Saturday 7 October 2017

பெண்களை இழிவுபடுத்துகிறவர்கள் யார்?

பெண்களை இழிவுபடுத்துகிறவர்கள் யார்?

ஒருவர் பெண்களை இழிவுபடுத்திப் பாடல் எழுதிப் பாடினார் என்பதற்காகவும் ஒருவர் அப்பாடலுக்கு இசை அமைத்தார் என்பதற்காகவும் ஊரெங்கும் போராட்டங்கள் எதிர்ப்புக்குரல்கள் முழக்கங்கள் கைதுசெய்யச்சொல்லி முறையீடுகள்.

ஒடுக்கப்பட்டவர்கள், அவமானப்படுத்தப்படும்போதும் இழிவுபடுத்தப்படும்போதும் அதனை எதிர்த்துப் போராடும்போது மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் அந்த இருவர் மட்டும்தான் பெண்களை இழிவுபடுத்துகிறார்களாவென்று கேட்கவும் தோன்றுகிறது.

அவர்கள் இருவரின் பாடலும் இசையும் ஊடகங்களில் வெளிவந்ததால் எல்லோருக்கும் தெரிகிறது. ஆனால் பெரும்பாலான ஆண்கள் ஒன்றாக சேரும்போது அது எந்தப் பொதுஇடமாக இருந்தாலும் அவர்களுடைய பேச்சும் செயலும் பெண்களை இழிவுபடுத்துவதாகவும் அவமானப்படுத்துவதாகவும் இருக்கிறதே அதற்கு என்ன செய்யப்போகிறோம்.

வீட்டில் உள்ள பெண்களையே மதிப்பதற்குச் சொல்லித் தராத நாமா பிற பெண்களை மதிப்பதற்குச் சொல்லித் தரப்போகிறோம்.குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைச் சொல்லித் தருவதற்குப் பதிலாக கடவுளையும் மதங்களையும் புராண வேதக்கருத்துக்களையும் தானே மனதில் விதைக்கிறோம்.

எந்த மதத்தின்வேதங்கள்,புராணங்கள்,புனிதநூல்கள், மறைநூல்கள் பெண்களை மதிக்கச் சொல்லித் தருகின்றன,எந்த கடவுள்கள்,தேவகுமாரர்கள்,இறைத் தூதர்கள் பெண்களை உயர்வாக நினைத்தனர்.எந்த மதகுருமார்கள்,சாமியார்கள்,கடவுளின் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக்கொள்பவர்கள் பெண்களைப் போற்றினர்.

பெண்களை இழிவுபடுத்திப் பேசுகின்ற மதங்களையும் வேதங்களையும் புராணங்களையும் மதத் தலைவர்களையும் மதகுருமார்களையும் நாம் என்ன செய்துவிட்டோம்.

பெண்களை சகமனுசியாக தோழியாக மதிப்பதற்கு எனக்கு எந்த மதமும் சொல்லித்தரவில்லை,ஈரோட்டுக் கிழவனின் பெண்ணியச் சிந்தனைகள்தான் பெண்களை மதிக்க எனக்குச் சொல்லித் தந்தது.

நீங்கள் கடவுள் மதம் இதிகாசம் புராணம் வேதநூல்களை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றால் எல்லா இழிவுகளையும் ஏற்றுக்கொள்ள நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்றே பொருள். மதங்கள் இழிவு செய்வதை அமைதியாக ஏற்றுக்கொண்டு தனி நபர்களை மட்டும் எதிர்த்துப் போராடுவது வியப்பாக இருக்கிறது.

நீங்கள் நச்சுக்காற்றை வீசுகிறதே என்று கிளைகளை வெட்டுவதற்குப் போராடிக்கொண்டிருக்கிறீர்கள்,ஆனால் அது கடவுள் மதம் வேதம் புராணம் போன்ற நச்சு வேர்களினால் மண்ணில் ஆழ ஊன்றி இருக்கிறது.அதை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டி எறிவதற்காகப் போராடிக்கொண்டிருக்கிறோம் நாங்கள்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...