.
பேருந்துகளின் பராமரிப்பு சரியில்லை, பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதில்லை, போதிய பழுது நீக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாமை, தேவையான உதிரி பாகங்கள் இல்லாமை என சரி செய்ய வேண்டியவை எவ்வளோவோ உள்ளது இதை எதையுமோ சரி செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தினால் பயணிகள் எப்படி அரசுப்பேருந்தில் ஏறிப் பயணம் செய்வார்கள் பிறகு எப்படி அதிக வருவாய் வரும்.
நிதி நெருக்கடி என காரணம் சொல்லி ஏன் எங்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள்,பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்யும் நாங்கள் இதற்கு எப்படி பொறுப்பாவோம், இந்த நிதி நெருக்கடிக்கு காரணமான நீங்கள் இப்படிப்பட்ட சூழலில் உங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே.
அரசு நிர்வாகத்தில் பங்கு பெறும் அனைவரின் சம்பளத்தையும் உயர்த்துகின்ற நீங்கள் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு எதை உயர்த்தியுள்ளீர்கள். எங்கள் வாழ்கையையும் பொருளாதரத்தையும் உயர்த்தியுள்ளீர்களா இல்லையே மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளீர்கள்,வரியை உயர்த்தியுள்ளீர்கள்,எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளீர்கள்,தற்போது பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் சுமையை சாமானியர்களின் தலையில் தான் ஏற்றி வைக்க வேண்டுமா. ஒருவேளை நிதி நெருக்கடி சரியாகி பேருந்துகள் எல்லாம் அதிக வருவாய் ஈட்டும் போது மறக்காமல் எனக்குச் சேர வேண்டிய பங்கை தந்து விடுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்


நித்தியானந்த மட சீடர்களுக்கு

நித்தியானந்த மட சீடர்களுக்கு மணிவண்ணன் எழுதுவது,
வைரமுத்து அவர்களுக்கு எதிராக நீங்கள் பேசிய காணொளி கண்டேன், அதைப் பார்த்த பிறகு உங்கள் அறியாமையின் மீதும் அறிவீனத்தின் மீதும் பரிதாபமும் உங்கள் மதங்களின் மீது கோபமும் தான் வருகிறது.
உங்கள் பேச்சில் தான் எவ்வளவு கருணை, ஒவ்வொரு வார்த்தையிலும் அன்பு பெருக்கடுத்து ஓடுகிறது.
வைரமுத்து அவர்களின் ஆண்டாள் பற்றிய கட்டுரையை நானும் படித்தேன். அதில் அவர் ஆண்டாளைப் பற்றி பெருமையாகவே எழுதியுள்ளார். அதில் ஆண்டாளைப் பற்றிய ஒரு ஆய்வாளாரின் கருத்தைக் குறிப்பிட்டுள்ளார் அவ்வளவே.
அந்தக் கருத்து தவறு எனில் நீங்கள் சரியான கருத்தை நிறுவ வேண்டும். அந்த கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அவர் கருத்தோடுதான் நீங்கள் மோத வேண்டும் அதை விடுத்து அவரை எவ்வளவு தரக் குறைவாக பேசி இருக்கிறீர்கள், உங்கள் பேச்சில் எவ்வளவு வன்மம் எவ்வளவு ஆபாசம், ஒரு தனி மனிதனின் உறவுகளை கொச்சைப்படுத்தி இருக்கிறீர்கள். இதுதான் அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் உங்கள் மதங்கள் சொல்லித் தந்ததா.
நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம், உங்கள் மதங்கள் எதைப் பேசுகிறதோ எதை எழுதுகிறதோ எதைச் செய்கிறதோ அதையே தான் நீங்களும் செய்துள்ளீர்கள்.
அன்பை மட்டுமே போதிப்பதாகச் சொல்லும் உங்கள் எல்லா மதங்களும் தங்களுக்கு எதிராக விமர்சனம் வரும்போதும் கருத்துக்கள் வரும்போதும் கருத்துக்களோடு மோதாமல் கருத்துச் சொன்னவர்களோடுதான் மோதி இருக்கின்றன, மிரட்டி இருக்கின்றன, அடி பணியாத போது எங்கே நாம் தோற்று விடுமோவோ எனப் பயந்து கொலை செய்திருக்கின்றன. இதுதான் வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது.
ஏனென்றால் உங்கள் மதங்கள் வெற்று நம்பிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு உணர்சிகளால் கட்டப்பட்டவை. அவைகளால் விவாதிக்கவோ தங்களது கருத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளவோ தங்களைப் புதுப்பித்துக்கொள்ளவோ முடியாது.
உலகம் தட்டை எனச் சொன்ன உங்கள் மதங்கள் உருண்டை எனச் சொன்ன கலிலியோவின் அறிவியலைக் கல்லால் அடித்துக் காயப்படுத்தியது. அறிவியலாளர் புருனோவை ரோம் நகர வீதியில் வைத்து உயிரோடு கொளுத்தியது.
வங்காள தேசத்தில் முற்போக்கு எழுத்தாளர்களைக் கொன்றதும் சல்மான் ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் தலைகளுக்கு விலை வைத்ததும் உங்கள் மதங்கள் தானே. சமணர்களையும் பௌத்தர்களையும் கழுவேற்றிக் கொன்றதும், எழுத்தாளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோரைக் கொன்றதும் உங்கள் மதங்கள் தானே.
ஆனால் நாத்திகம் என்பது அப்படி ஆனது அல்ல, அது மனித நேயத்துடனான அறிவியல் சிந்தனை. அதனால் தான் அது தன்னுடைய கருத்து தவறு என்றால் திருத்திக்கொள்ளவும் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளவும் செய்கிறது. மதங்கள்தான் மனிதனைக் கொன்று இருக்கின்றன, ஆனால் நாத்திகம் எந்த மனிதனையும் கொன்றதாக வரலாற்றின் எந்தப் பக்கங்களிலும் பதிவே இல்லை.
சாக்ரடீஸ் முதல் புத்தன் வரை, காரல் மார்க்ஸ் முதல் பெரியார் வரை, இங்கர்சால் முதல் பெட்ரன்ட் ரஸ்ஸல் வரை, அனைவரின் பேச்சிலும் எழுத்திலும் செயலிலும் கடவுள் மறுப்பை விஞ்சிய மனித நேயமே இருக்கிறது. நாத்திகர்களே ஆகச் சிறந்த சமூகப் போராளிகளாகவும் இருந்து வருகிறார்கள். உங்கள் மதங்கள் கடவுளைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கும்போது நாத்திகம் தான் மனிதர்களைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது.
உங்களை எல்லாம் நான் நாத்திகர்களாக மாறச் சொல்லவில்லை. ஏனென்றால் நாத்திகனாக மாறுவதும் வாழுவதும் எவ்வளவு கடினம் என்பது எனக்குத் தெரியும். எனவே குறைந்த பட்சம் மதங்களை விடுத்து மனிதர்களாக மாறுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

