Saturday 28 October 2017

குழந்தைகளும் பொம்மைகளும்

குழந்தைகளும் பொம்மைகளும்
குழந்தைகள்
தங்கள் பொம்மைகளை
எப்போதும் தூக்கிச் சுமக்கிறார்கள்
அவைகளுக்கு உணவு ஊட்டுகிறார்கள்
கதை சொல்கிறார்கள்
பாடம் நடத்துகிறார்கள்
உறங்க வைக்கிறார்கள்
சில நேரங்களில்
மருத்துவமும் பார்க்கிறார்கள்
அவர்கள் அவற்றை
அதட்டுவதில்லை
மிரட்டுவதில்லை
முறைப்பதில்லை
திட்டுவதில்லை
அடிப்பதில்லை
ஒருபோதும் அவைகளை அழவைப்பதுமில்லை

Saturday 21 October 2017

ஒலக நாயகனுக்கு ஒரு கடுதாசி


ஒலக நாயகனுக்கு ஒன்னுந்தெரியாத சின்னப்பய எழுதுறது,
ரெம்ப நாளாவே ஒங்களுக்கு ஒரு கடுதாசி எழுதணும்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன் ஆனா ஒவ்வொரு தடவ எழுதணும்னு நெனக்கும்போதும் வார்த்த வந்து முட்டிரும்(ஒங்களுக்கு மாதிரியே), இந்த தடவதான் முட்டமா வரிசயா வருது அதனால எழுதுறேன்.
நா படிக்கிறப்ப ஒங்களோட பெரிய ரசிகனா இருந்தேன், ஒங்க படத்த மட்டுந்தான் பாப்பேன், வேற எந்த படத்தயும் பாக்க மாட்டேன். ஒலக சினிமாவுலேயே நீங்க ஒருத்தர் தான் அறிவாளின்னு அப்ப நெனச்சுக்கிட்டு இருந்தேன்.
ஒங்கள பத்தி யாராவது தப்பா பேசுனா பயங்கரமா கோவம் வரும் என்னடா இது இப்படிப்பட்ட அறிவாளியப் போயி எல்லாரும் தப்பா பேசுறாங்களேன்னு அவங்களோட சண்டைக்குப் போவேன்.அப்பவே நா எங்கூட்டாளிங்க கிட்டல்லாம் சொல்லுவேன் நீங்க உள்ளூர் நாயகன் இல்ல ஒலக நாயகன் அப்படின்னு.
பேய்கள நம்பாத பிஞ்சுல வெம்பாதன்னு நீங்க பாடுனப்போ ஒங்கள மூட நம்பிக்கய ஒழிக்க வந்த புரட்சி வீரன்னு நெனச்சு சந்தோசப்பட்டேன், ஒங்கள நீங்க பகுத்தறிவு வாதியா, கடவுள் மறுப்பாளனா, முற்போக்குவாதியா காமிச்சிகிட்டப்ப ஒங்கள தல மேல தூக்கிவச்சு கொண்டாடுனேன்.
கருப்பு சட்ட மாட்டிக்கிட்டு அக்ரகாரத்தில இருந்து பெரியார் திடல் வர்றதுக்கு இவ்வளவு காலம் ஆச்சுன்னு நீங்க சொன்னப்ப நா புல்லரிச்சு போயிட்டேன்.
ஆனா இப்பதான் நீங்க யாருங்கிறத நா முழுசா புரிஞ்சுக்கிட்டேன். கடவுள் பாதி மிருகம் பாதின்னு சொல்ற மாதிரி, நீங்க எல்லாத்துலயுமே பாதி தான் எதுலயுமே முழுசு இல்ல,
மாநிலத்துல சிஸ்டம் சரியில்லன்னு சொல்றீங்க மத்தியில உள்ள சிஸ்டத்த பத்தி பேசவே மாட்டேங்கறீங்க,சினிமாவுக்கு வரி போட்டா பொங்குறீங்க எங்களுக்கு வரி போட்டா பம்முறீங்க.
ரெண்டு நாளைக்கு முன்னால நிலவேம்பு கஷாயத்துல ஒண்ணுமே இல்ல அப்படீன்னு சொன்னீங்க, இப்ப நா அப்படி சொல்லல இப்படி சொன்னேன்னு சொல்றீங்க.
கேக்குற கேள்விக்கு தெளிவா பதில் சொல்லாம கொழப்பிவிட்டு கேள்வி கேக்குறவுங்களயே சரியாத்தான் கேக்குறமான்னு பீல் பண்ண விட்டுறீங்க (வடிவேல் காமெடி மாதிரி).
நா படிக்காததுனால நீட்ட பத்தி தெரியாது என் மகளுக்கு டெங்கு வந்ததால அதப்பத்தி தெரியும்னு சொல்றீங்க என்ன ஒரு சிந்தனை. அனிதா மரணத்த பத்தி பேசுற நீங்க, நீட்ட பத்தியோ, சமூகநீதி பத்தியோ இடஒதுக்கீடு பத்தியோ பேச மாட்டேங்கிறீங்க.
இந்தி சமஸ்கிருத திணிப்ப பத்தி வாயவே தெறக்க மாட்டேங்கிறீங்க. சேரி கல்ச்சர் பத்தி கேட்டா அது தப்புன்னு சொல்லாம இப்ப எங்க சாதி இல்ல அப்படின்னு கொதிக்கிறீங்க.
நீங்க போட்டுக்கிட்டு இருக்கிறதா சொன்ன கருப்பு சட்ட காவியா மாறி ரொம்ப காலம் ஆயிடுச்சு, நீங்க என்னதான் மறச்சாலும் ஒங்க குடுமி வெளிய தெரிய ஆரம்பிச்சிடுச்சு. நீங்க எங்களுக்கு எதிரியாவே இருந்துட்டு போங்க நண்பனா நடிக்காதீங்க.
இதோட இந்த கடுதாசிய நிப்பாட்டிக்கிறேன் தேவப்பட்டா மறுபடியும் எழுதுறேன்.
இப்படிக்கு,
ஒன்னுந்தெரியாத சின்னப்பய
க.ம.மணிவண்ணன்

