Saturday 7 October 2017

தங்கல் திரைப்படம்

நடிகர் திரு.அமீர்கான், இயக்குனர் திரு.நிதிஷ் திவாரி மற்றும் திரைப்படக் குழுவினருக்கு,

வணக்கம், தங்களின் தங்கல்(யுத்தம்) திரைப்படம் பார்த்தேன், மிகவும் சிறப்பு.

தாங்கள் அந்த திரைப்படத்தின் கதாநாயகனாக இருந்தபோதிலும், உண்மைக் கதாநாயகன் மகாவீர் சிங் போகத் அவர்களை என்னைப் போன்றோருக்கு அறிமுகப்படுத்தியதற்காக மிக்க நன்றி.

திரு.மகாவீர் சிங் போகத் அவர்கள் பெரியாரையோ,பெரியாரின் கருத்துக்களையோ அறிந்திருப்பாரா என்பது தெரியவில்லை.

பெரியார் சொல்கிறார் “பெண் குழந்தைகளை ஆண் பெண் பேதமின்றி வளருங்கள்,பெண் குழந்தைகளுக்கு ஆண் பெயர் சூட்டுங்கள்,அவர்களுக்கு தற்காப்புக்கலையை கற்றுக்கொடுங்கள்.நீண்ட கூந்தல் இல்லாமல் கிராப் வெட்டுங்கள், சட்டை பேண்ட் அணியச் செய்யுங்கள்”.

என்னைப் பொறுத்தவரை பெரியாரின் கருத்துக்களை செயல்படுத்திய மகாவீர் சிங் போகத்தும் ஒரு பெரியாரியல்வாதியே.

இது பெரியாரின் மண், இது போன்ற திரைப்படங்கள் இங்கும் வரும் என்று ஏமாந்து போனவர்களில் நானும் ஒருவன்.எப்படியோ மொழி மாற்றம் செய்யப்பட்டாவது இங்கு வந்ததை கண்டு மகிழ்ச்சியே.

ஒவ்வொரு காட்சியிலும் தாங்கள் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை நீருபித்துள்ளீர்கள்,தாங்கள் ஒரு சிறந்த நடிகர் என்பதை நான் சொல்லித்தான் இந்த உலகம் அறிய வேண்டும் என்பதில்லை,இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை.

தங்களது நுட்பத்தையும் அறிவையும் திறமையையும் ஒவ்வொரு காட்சியிலும் வெளிப்படுத்தியுள்ளீர் இயக்குனர் அவர்களே.

திரைப்படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்,மிகவும் அருமை.
வசனங்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய பலமாக இருக்கிறது திரைப்படம் முழுவதும்.

மல்யுத்த வீராங்கனை வீரனைச் சாய்த்து அடிக்கின்ற ஒவ்வொரு அடியும் ஆணாதிக்கத்தின் மீது வீழ்கின்ற மரண அடி.

ஒவ்வொரு போட்டியிலும் பெண்ணாகிய மகள் ஆணாகிய தந்தையின் அறிவுரைப்படியே வெற்றி பெறுகிறாள்.அப்படியானால் ஆண் இல்லாமல் பெண்ணால் வெற்றி பெற முடியாதா என்ற கேள்வியை உருவாக்கி, இல்லையில்லை எனது அறிவாலும் திறமையாலும் பலத்தாலுமேயே நான் முழுமையான வெற்றியைப் பெறுவேன் என்று இறுதிக் காட்சியில் இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் உலகுக்குச் சொல்லி விட்டார் அந்தப் பெண்.

திரு.அமீர்கான் அவர்களே,தங்கல்(யுத்தம்) திரைப்பட வெற்றிக்காக விநியோகஸ்தர்கள் பாராட்டு விழா ஏற்பாடு செய்வதை அறிந்து தாங்கள் வெளிப்படுத்திய கோபம் மதிப்புக்குரியது.

“இதுவே இந்நாட்டின் சாபக்கேடு, நான் கதாநாயகன் மட்டுமே,உண்மையான கதாநாயகன் மகாவீர் சிங் போகத். அவரே தன் நான்கு மகள்களையும் மல்யுத்த வீராங்கனைகளாக்கி பதக்கம் வெல்லச் செய்துள்ளார்.உங்கள் அத்தனை பாராட்டுக்கும் உரியவர் அவர்தான்”.

நீங்கள் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும்தான் என்பதை உங்கள் கோபம் வெளிப்படுத்துகிறது.

இது போன்ற சிறந்த படங்களைத் தொடர்ந்து எங்களுக்கு தொடர்ந்து தாருங்கள் என்ற கோரிக்கையோடும், தருவீர்கள் என்ற நம்பிக்கையோடும்...

க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...