Monday 15 January 2018

இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்

இனிய தமிழர் திருநாள் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள்
கடவுளென்னும் கயமை போக
பொங்கலோ பொங்கல்
மதமென்னும் மருள் நீங்க
பொங்கலோ பொங்கல்
சாதியென்னும் சதி ஒழிய
பொங்கலோ பொங்கல்
தீண்டாமைத் தீங்கு ஓட
பொங்கலோ பொங்கல்
மூடநம்பிக்கை முடை அகல
பொங்கலோ பொங்கல்
பெண்விடுதலை பெருமை பொங்க
பொங்கலோ பொங்கல்
பொதுவுடைமை பொருள் விளங்க
பொங்கலோ பொங்கல்
சமத்துவம் சரியாய்ச் சேர
பொங்கலோ பொங்கல்
இல்லாமை இல்லாது விலக
பொங்கலோ பொங்கல்
தரணியெங்கும் தமிழ் வாழ
பொங்கலோ பொங்கல்
என்றும் அன்புடன்,
க.ம.மணிவண்ணன்

பிரபல ரவுடி எச்.ராஜாவுக்கு

பிரபல ரவுடி எச்.ராஜாவுக்கு மணிவண்ணன் எழுதுவது,
வேட்டிய மடிச்சுக்கட்டுனா நானும் ரவுடிதான்னு சொல்லி இருந்தீங்க, மடிச்சுக் கட்டலைனாலும் நீங்கள்லாம் ரவுடிதான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். சாணக்கியன் காலத்துல இருந்து கோட்சே,சங்கராச்சாரி வரை அதைத் தானே செய்யுறீங்க. கொலையையும் செஞ்சுப்புட்டு இது சாணக்கியத்தனம், கீதையில கிருஷ்ணன் அப்படித்தான் சொல்லியிருக்கான்னு வெக்கமில்லாம வேற சொல்லிக்கிறீங்க.
நீங்கள் ஒவ்வொரு தடவை பேசும்போதும், ஆய்வுகளையும் வரலாறுகளையும் மேற்கோள் காட்டிச் சொல்லப்படும் கருத்துக்களோடு மோதாமல், கருத்துச் சொன்னவர தடித்த வார்த்தைகள்ள தரைக்குறைவாகவும் வன்முறைய தூண்டுகிற விதமாகவும் பேசுறீங்க. அது பெரியார்ல ஆரம்பிச்சு இப்போ வைரமுத்துல வந்து நிக்குது. ஒவ்வொரு முறையும் நாங்க உங்க கருத்தோடதான் மோதியிருக்கோமே தவிர உங்களோட இல்ல, அதுக்குக் காரணம் பெரியார் எங்களுக்குச் சொல்லித்தந்த பகுத்தறிவுதான்.
ஆனால் உங்களுக்குப் போதிக்கப்பட்டதும் நீங்கள் போதிப்பதும் அடிக்கணும்,குத்தனும்,கொல்லணும் என்கிற வன்முறை தான். உங்களோடு முரண்படுகிறவர்களை எல்லாம் கொன்று ஒழிப்பது தான் உங்கள் வழக்கமாக இருந்து வருகிறது. சமணர்களையும் பவுத்தர்களையும் கழுவுலேற்றிக் கொன்றது தானே உங்கள் வரலாறு.
தேவதாசி என்பது உங்கள் மதமும் உங்கள் முன்னோர்களும் தெய்வீகம் என்று கொண்டாடியது தானே. தேவதாசி முறையை ஒழிக்க டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் போராடியபோது அதை ஒழிக்கக் கூடாது, அது புண்ணியம் தேவதாசிகள் சொர்க்கத்திற்குச் செல்வார்கள் என்று வாதாடியவர் தானே உங்கள் சத்யமூர்த்தி அய்யர். தேவதாசி முறை உன்னதமானது உயர்வானது என்று உங்கள் சொர்ணமால்யா பேசியது நினைவில் இல்லையா. இப்போது மட்டுமென்ன அந்த வார்த்தையைக் கேட்டு அப்படி ஒரு கோபம்.
இவ்வளவு காலமாய் நீங்கள் பற்ற வைத்த நெருப்பு இப்போது புகைய ஆரம்பித்திருக்கிறது. போராட்டம் நடத்த வீதிக்கு வந்து இருக்கிறீர்கள் கூட்டத்தோடு, இதுவரை எந்தப் போராட்டத்திலுமே கலந்து கொள்ளாத நீங்கள்.