Saturday 14 October 2017

மோடிக்கு ஒரு பாட்டு

மோடிக்கு ஒரு பாட்டு

தேடி வந்து கேட்டீங்க ஓட்டு
சொன்னபடி செஞ்சோம் அதக் கேட்டு
ஒங்களுக்கு லட்ச ரூபா கோட்டு
என் வேட்டி ஓட்டையில பெரிய ஒட்டு
கொண்டுவந்து திணிச்சீங்க நீட்டு
சமூகநீதிக்கு அதுதான்யா வேட்டு
எங்கிட்ட இல்லை அய்யா துட்டு
எம்புள்ளக்கி கெடைக்காதா சீட்டு
மதிப்பிழந்து போனதையா ரூபா நோட்டு
வணிகத்துக்குப் போட்டுட்டீங்க பெரிய பூட்டு
நாங்க இங்க பாடுறமே பஞ்சப்பாட்டு
பெரிய முதலாளி கிட்ட என்ன கூட்டு
வளர்ச்சி வளர்சியின்னு ஒரே பாட்டு
அது எங்கேன்னு தேடுறமே கண்ணீர் விட்டு
கொல்லுறீங்க வரி மேல வரியாய்ப் போட்டு
இருக்குதையா பல நூறு குற்றச்சாட்டு
வேல தேடி அலையுறமே கஷ்டப்பட்டு
இனி ஒழச்சு நாங்க பொழச்சுக்குறோம் இஷ்டப்பட்டு
தாமரை எங்களுக்கு எப்பவுமே தீட்டு
நீங்க எல்லோருமே போயிருங்க ஆட்சிய விட்டு

Monday 9 October 2017

மெத்தப்படித்த மேதாவிகளுக்கு

மெத்தப்படித்த மேதாவிகளுக்கு ஒண்ணும் தெரியாத சின்னப்பய எழுதுறது,

நா இலக்கணம் இலக்கியம்ல படிச்சவன் கிடையாது, எம் புள்ளைய தமிழ் வழி பள்ளியில படிக்க வைக்கிற சாதாரண தமிழ் பய. 

ஒருத்தன் சொல்றான் பெரியார் தெலுங்கன்னு, இன்னொருத்தன் சொல்றான் கன்னடன்னு அப்பறம் இன்னொரு பய சொல்றான் அவரு தெலுங்கனும் இல்ல கன்னடனும் இல்ல நெல்சன் மண்டேலாவோட சித்தப்பா மகன்னு . 

அவரு யாரா வேணா இருந்துட்டு போகட்டும் , அவரு எனக்கும் எம் புள்ளைகளுக்கும் இந்த சமுதாயத்துக்கும் என்ன பண்ணாருங்கிறது தான் எனக்கு முக்கியம்.

நா தண்ணி அடிக்கிறது இல்ல, சிகரெட் புடிக்குறது இல்ல, பொம்பள பொறுக்கியும் இல்ல. எனக்கு தனி மனித ஒழுக்கத்த சொல்லிக்கொடுத்ததே அந்த கிழவன் தான்.

