Tuesday 2 January 2018

திரு.ரஜினிகாந்த் அவுகளுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது

திரு.ரஜினிகாந்த் அவுகளுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
நா எப்பவுமே ஒங்கள ஒரு பெரிய விசயமா நெனச்சது இல்ல.ஆனா நீங்க அரசியலுக்கு வந்துட்டேன்னு சொன்னதால இந்த கடுதாசிய எழுதுற மாதிரி ஆயிடுச்சு.
இவ்வளவு காலமா நடிகனா பொழப்பு நடத்துற ஒங்ககிட்ட இருந்து நல்ல நடிப்பையே எதிர்பார்க்க முடியாத போது எப்படிங்க நல்ல அரசியல எதிர் பார்க்கிறது. நீங்க எங்களுக்காக என்ன செஞ்சுருக்கீங்க, எங்களுக்கான எந்த போராட்டத்திலாவது கலந்துக்கிட்டு இருக்கீங்களா கொறஞ்சபட்சம் வாய தொறந்து கருத்தாவது சொல்லி இருக்கீங்களா அப்பறம் எப்படிங்க நீங்க எங்களுக்கான தலைவரா இருக்க முடியும்.
நேத்து பேசும்போது சொன்னீங்க, ஒருத்தரு மைக்க நீட்டி உங்க கொள்கை என்னன்னு கேட்டாரு எனக்கு ரெண்டு நிமிசம் தலைய சுத்திருச்சுன்னு, ஏங்க அவரு அப்படி என்னங்க கேக்க கூடாத கேள்வியாவ கேட்டுட்டாரு, ஒங்களுக்கு கொள்கை இருந்துச்சுன்ன இருக்குன்னு சொல்லுங்க இல்லேன்னா இல்லைன்னு சொல்லுங்க. எங்கிட்ட இதே கேள்விய கேட்டு இருந்தா ஒரு அரை மணி நேரத்துக்கு மூச்சு விடாம என் கொள்கைய சொல்லி இருப்பேன். எனக்கே இவ்வளவு கொள்கை இருக்குன்னா நா அரசியலுக்கு வந்துட்டேன்னு சொல்ற ஒங்களுக்கு எவ்வளவு கொள்கை இருக்கணும். ஆனா கேட்ட உடனேயே தலைய சுத்திருச்சுன்னா ஒங்களுக்கு எந்த கொள்கையுமே இல்ல, முதலமைச்சரா ஆகணும்னு ஒரே கொள்கையோடதான் அரசியலுக்கு வர்றீங்க அப்படித்தானே.
இப்ப சோ இல்லையேன்னு ரொம்ப வருத்தப்பட்டீங்க. அவரும் இருந்து நீங்க அவருகூட சேர்ந்துக்கிட்டு ஆன்மிக அரசியல் பண்ணா எப்படி இருக்கும்னு நெனைக்குறப்பவே எனக்கு காய்ச்சல் வந்துரும் போல இருக்கு. சோ இல்லேன்னா என்னங்க அதான் ஒலக மகா அறிவாளிகள் குருமூர்த்தியும் தமிழருவி மணியனும் ஒங்களுக்கு இருக்காங்களே. எனக்கு என்னமோ குருமூர்த்தி எழுதிக்குடுத்த வசனத்த தான் நீங்க பேசுறீங்களோன்னு சந்தேகமாவே இருக்கு. ஏன்னா ஒங்களுக்குத்தான் சொந்தமா எதுவுமே வராதே.
எல்லாத்தையும் முடிச்சுட்டேன் இனி போர்ல அம்பு விட வேண்டியதுதான்னு சொன்னீங்க, அத கேட்டதும் எனக்கு வடிவேல் காமெடி தான் ஞாபகத்துக்கு வருது அதுல அவரு வரிசையா அம்புகள விடுவாரு ஆனா ஒன்னுகூட கரடி மேல படாது கடைசியா கரடி அவரு முன்னால வந்து மூஞ்சில காறித்துப்பிட்டு போயிரும். அதுமாதிரி எதுவும் நடக்காம பாத்துங்குங்க.
தமிழ்நாட்டுல சிஸ்டம் சரியில்லன்னு சொல்றீங்க இந்தியாவோட சிஸ்டத்த பத்தி வாயத்தொறந்து எதுவுமே சொல்ல மாட்டீங்கிறீங்க. ஏங்க பயமா இல்ல பாசமா.
அரசியல் விமர்சனம் பண்ணாதீங்க,குறை சொல்லாதீங்க,போராட்டம் நடத்தாதீங்க அறிக்கை விடாதீங்கன்னு சொல்றீங்க ஏங்க இவ்வளவு நாளா நீங்க அப்படித்தானே இருக்கீங்க, அரசியலுக்கு வந்து என்னங்க பண்ணப்போறீங்க இதுக்கு நீங்க இப்ப இருக்கிற மாதிரியே இருந்துட்டு போயிரலாம்.
அது என்னங்க ஆன்மிக அரசியல், அததானுங்களே பிஜேபி பண்ணிக்கிட்டு இருக்கு நீங்க என்ன புதுசா, அவனுக பருப்பு இங்க வேகாதுன்னு புரிஞ்சிக்கிட்டு ஒங்கள முன்னால நிப்பாட்டி காரியத்த சாதிக்கலாம்னு பாக்குறானுக. ஆனானப்பட்ட ராஜாஜியவே துண்டக்காணோம் துணியக்காணோம்னு ஓட விட்ட பெரியார் பொறந்த மண்ணு இது கொஞ்சம் சூதனமா இருந்துங்குங்க இல்லேன்னா காயடிச்சு விட்ருவாய்ங்க.
சாதி மத சார்பற்ற அரசியல் பண்ணப்போறதா சொல்றீங்க, அது எப்படிங்க கழுத்துல கொட்டையும் நெத்தியில பட்டையும் போட்டுக்கிட்டு பாபா முத்திரைய காமிச்சுக்கிட்டு மத சார்பற்ற அரசியல் பண்ணுவீங்க அது எப்புடிங்க ஒங்க கூட்டாளி கமல் மாதிரியே நீங்களும் பேசுறவனுக்கும் புரியாம கேக்குறவனுக்கும் புரியாத மாதிரியே பேசுறீங்க.
ஒங்க எல்லாருக்கும் நா ஒன்னு தெளிவா சொல்லிக்கிறேன், இந்த மண்ணுக்கான அரசியல், மக்களுக்கான அரசியல் எங்க பெரியாரோட அரசியல் அதுல நாங்க தெளிவா இருக்கோம், நீங்க ஒங்க கடைய சாத்திட்டு கெளம்புற வழிய பாருங்க.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...