மறுபடியும் ஆரம்பமாயிருக்கிறது ஆரிய திராவிடப் போர். ஆரியர்கள் வென்ற காலமெல்லாம் மலையேறிப் போய் விட்டது. இது எங்கள் காலம் திராவிடர்களின் காலம் அதை நினைவில் கொள்ளுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

திரு.வைரமுத்து அவர்களுக்கு

திரு.வைரமுத்து அவர்களுக்கு வருத்தமுடன் மணிவண்ணன் எழுதுவது,
ஆரியம் திராவிடம் ஒன்றாய்க் கலக்கட்டுமே என்று எழுதினீர்கள். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஆரியமும் திராவிடமும் எப்போதும் ஒன்றாய்க் கலக்கவே கலக்காது என்பது.
நீங்கள் வேண்டுமானால் விளைந்த பயிர் வளைந்து நிற்பதைப் பார்த்தும்,நட்டு வைத்த வேலில் பொட்டு வைத்ததைப் போல் நிமிர்ந்து நிற்பதைப்பார்த்தும் புளகாங்கிதம் அடையலாம்.ஆனால், அவர்கள் உங்கள் தமிழையோ, சொல்லாட்சியையோ,படைப்புகளையோ தேசிய விருதுகளையோ கண்டு மகிழப்போவது இல்லை. இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சூத்திரன் மீது அவர்கள் கொண்டுள்ள வன்மம். அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரு சூத்திரன்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
உங்கள் தமிழையும் சொல்லாடலையும் கண்டு பெருமிதம் கொள்ளும் தமிழர்களில் நானும் ஒருவன் ஆனாலும் நீங்கள் எங்களுக்கானவராக இல்லை என்பதே என் வருத்தம்.நீங்கள் எங்களது வலிகளையோ வேதனையையோ,எங்கள் மீதான அடக்குமுறையையோ,எங்களது போராட்டங்களைப் பற்றியோ,எங்களது விடுதலைக்காகவோ ஒரு போதும் பாடியது இல்லை.
பாடகர் கோவன் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிராக எத்தனையோ குரல்கள் எழுந்தன ஆனால் உங்கள் விடயத்தில் அதுபோல் நிகழவில்லை அது ஏன் என்று இப்போது புரிகிறதா வைரமுத்து அவர்களே.
நீங்கள் இரு கண்களாக நினைக்கின்ற ரசினி கமல் இருவரிடமிருந்தும் குரல் வரவில்லை. நீங்கள் உச்சி முகர்ந்து பாராட்டும் சங்கரும் மணிரத்தினமும் வாயை இன்னும் திறக்கவே இல்லை.இப்போது உங்களுக்காக வரும் ஆதரவுக் குரல் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று யோசித்தீர்களா வைரமுத்து அவர்களே.
இந்த குரல்கள் எல்லாம் வைரமுத்து என்பவருக்காகவோ உங்கள் கவி ஆளுமைக்காகவோ இல்லை, அவமானப்படுத்தப்படுகிற சூத்திரனுக்கு நாமும் துணை நிற்போம் என்ற உணர்வினால் தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
உங்கள் மேட்டுக்குடி மனோபாவத்தை விட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள்,எங்களைப் பாடுங்கள் எங்களுக்காகப் பாடுங்கள், எங்களுக்கானவராக மாறுங்கள். மீண்டும் சொல்கிறேன் அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே சூத்திரன் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