நானும் ஏதோ ஓரளவுக்கு படிச்சு வேலைக்கு போயி குடும்பத்த காப்பதுறேன்னா அதுக்கும் அந்த கெழட்டுபய தான் காரணம் அவரு போராடி வாங்கித் தந்த இடஒதுக்கீட்டால படிச்ச பய தான் நா.

எனக்கு மனித நேயத்த சொல்லி தந்தவரும், ஒன்ன விட ஒசந்தவனும் இல்ல தாழ்ந்தவனும் இல்லன்னு சொல்லி தந்தவரும் எல்லாரும் சமம்னு சொன்னவரும் அவருதான்.

பெரிய பெரிய அறிவாளின்னு சொல்லிக்கிறவனல்லாம் முட்டாபயல இருக்கும் போது என்ன மாதிரி சாதாரணமாணவங்களும் கொஞ்சம் அறிவோடயும் தன்மானத்தோடயும் வாழ்றோம்னா அதுக்கும் அந்த கிழவன்தான் காரணம்.

சாகறவரைக்கும் எனக்கும் என் சமுதாயத்துக்கும் உழைச்சவர் அவர்தான்.

அவரு தமிழனுக்காக ஒண்ணுமே புடுங்கலேன்னா நீங்க இதுவரை புடுங்குணது என்ன,இனிமே புடுங்கப்போறது என்ன அதையாவது சொல்லுங்க நாங்களும் உங்களோட சேர்ந்து நீங்க சொல்றத புடுங்குறோம்.

இப்படிக்கு,

ஒண்ணும் தெரியாத சின்ன பய

க.ம.மணிவண்ணன்

செவிக்கு உணவு

எப்படியோ கிடைத்துவிடுகிறது உணவு 
எல்லா வேளைகளிலும்.
வெண்டாமென்றாலும் யாரும் விடுவதாக இல்லை
செரிக்க முடியாமல் திணறினாலும் 
யாரும் கவலைப்படுவதாக இல்லை.
ஊட்டிவிடுவதில்தான் எல்லோருக்கும் விருப்பமே தவிர
உண்பதில் இல்லை.
எங்கு பார்த்தாலும் இறைந்து கிடக்கிறது உணவு
உண்பவர்கள் இல்லாமல்.
வழிஎங்கும் இறைத்துக் கொண்டே போகிறார்கள் உணவை,
உண்பவனைப்பற்றி சிறிதும் யோசிக்காமல்.
எப்படியோ, இப்படியாக
கிடைத்துவிடுகிறது உணவு செவிக்கு,
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

முகநூல்

முக நூலில் முகங்களுக்குதான் மதிப்பும் மரியாதையும் தரப்படுகிறதோ என்ற ஐயம் மனதில் எழுகிறது. 

பிரபலமானவர்களின் கருத்துச்செறிவற்ற பதிவுகள் கூட, ஏன் அவர்களது வெற்று புகைப்படங்கள் கூட பெரும்பாலானவர்களால் விரும்பப்படுகிறது,பகிரப்படுகிறது.பிரபலமானவர்களின் பதிவுகள் அனைத்துமே சிறப்பானதாக இருக்கும் என்று நினைப்பதும் ஒருவித மூட நம்பிக்கையே.

ஆனால் அதே சமயத்தில் பிரபலமில்லாத சில முக நூல் நண்பர்களின் பதிவுகள் மிகவும் சிறப்பானதாக இருந்தபோதிலும் அது யாராலும் விரும்பப்படுவதோ பகிரப்படுவதோ இல்லை.ஏன் அவர்களது பதிவுகளை நாம் படிப்பது இல்லையா அல்லது தவிர்க்கிறோமா.

பதிவுகள் சிறப்பானதாக இருக்கும்போது அதை விரும்பிகிறோம் எனச் சொல்லமுடியாமல் நம்மைத் தடுப்பது எது, நாம் படித்த நல்ல கருத்துள்ள பதிவுகளை பிறரிடம் பகிர்வதில் தயக்கம் ஏன், பிறரைப் பாராட்டுவதால் நமக்கு ஒன்றும் இழப்பில்லை.

