Wednesday 26 June 2019

நான் விரும்பும் சமூகம்


நான் விரும்பும் சமூகம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? அது தந்தைப் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காண விரும்பிய சமூகநீதிச் சமூகம், காரல் மார்க்ஸ் விரும்பிய சமச்சீர் சமூகம்.

நான் விரும்பும் சமூகம் எப்படிப்பட்டதென அறிவீர்களா நீங்கள்? அங்கே உயர்வு தாழ்வு கற்பிக்கும் நால்வர்ணங்கள் இருக்காது. சாதியும் மதமும் இருக்கவே இருக்காது, சாதியும் மதமும் இல்லாச் சமூகத்தில் சாதிமதச் சண்டைகள் மட்டும் எப்படி இருக்கும். அங்கே உயிர்கள் பறிக்கப்படாது, இரத்தம் சிந்தப்படாது, குடிசைகள் கொளுத்தப்படாது, தீண்டாமையென்பது கண்டிப்பாக இருக்காது. ஆணவக் கொலைகள் அறவே நடக்காது.

நான் விரும்பும் சமூகத்தில் என் பாட்டன் சம்பூகனும் ஏகலைவனுமே ஆசிரியர்களாக இருப்பார்கள். அங்கே எங்கள் அக்கா அனிதாவும் பிரதீபாவும் மருத்துவம் படிப்பார்கள், நானும் கூட மருத்துவம் படிப்பேன். எங்கள் மருத்துவக் கனவுகள் அங்கே யாராலும் சிதைக்கப்படாது. அச்சமூகத்தில் எங்கள் அண்ணன் வெமூலா உயர் பதவி வகிப்பார்.
எங்கள் தெருக்களில் ஆசிபாவும் ஹாசினியும் எந்த பயமும் இன்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடுவேன். பெண் பிள்ளைகளான எங்களை நினைத்து எங்களைப் பெற்றவர்கள் பயந்து பயந்தே வாழ வேண்டிய தேவை இல்லாதிருக்கும்.

நான் விரும்பும் சமூகம் ஏழை பணக்காரன் என்ற வர்க்கங்கள் ஒழிந்து எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்ற சமூகமாக இருக்கும், அங்கே நிற வேற்றுமை இருக்காது, அச்சமூகம் பாலின சமத்துவம் தழைத்தோங்கும் சமூகமாக இருக்கும்.

நான் விரும்பும் சமூகம் அய்யா அண்ணல் வழியில் நடக்கின்ற அறிவார்ந்த சமூகமாக இருக்கும், அங்கே பெண்கள் எல்லாம் உயர்க்கல்வி கற்று கல்வியிலும் வேலையிலும் மேன்மையுற்று திகழ்வார்கள்.

நான் விரும்பும் சமூகத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும். சாலைகள் தோறும் கல்விச்சாலைகள் தோறும் தமிழே இருக்கும் தமிழ் மட்டுமே இருக்கும். சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரை தமிழே முழங்கும். பொருளாதாரம் முதல் பொறியியல் வரை அறிவியல் முதல் மருத்துவம் வரை அனைத்தையும் தமிழிலியே கற்கலாம். அனைத்து கலைச் சொற்களும் எங்கள் தாய்த் தமிழ் மொழியிலே இருக்கும். அயல்மொழி மோகம் அடியோடு அழிந்து போகும். இல்லாதவன் தானடா இரவல் வாங்குவான் செழுந்தமிழ் இருக்க ஏனடா அயல்மொழி என்ற நிலையே அச்சமூகத்தில் இருக்கும்.

நான் விரும்பும் சமூகத்தில் தனிமனித ஒழுக்கமே சிறந்து விளங்கும். அங்கே குழந்தைகளுக்கு அறத்தின் வழியே பொருளீட்டி இன்பமோடு வாழ சொல்லித்தரப்படும். குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்க்கப்படுவார்கள். ஆண்கள் தங்களைப் போன்ற சக உயிராக பெண்களை மதிக்கும் அச்சமூகத்தில், பெண்களுக்கு மட்டுமே கலாச்சார வகுப்பெடுக்கும் தேவை இல்லாது போகும். அங்கே அனாதை இல்லங்களும் இருக்காது முதியோர் இல்லங்களும் இருக்காது.

நான் விரும்புகின்ற சமூகம் போதைப்பழக்கத்தை அடியோடு வெறுக்கின்ற உயர் சமூகமாக இருக்கும். மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் அறவே இருக்காது. அறம் சார்ந்து வாழும் அச்சமூகத்தில் ஊழல் என்பது இருக்கவே இருக்காது. உண்மையும் நேர்மையும் நிறைந்த அச்சமூகத்தில் பொய், திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற சமூகக் குற்றங்கள் ஒழிந்தே போயிருக்கும். எங்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமே நிறைந்திருக்கும். அன்பும் அறிவுமே அச்சமூகத்தை வழி நடத்தும்.

நான் விரும்பும் அறம்சார் சமூகத்தில் அரசியல் செய்வோரும் நல்லவர்களாகவே இருப்பர். தேர்தல் முறையாகவே நடக்கும், வாக்குகள் விற்கவும் படாது வாங்கவும் படாது. நன்மக்கள் நிறைந்த அச்சமூகத்தை நல்லவர்கள் மட்டுமே ஆட்சி செய்வர். அச்சமூகத்தில் பொய்யான வாக்குறுதிகளும் இருக்காது பிரித்தாளும் சூழ்ச்சிகளும் இருக்காது.

நான் விரும்பும் சமூகத்தில் கல்வியும் மருத்துவமும் இலவசமாகவே கிடைக்கும், வேலைவாய்ப்பு திண்டாட்டம் எள்ளளவும் இருக்காது. உழவையும் தொழிலையும் வந்தனை செய்கின்ற சமூகமாக அச்சமூகம் இருக்கும். அங்கே மருத்துவருக்கு இருக்கும் மதிப்பு விவசாயிக்கும் இருக்கும்.

நான் விரும்பும் சமூகத்தில் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக இருக்கப்போவதில்லை. அங்கே மதிப்பெண்கள் வெறும் எண்களாக மட்டுமே மதிக்கப்படும். மனப்பாடக் கல்வி மாய்ந்து போகும், செய்முறைக் கல்வி செழித்தோங்கியிருக்கும். விருப்பமான துறைகளில் வளர்ந்தோங்கி வருவதற்கு வாய்ப்புகள் அங்கே கொட்டிக்கிடக்கும்.

நான் விரும்பும் சமூகம் நலமான சமூகம், நன்மக்கள் வாழும் நல்லதொரு சமூகம், அறிவார்ந்தோர் நிறைந்திருக்கும் அறம் சார்ந்த சமூகம், அன்பு வழி வாழுகின்ற ஆன்றோர்கள் சமூகம்.

தோழர்களே வாருங்கள், புதியதோர் உலகு செய்வோம். அன்பும் அறிவும் வழி நடத்தும் அறம்சார் சமூகம் செய்வோம்.

அனைவருக்கும் நன்றி.  

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...