Tuesday 2 January 2018

.............. ஆகிய நான்

.............. ஆகிய நான்
அகிம்சை நிரம்பிய
என்
ஒவ்வொரு எழுத்திலும்
இரத்த வாடை வீசுகிறது.
தோழமையென்று
தோளில் கைபோடும்
என் தலைக்குள்ளே
சாதிப் பெருமை அப்படியே இருக்கிறது.
உனது
கல்லாமை அறியாமை
வறுமையை எருவாக்கி
என் வெள்ளாமை நடக்கிறது.
வாய்மை பேசி நடிக்கும்
என் நாக்கின் அடியில்
பொய்மை இருக்கிறது.
பகுத்தறிவு பேசும்
உன் அறிவாண்மை கண்டு
சீற்றம் வருகிறது.
ஆண் திமிரை அடக்கும்
உன் பெண்மையின் மீது
ஆத்திரம் வருகிறது.
தோளில் ஏறக் காத்திருக்கும்
என் பொறுமை
உன் நிமிர்வின் மீது
பொறாமை கொள்கிறது.
இறையாண்மை பேசும்
என் கைகளின் மறைவில்
கொலை வாளும் இருக்கிறது.

திரு.ரஜினிகாந்த் அவுகளுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது

திரு.ரஜினிகாந்த் அவுகளுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நா எப்பவுமே ஒங்கள ஒரு பெரிய விசயமா நெனச்சது இல்ல.ஆனா நீங்க அரசியலுக்கு வந்துட்டேன்னு சொன்னதால இந்த கடுதாசிய எழுதுற மாதிரி ஆயிடுச்சு.
இவ்வளவு காலமா நடிகனா பொழப்பு நடத்துற ஒங்ககிட்ட இருந்து நல்ல நடிப்பையே எதிர்பார்க்க முடியாத போது எப்படிங்க நல்ல அரசியல எதிர் பார்க்கிறது. நீங்க எங்களுக்காக என்ன செஞ்சுருக்கீங்க, எங்களுக்கான எந்த போராட்டத்திலாவது கலந்துக்கிட்டு இருக்கீங்களா கொறஞ்சபட்சம் வாய தொறந்து கருத்தாவது சொல்லி இருக்கீங்களா அப்பறம் எப்படிங்க நீங்க எங்களுக்கான தலைவரா இருக்க முடியும்.
நேத்து பேசும்போது சொன்னீங்க, ஒருத்தரு மைக்க நீட்டி உங்க கொள்கை என்னன்னு கேட்டாரு எனக்கு ரெண்டு நிமிசம் தலைய சுத்திருச்சுன்னு, ஏங்க அவரு அப்படி என்னங்க கேக்க கூடாத கேள்வியாவ கேட்டுட்டாரு, ஒங்களுக்கு கொள்கை இருந்துச்சுன்ன இருக்குன்னு சொல்லுங்க இல்லேன்னா இல்லைன்னு சொல்லுங்க. எங்கிட்ட இதே கேள்விய கேட்டு இருந்தா ஒரு அரை மணி நேரத்துக்கு மூச்சு விடாம என் கொள்கைய சொல்லி இருப்பேன். எனக்கே இவ்வளவு கொள்கை இருக்குன்னா நா அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்ற ஒங்களுக்கு எவ்வளவு கொள்கை இருக்கணும். ஆனா கேட்ட உடனேயே தலைய சுத்திருச்சுன்னா ஒங்களுக்கு எந்த கொள்கையுமே இல்ல, முதலமைச்சரா ஆகணும்னு ஒரே கொள்கையோடதான் அரசியலுக்கு வர்றீங்க அப்படித்தானே.