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்

என்னை நீ சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும்
இழிவுபடுத்தாமல் இருந்தால்

தாழ்ந்தவன் என்று சொல்லி ஊருக்கு வெளியே
என்னை ஒதுக்கி வைக்காமல் இருந்தால்

என்னைப் பார்த்தால் பாவம் தொட்டால் தீட்டு
எனச் சொல்லும் வேதங்களையும் மத நூல்களையும்
கொளுத்துவதாக இருந்தால்

கோவில் கருவறைக்குள்ளே உன்னைப்போல்
நானும் நுழைய முடியும் என்றால்

என்னைவிட நீ உயர்ந்தவன் இல்லை
உன்னைவிட நான் தாழ்ந்தவன் இல்லை என்பதை
நீ ஏற்றுக்கொள்வாய் என்றால்

உன் வீட்டில் நானும் என் வீட்டில் நீயும்
திருமணம் முடிக்க முடியும் என்றால்

நீ மட்டும் அனுபவித்துவரும்
கல்வி.வேலை,பொருளாதார வசதி அனைத்தும்
எனக்கும் கிடைக்கும் என்றால்

இனி மாட்டுக்கறி தின்ன மாட்டேன்
பசுவை தெய்வமென்று வணங்குவேன்

இது எதுவும் முடியாது என்றால்

பருப்பும் நெய்யும் மட்டும் தின்று நீ செத்துப்போ
மாட்டுக்கறி தின்று நான் வாழ்ந்துவிட்டுப் போகிறேன்

அன்புள்ள பெரியாரியல்வாதிகளுக்கு

அன்புள்ள பெரியாரியல்வாதிகளுக்கு பெரியாரியல்வாதி எழுதிக்கொள்வது,

நமக்கு நிறைய வேலை இருக்கிறது.கடவுள்,மதம்,சாதி,தீண்டாமை,
மூடநம்பிக்கைகள்,பெண்ணடிமை இவற்றிற்கு எதிராகவும்,மனித நேயத்திற்கு ஆதரவாகவும் நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது.

பெரியாரை இழித்தும் பழித்தும் கேவலமாக திட்டியும் பல இளைஞர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.அதைப் பார்க்கும்போது பெரியாரியல்வாதியான எனக்கும் கோபம் வருகிறது.நம் தோழர்களும் அவர்களுடன் சரிக்கு சரியாக மல்லுக்கு நின்று சண்டையிட்டு வருகிறார்கள்.அவர்கள் செய்வது அறியாமை என்றால் நாம் செய்வதும் அறியாமையே என்று எண்ணத் தோன்றுகிறது.

பெரியாரையும் பெரியார் கருத்துக்களையும் காத்துக்கொள்ள பெரியாரால் முடியும்.நாம் சண்டை போட்டு காப்பாற்ற வேண்டிய நிலையில் பெரியார் இல்லை.பல ஊடகங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள ,தங்களை அறிவாளிகள் கூட்டம் எனச் சொல்லிக்கொள்கிற அவர்களாலேயே பெரியாரை எதுவும் செய்ய முடியாதபோது இவர்களால் என்ன செய்து விட முடியும்.

நமது வேலையெல்லாம் பெரியாரையும்,அவரது கருத்துக்களையும்,அவரது போராட்டத்தையும் முன்னெடுத்து செல்வதுதான்.நாம் பெரியாரது கருத்துக்களை நம் தோழர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறோமே தவிர,நமது அடுத்த தலைமுறையிடம் இளைஞர்களிடம் தம்பி தங்கைகளிடம் கொண்டுபோய் சேர்க்கத் தவறிவிட்டோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இளைஞர்கள் பலருக்கு பெரியாரைப்பற்றி சரியான புரிதல் இல்லை என்றால் அது யாருடைய தவறு. நம் தவறா அல்லது அந்த இளைஞர்களுடைய தவறா.நாம் தானே அவர்களிடம் பெரியாரை சரியாக கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும்.

தவறான செய்திகளையும்,பொய்களையும் நமது எதிரிகள் துணிச்சலாகவும் சத்தமாகவும் சொல்லும்போது,உண்மையைச் சொல்லும் நாம் சத்தமாகவும் துணிச்சலாகவும் சொல்ல தயக்கம் என்ன.இனி முக நூலில் சண்டையிடுவதையோ, ஒருமையில் திட்டிக்கொள்வதையோ விட்டு விடுவோம்.

கடவுளாலும் மதத்தாலும் சாதியாலும் ஆண்டாண்டு காலமாக நாம் அடைந்து வரும் இழிவுகளையும், அந்த இழிவுகளைத் துடைப்பதற்காக தோன்றிய திராவிட இயக்கத்தின் வரலாறுகளையும்,தலைவர்களையும் அவர்களது போராட்டங்களையும்,

பெரியாரின் கருத்துக்களையும் அவர் நடத்திய போராட்டங்களையும் அதனால் சமூகத்தில் விழைந்த மாற்றங்களையும் நன்மைகளையும்,

எதற்காக கடவுளை மதத்தை சாதியை தீண்டாமையை மூட நம்பிக்கைகளை பெண்ணடிமையை எதிர்க்க வேண்டும் என்பதையும்,மனித நேய கருத்துக்களையும் எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பாக இளைய தலைமுறையினரும் தம்பி தங்கைகளும் புரிந்துகொள்ளும் வகையில் தோழர்கள் தங்களது பதிவுகளை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்,
பெரியாரியல்வாதி
க.ம.மணிவண்ணன்

நான்கு மாடுகளும் நரியும்

நான் எனது மகள் பாட புத்தகத்தில் உள்ள நான்கு மாடுகளும் நரியும் என்ற கதையை என் மகளுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த கதையை கதாசிரியரின் அனுமதி இல்லாமல் சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன்.

இந்தக் கதை முற்றிலும் கற்பனையே. இதில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.

ஒரு காட்டில் நான்கு மாடுகள் இருந்தன.அவைகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அவை ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தன.ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதர்கள் என்பதாலும், அவர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதாலும், அவர்கள் அனைவருக்கும் எதிரிகள்(சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை) ஒன்றுதான் என்பதாலும் அந்த நான்கு மாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் எதிரிகளை எதிர்த்து போராடி வந்தன.

அவர்களது தாயும் எதிரிகளின் சூழ்ச்சி பற்றியும் அவற்றை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருந்தாள்.தாய் சொல்லிக் கொடுத்தபடியே அந்த நான்கு மாடுகளும் தங்களது கூரிய கொம்புகளால் எதிர்த்து வரும் எதிரிகளை குத்தி விரட்டி ஓடச் செய்தன.ஆனால் எதிரிகளுக்கோ எப்படியாவது இந்த நான்கு மாடுகளையும் கொன்று தின்று விட வேண்டும் என்ற தணியாத ஆசை.

காலங்கள் சென்றன. கருத்து வேறுபாடுகளுடன் இருந்த அந்த நான்கு மாடுகளும் தங்களது எதிரிகளை மறந்து விட்டு தனித்தனியாக பிரிந்து ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தன.தங்களது கொம்புகளால் ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பித்தன.சிறியதாக ஆரம்பித்த அவர்களது சண்டை பெரிதாக மாறியது.

யாருக்கும் தெரியாமல் சண்டை போட்டு வந்த அந்த நான்கு மாடுகளும் எல்லோருக்கும் தெரியும் வகையில் பெரிய களம் அமைத்து தங்களது நீண்ட கூர்மையான கொம்புகளால் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன.அவர்களது உடம்பிலிருந்து குருதி, வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இதனை பார்வையாளர் பகுதியிலிருந்து இரசித்துக் கொண்டிருந்த சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை போன்ற எதிரிகள் கை தட்டி ஆரவாரம் செய்தன.

அவை தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டன, நாம் இவர்களை கொன்று தின்ன வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறோம் நம்மால் முடியவில்லை. ஆனால் தற்போது நம்முடைய வேலை மிகவும் எளிதாகி விட்டது, இவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தீவிரமாக எதிர்த்துத் தாக்கிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். பாருங்கள் எவ்வளவு இரத்தம் வருகிறதென்று, இன்று நம்முடைய ஆசை கண்டிப்பாக நிறைவேறும்.இனி நமக்கு நல்ல விருந்துதான்.

இந்தக் கதை முற்றிலும் கற்பனையே. இதில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.

துளிப்பாக்கள்

மதம் பிடித்தாலே 
அழிவுதான்
யானைக்கோ மனிதனுக்கோ

சாதி எதையாவது
வேண்டாம் சாதி

தமிழன் மூளையை 
உழுத கலப்பை
தந்தைப் பெரியார்

பாழாய்ப் போன மனது

பாழாய்ப் போன மனது

முகநூலைத் திறந்ததுமே,

நாம் இட்ட பதிவுகளை 
யாரவது விரும்பியிருக்கிறார்களாவென்று
பார்ப்பதிலேயே குறியாக இருக்கிறது.

யாருமே விரும்பவில்லையென்றால்,

கோபப்படுகிறது
மகிழ்ச்சியைத் தொலைக்கிறது

அமைதியை இழக்கிறது
தூங்கமுடியாமல் தவிக்கிறது.

யாருக்குமே அறிவில்லையென்று
எல்லோரையும் திட்டித் தீர்க்கிறது.

அறிவுகெட்ட இந்த சமுதாயம்
நாசமாக போகட்டுமென்று
சத்தமாக சாபமிடுகிறது.

இறுதியாக,
தன்னைத் தானே ஆற்றிக்கொண்டு
மீண்டும் பதிவிடத் தொடங்குகிறது
எதையாவது.