இப்ப சோ இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டீங்க. அவரும் இருந்து நீங்க அவருகூட சேர்ந்துக்கிட்டு ஆன்மிக அரசியல் பண்ணா எப்படி இருக்கும்னு நெனைக்குறப்பவே எனக்கு காய்ச்சல் வந்துரும் போல இருக்கு. சோ இல்லேன்னா என்னங்க அதான் ஒலக மகா அறிவாளிகள் குருமூர்த்தியும் தமிழருவி மணியனும் ஒங்களுக்கு இருக்காங்களே. எனக்கு என்னமோ குருமூர்த்தி எழுதிக்குடுத்த வசனத்த தான் நீங்க பேசுறீங்களோன்னு சந்தேகமாவே இருக்கு. ஏன்னா ஒங்களுக்குத்தான் சொந்தமா எதுவுமே வராதே.
எல்லாத்தையும் முடிச்சுட்டேன் இனி போர்ல அம்பு விட வேண்டியதுதான்னு சொன்னீங்க, அத கேட்டதும் எனக்கு வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது அதுல அவரு வரிசையா அம்புகள விடுவாரு ஆனா ஒன்னுகூட கரடி மேல படாது கடைசியா கரடி அவரு முன்னால வந்து மூஞ்சில காறித்துப்பிட்டு போயிரும். அதுமாதிரி எதுவும் நடக்காம பாத்துங்குங்க.
தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லன்னு சொல்றீங்க இந்தியாவோட சிஸ்டத்த பத்தி வாயத்தொறந்து எதுவுமே சொல்ல மாட்டீங்கிறீங்க. ஏங்க பயமா இல்ல பாசமா.
அரசியல் விமர்சனம் பண்ணாதீங்க,குறை சொல்லாதீங்க,போராட்டம் நடத்தாதீங்க அறிக்கை விடாதீங்கன்னு சொல்றீங்க ஏங்க இவ்வளவு நாளா நீங்க அப்படித்தானே இருக்கீங்க, அரசியலுக்கு வந்து என்னங்க பண்ணப்போறீங்க இதுக்கு நீங்க இப்ப இருக்கிற மாதிரியே இருந்துட்டு போயிரலாம்.
அது என்னங்க ஆன்மிக அரசியல், அததானுங்களே பிஜேபி பண்ணிக்கிட்டு இருக்கு நீங்க என்ன புதுசா, அவனுக பருப்பு இங்க வேகாதுன்னு புரிஞ்சிக்கிட்டு ஒங்கள முன்னால நிப்பாட்டி காரியத்த சாதிக்கலாம்னு பாக்குறானுக. ஆனானப்பட்ட ராஜாஜியவே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓட விட்ட பெரியார் பொறந்த மண்ணு இது கொஞ்சம் சூதனமா இருந்துங்குங்க இல்லேன்னா காயடிச்சு விட்ருவாய்ங்க.
சாதி மத சார்பற்ற அரசியல் பண்ணப்போறதா சொல்றீங்க, அது எப்படிங்க கழுத்துல கொட்டையும் நெத்தியில பட்டையும் போட்டுக்கிட்டு பாபா முத்திரைய காமிச்சுக்கிட்டு மத சார்பற்ற அரசியல் பண்ணுவீங்க அது எப்புடிங்க ஒங்க கூட்டாளி கமல் மாதிரியே நீங்களும் பேசுறவனுக்கும் புரியாம கேக்குறவனுக்கும் புரியாத மாதிரியே பேசுறீங்க.
ஒங்க எல்லாருக்கும் நா ஒன்னு தெளிவா சொல்லிக்கிறேன், இந்த மண்ணுக்கான அரசியல், மக்களுக்கான அரசியல் எங்க பெரியாரோட அரசியல் அதுல நாங்க தெளிவா இருக்கோம், நீங்க ஒங்க கடைய சாத்திட்டு கெளம்புற வழிய பாருங்க.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...