தமிழ்

தமிழின் பெருமையை பக்கம் பக்கமாய் 
பேசி வந்த நான்,

தமிழ் எனது மூச்சு, தமிழ் எனது உயிர் என்று
சொல்லி வந்த நான்,

தமிழால் முடியாதது எதுவும் இல்லை என்று
வசனம் பேசிய நான்,

தாய்மொழிக் கல்வி பற்றி
கட்டுரைகள் எழுதிய நான்,

இப்போதெல்லாம் தமிழைப் பற்றி
வாயே திறப்பதில்லை,

என்று என் பிள்ளையை
ஆங்கில வழிப் பள்ளியில் கொண்டு போய் சேர்த்தேனோ
அன்றிலிருந்து.

தமிழ் பற்றி பேசுவதற்கு எனக்கும்
ஆசையாய்தான் இருக்கிறது,
யாராவது முகத்தில் காறி துப்பிவிடுவார்களோ என்று
பயமாய் வேறு இருக்கிறது

மரம்

மரம் வெட்டுதல் என்பது 
வெட்டும் மனிதனுக்கும்
வெட்டப்படும் மரத்துக்கும்
இடையேயான நிகழ்வாக மட்டுமே
இருந்ததில்லை எப்போதும்,

அது எப்போதுமே அரசியலோடு
பிண்ணிப் பிணைந்தே கிடக்கிறது
சந்தன மரமாயினும்
செம்மரமாயினும்.

இங்கு,
பார்த்தவுடன் காலில் விழும்
சொரணையற்ற மரங்களும் உண்டு,
நம்மையெல்லாம்
கரையேற்றப் போவதாகச் சொல்லும்
கட்டுமரங்களும் உண்டு,

மரம் வெட்டி கட்சி வளர்த்த
வரலாறுகளும் உண்டு,
வேர்களை இழித்துப்பேசி
உதிர்ந்து போகும்
இலைகளும் உண்டு.

தந்தைப் பெரியார்

தந்தைப் பெரியார்

பெரியார் நமக்கு மிகவும் பிடித்த முரட்டுக்குழந்தை, நமக்குப் பிடித்த குழந்தை என்பதற்காக நாம் மட்டுமே கையில் வைத்து கொஞ்சிக் கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்,அந்த குழந்தையை கொஞ்சம் கிழே இறக்கி விடுங்கள் அது நடக்கட்டும் மற்றவர்களிடமும் அந்த குழந்தையை அறிமுகப்படுத்துங்கள்.

பெரியாரைப் புகழ்வது தான் நமது பணியா,அவரைப் பற்றி புகழ்வது அவருக்கே பிடிக்காதே.நாம் என்ன அவரது பாதுகாவலர்களா அவரைக் காப்பாற்ற, அவரைக் காத்துக்கொள்ள அவரால் முடியும்.

பெரியார் வேண்டுவது பாதுகாவலர்களை அல்ல, கொள்கைகளை பரப்பும் போராளிகளைத்தான்.
முகநூலில் சண்டை போடும் அட்டைக்கத்தி வீரர்களுடன் போராடுவது நமது வேலை அல்ல.

பெரியார் படத்தின் மீது சிறுநீர் கழிப்பதும் செருப்பால் அடிப்பதும் நமது இனத்தின் எதிரி அல்லவே, நமது சகோதரனும் சகோதரியும் தானே. அப்படியானால் நமது எதிரி அவனுடைய வேலையை சரியாக செய்து கொண்டு இருக்கின்றான் என்பதுதானே அதன் பொருள்.

பெரியாரைப் பற்றிய தவறான புரிதலை, எதிர்மறையான எண்ணத்தை, நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்க்க நமது எதிரிகளால் முடியும் போது, அவரது கொள்கைகளை, அவரது கருத்துக்களை, அவரைப் பற்றிய சரியான புரிதலை, அவரைப் பற்றிய நேர்மறையான எண்ணத்தை நமது சகோதர சகோதரிகளிடம் நம்மால் கொண்டு போய் சேர்க்க முடியாமல் போனது ஏன்?

எனது வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் ஏதாவது ஒரு ஓட்டுப் பொறுக்கி கட்சியின் கூட்டம் நடக்கிறது,கொள்கை இல்லாதவன் எல்லாம் கொள்கை பற்றி பேசுகிறான்.ஆனால் பெரியாரியல் கூட்டங்கள் எதுவுமே நடைபெறுவது இல்லையே ஏன்? நாம் எல்லோரிடமும் பெரியாரைக் கொண்டுபோய் சேர்த்து விட்டோமா?

நான் எனது அலுவலக நண்பருடன் பெரியாரைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது அவர் நடத்திய போராட்டங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். அதற்கு அவர் பெரியார் இவ்வளவு செய்துள்ளாரா? அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர் என்பது மட்டும் தான் தெரியும் என்றார், படித்த அவரே இப்படி என்றால் படிக்காதவர்கள்?இவ்வளவு காலமாக அந்த நண்பரிடம் பெரியாரைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தாமல் இருந்தது என் குற்றம் தானே.

பெரியார் பற்றிய சரியான புரிதலை நமது சகோதர சகோதரிகளிடம் கொண்டுபோய் சேர்ப்போம்,இளைஞர்களிடமும் குழந்தைகளிடமும் தந்தைப் பெரியாரை அறிமுகம் செய்து வைப்போம்.

பேச்சு

எதையுமே செய்யாத 
உங்களது பேச்சுக்களை விட
எனது பேசாதிருத்தல் மேலானது என்ற திமிர்
எப்போதுமே எனக்கு உண்டு.

உன்னுடைய பேச்சுக்களால்
நான் வலி அடைந்திருக்கிறேன்
என்னுடைய மௌனத்தால்
என்றாவது நீ காயப்பட்டிருக்கிறாயா.

எனது பேசாதிருத்தல்
திமிர், அவமதிப்பு ,அலட்சியம் என்று
தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.
அது எனது ஆயுதம் மட்டுமல்ல
கேடயமும் தான்.

நீ எல்லோருடனும் மகிழ்ச்சியுடன்
பேசுகிறாயா
அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள்,
மனைவி,குழந்தைகள்,உறவினர்கள் உட்பட,
இல்லை என்றால்
என்னை விமர்சனம் செய்யாதே
நான் யாருடனும் பேசுவதில்லை என்று.

நீ பேசாதே என்று நான் சொல்லியதில்லை
உன் பேச்சு எனக்கு பிடிக்காவிட்டாலும்
என்னைப் பேசு என்று சொல்லாதே
என் மௌனம் உனக்குப் பிடிக்காவிட்டாலும்.

உன் பேச்சு இந்த சமுதாயத்தில்
மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அல்லது
ஏற்படுத்தப்போகிறது என்பதால் 
நீ எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கிறாய்
அது இல்லாததால் 
நான் யாருடனும் பேசாமலிருக்கிறேன்.

எப்படி பேசினால் பிடிக்குமென்ற
நுட்பம் தெரிந்ததால்
நீ எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கிறாய்
அது தெரியாததால்
நான் யாருடனும் பேசாமலிருக்கிறேன்.

எதையுமே செய்யாத 
உங்களது பேச்சுக்களை விட
எனது பேசாதிருத்தல் மேலானது என்ற திமிர்
எப்போதுமே எனக்கு உண்டு.


கவிதைகள்

அதிகாலையிலும் பின்னிரவிலும் வரும்
தொலை பேசி அழைப்புகளை
பயமோ பதட்டமோ இன்றி
எதிர்கொள்ள முடியவில்லை
என்னால்.

முக நூலில் இருவர்தான் இருக்கிறார்கள்
ஒருவர் பெரியாரைப் புகழுபவர்
மற்றொருவர் பெரியாரைத் திட்டுபவர்
மற்றபடி பெயர்கள்தான் வேறு வேறு.

பேருந்து

நகரப் பேருந்தில்
ஏறினேன் நானும்,
பழுதாகி நின்றது
பாதியிலே,
அந்த நகரப் பேருந்து
இப்போது நகராப் பேருந்து.

எதையுமே ரசிக்கவும் விடுவதில்லை
யோசிக்கவும் விடுவதில்லை
தூங்கவும் விடுவதில்லை
நடத்துனர் திருப்பித் தருவதாகச் சொன்ன
சில்லறை பாக்கி

நீண்ட தூரப் பயணங்களில் 
நமது அருகில்
ஒரு ஒல்லியானவர் வந்து 
அமர்ந்து விட வேண்டுமென்று
எப்போதுமே எதிர்பார்க்கிறது
இந்த பாழாய்ப்போன மனது.

அரசுப் பேருந்து
பழுதாகி நின்றது
தள்ளுங்கள் நகருமென்றனர்
"அரசு" என்றாலே
"தள்ளினால்" தான் நகரும் போல.

கவிதைகள்

அர்ச்சகனுக்கு பிச்சை போட்டு 
வெளியே வந்தவன்
பிச்சை கேட்கும் 
வயதான பாட்டியிடம் சொல்கிறான்
ஒழச்சு பொழைக்க வேண்டியதுதானே என்று.

மிதிவண்டியில் 
தேநீர் விற்பவரிடம்
சரியான சில்லறையைக் 
கேட்டுப் பெறும் பலரும்
மதுக்கடைகளில்
திருப்பித் தரப்படாத 
சில்லறையைப் பற்றி 
கவலைப் படுவதே இல்லை.

குழந்தைகளின் அறியாமையை மட்டுமல்ல
வயதானவர்களின் அறியாமையையும்
என்னால் ரசிக்க முடிகிறது

பேருந்து நிலையத்தில்
பெரியார் புத்தக நிலையத்திற்கு வந்த
பெரியவர் ஒருவர்
பஞ்சாங்க புத்தகம் இருக்கா என்று கேட்ட போது.

இந்த பேருந்து நிலையங்கள்
எப்போது பார்த்தாலும்
ஏதாவது ஒரு குடிகாரனைத்
தன் மடியில் போட்டுத்
தூங்கவைத்துக் கொண்டுதான்
இருக்கின்றன.

பெண்

உனது கண்களால் 
என்னை வன்புணர்வு செய்கிறாய்
கேட்டால்
அழகை ரசிக்கிறேன் 
இதில் என்ன தவறு என்கிறாய்
காறி உமிழத் தோன்றுகிறது
எனக்கு
உன் முகத்தில்.

என்னை அவமானப்படுத்த
நீ விரும்பினால்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான்
நடத்தை சரியில்லாதவள் என்று.

நான் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும்
நீயே தீர்மானிக்கிறாய்
என்னுடைய வாழ்வையும் 
நீயே வாழ்ந்துவிட்ட பிறகு
நான் எப்போது வாழ்வது.

என்னால் எப்போதும்
உனக்கு
தாயாக,சகோதரியாக,
மனைவியாக,மகளாக,
தோழியாக
இருக்க முடிகிறது
ஆனால் நீ மட்டும்
எப்போதும் ஆணாய்.

எங்கள் பாட்டிகள்
வீட்டில்
கதவுகளுக்குப் பின்னால்
தங்கள் முகங்களை
ஒளித்துக்கொண்டார்கள்
நாங்கள்
முகநூலில்
எங்கள் பிள்ளைகளின்
நிழற்படங்களுக்குப் பின்னால்
ஒளித்துக்கொள்கிறோம்.


திருமணம் செய்து
என்னை மனைவியாகவும்
என் தந்தையை
கடனாளியாகவும்
ஆக்கி விட்டாய்.



குழந்தைகள்

குழந்தைகளின்
அப்பாவுடனான இருத்தல் எல்லாம்
அம்மாவைக் காணும் வரைதான்.

குழந்தைகளின்
சேட்டையை மட்டுமல்ல
அவர்களின் அமைதியையும்
தாங்க முடிவதில்லை.

தண்ணீரில் விளையாடுவதில்
என்னதான் மகிழ்ச்சியோ தெரியவில்லை
இந்த குழந்தைகளுக்கு,

எதை எடுத்தாலும் தண்ணீரில்
போட வேண்டும் என்பதையும்
யார்தான் சொல்லிக்கொடுத்தர்களோ
அதுவும் தெரியவில்லை.

பேசுகின்ற மனிதர்கள் எல்லாம்
பேசாமல் இருக்க,
பேச இயலாத விலங்குகள் எல்லாம்
பேசிக்கொண்டிருக்கின்றன 
குழந்தைகளுடன்
கார்ட்டூன்களில்.

குழந்தைகள்

அறிவாளிகளும்
பலசாலிகளும்
எப்படியும் தோற்றுப்போகிறார்கள்
தங்கள் குழந்தைகளிடம்.

விடை தெரியாத
குழந்தைகளின் கேள்விகளுக்கு
வாயை மூடு என்று சொல்வது மட்டுமே
தப்பிக்கும் வழியாக இருக்கிறது.

பெற்றோரை முட்டாளாக்கும்
கேள்விகளுடன் தான்
எல்லாக் குழந்தைகளும்
அலைகின்றன.

அம்மாவிடம் அடி வாங்கி
அழும் குழந்தைகள் எல்லாமே
அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டுதான்
அழுகின்றன.

தைரியசாலிகளையும்
பயந்தாங்கொள்ளி ஆக்கி விடுகிறது
குழந்தைகளின்
உடல் நலக்குறைவு.

எந்த முரட்டு அப்பாக்களின்
பாச்சாவும் பலிப்பதில்லை
தன் குழந்தைகளிடம் மட்டும்.

எல்லாக் குழந்தைகளும்
ஏதுமில்லாமல் தான் பிறக்கின்றன
இப்போது வரை

திருநீறு பூசாமல்
சிலுவை அணியாமல்
குல்லா போடாமல்.

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...