Thursday 23 July 2020

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையும் குறிப்பதாகவே நான் கருத்தில் கொள்கிறேன். அறிவியலும் மூடநம்பிக்கைகளும் எக்காலத்திலும் ஒன்றுக்கொன்று எதிரானது. அத்தகைய அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பதென்பது முரணானது மட்டுமல்ல மிகுந்த வேதனையானதும் கூட.

முதலில், ஊடகங்களின் தாயாகவும் முதன்மையானதாகவும் விளங்குகின்ற திரைப்படங்களை எடுத்துக் கொள்வோம், பட பூஜையில் தொடங்கி வெளிவருவது வரை மூட நம்பிக்கைகளால் நிரம்பி வழிவது திரைப்படத்துறை, இவர்கள் வெளியிடும் திரைப்படங்கள் மட்டுமென்ன அறிவியலையும் பகுத்தறிவையுமா பேசப் போகிறது. மூடநம்பிக்கைகளை மனதில் விதைத்து அதை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்கு திரைப்படங்களுக்கே உண்டு.

பாம்பு பால் குடிப்பது, மிருகங்கள் பழிவாங்குவது, வேப்ப மரத்தில் பால் வடிவது, அம்மைக்கு மருத்துவம் பார்க்கக் கூடாதென்பது, சகுனம் பார்ப்பது, சடங்கு செய்வது, மண்சோறு தின்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, பால் குடம் எடுப்பது, காவடி தூக்குவது, குறி சொல்வது, கோடாங்கி அடிப்பது, செய்வினை செய்வது, திருஷ்டி கழிப்பது, பேய் விரட்டுவது, சாமி ஆடுவது, தாலி மஞ்சள் குங்குமம் என அழுது புலம்புவது, அப்பப்பா திரைப்படங்களால் தான் எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள் விதைக்கப்படுகின்றன. நீங்களே சொல்லுங்கள் பேய்ப் படங்களையும் சாமிப் படங்களையும் கண்டு ரசிக்காத எந்தக் குழந்தையாவது உண்டா. பிஞ்சுகளின் நெஞ்சில் மூடநம்பிக்கை எனும் நஞ்சை விதைத்து வளர்த்து வருகின்றன திரைப்படங்கள். மூட நம்பிக்கைகளை ஒழிக்க காலமெல்லாம் பரப்புரை செய்து பகுத்தறிவாளர்கள் போராடி வரும் வேளையிலே, பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து மூடநம்பிக்கைகளை வளர்த்து வருகிறது ஒரு முட்டாள் சுயநலக் கூட்டம்.

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள், ஆம் நான் சின்னத்திரை என்னும் தொலைக்காட்சியைப் பற்றித்தான் சொல்லுகிறேன். காலை எழுந்ததுமே அந்த ராசி நேயர்களே இந்த ராசி நேயர்களே என்று பொய் சொல்ல ஆரம்பித்து விடுகிறது ஏமாற்றுக் கூட்டம். இது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. 2020 சிறப்பாக இருக்கும் என்று சொன்ன யாரவது ஒரு ஜோசியர் கொரோனா வருமென்று சொன்னாரா, யாருமே சொல்ல வில்லையே. இது மட்டுமா மூடநம்பிக்கையை வளர்க்கும் புராணத் தொடர்களையும் பாம்புத் தொடர்களையும்தானே ஒளி பரப்பிக் கொண்டிருக்கின்றன அனைத்துத் தொலைகாட்சிகளும். இவற்றை விரும்பிப் பார்க்கும் சின்னஞ்சிறு குழந்தைகள் மனதில் மூடநம்பிக்கைகள் வளரத்தானே செய்யும். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை எனும் விதத்தில் அனைத்து மதங்களும் அவர்களுக்கென்று தனித்தனியாக பல தொலைக்காட்சி ஊடகங்களை வைத்துக்கொண்டு  மதக் கருத்துக்களை பரப்புகிறோம் என்று சொல்லி மூடநம்பிக்கைகளைத்தானே விதைத்து வருகின்றன. இவைகளிடமிருந்து நம் பிஞ்சுகளை எவ்வாறு காக்கப் போகிறோம்.

மூடநம்பிக்கையை வளர்ப்பதில் அச்சு ஊடகங்கள் ஒன்றும் குறைந்ததல்ல, ராசி பலன் வராத எந்த செய்தித் தாளாவது உண்டா, குழந்தைகளுக்கென வெளிவரும் மலர்களிலும் கதைப் புத்தகங்களிலும் பாட்டுகளிலும் கூட அறிவியலுக்குப் புறம்பான  மூடநம்பிகையைத்தான் விதைக்கின்றன அவை. இத்தோடு மட்டுமல்லாமல் ஆன்மிக மலர், பக்தி மலர் என மூடநம்பிக்கையை வளர்ப்பதற்கு இலவச இணைப்புகள் வேறு.

வலையொலி, முகநூல், புலனம் ஆகியவற்றை கைகளில் வைத்துக்கொண்டு, சுய சிந்தனை அற்ற தற்குறிக் கூட்டம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை, உண்மைத் தமிழனாய் இருந்தால் அதிகம் பகிரவும் என்று சொல்லி மூடக்கருத்துகளையும் மூட நம்பிக்கைகளையும் பரப்பிவருகிறதே இதனை நாம் என்னவென்று சொல்லுவது.

எதனையும் பகுத்தறிவோடும் அறிவியல் கண்ணோட்டத்தோடும் பேசி வரும் நாம் இன்னும் மிக முனைப்போடு செயல் படவேண்டியது காலத்தின் தேவை. நாம் மெத்தனமாக இருந்தால் நம் குழந்தைகளின் மனதில் மூட நம்பிக்கையை விதைத்து அதனை வளர்த்து நம் குழந்தைகளை முட்டாள்களாக மாற்றிவிடும் இந்த ஊடகங்கள்.

மூச்சு விட முடியவில்லை ( I can’t breathe)

மூச்சு விட முடியவில்லை ( I can’t breathe)

அடிமைத் தளை ஒடித்த ஆபிரகாம்லிங்கன்
அறிந்திருக்க வாய்ப்பில்லை
விடுதலைக் காற்றை சுவாசிக்க முடியாமல்
நீ வீழ்ந்து போனதை

கனவொன்றிருக்கிறது எனக்கு எனச் சொன்ன
லூதர்கிங்கிற்கு தெரியாது
வெள்ளை நிறவெறி
கழுத்தை நெரித்து கதை முடித்த வரலாறு

வரலாற்றை மறந்த சமூகத்தால்
வரலாறு படைக்கவே முடியாது எனச் சொன்ன
மால்கம் எக்ஸ் அறிந்திருக்க மாட்டார்
வெள்ளை மாளிகையை கருமேகங்கள் சூழ்ந்து
விடாது கருப்பு என வீரமுழக்கமிட்டதை.

ஜார்ஜ் பிளாய்டே! என் சோதரா!

“மூச்சு விட முடியவில்லை”
அது உன் ஒற்றைக் குரலல்ல
ஒடுக்கப்பட்டோரின் ஒட்டுமொத்தப் பெருவலி

உனக்கொன்று தெரியுமா?
எனக்கும் மூச்சு விட முடியவில்லை
மேலேறி அமர்ந்திருக்கிறது ஜாதி வெறி

உரிமையைப் பறித்தது
வெள்ளை ஆதிக்கம் உன் மண்ணில்
ஆரியம் என் மண்ணில்

போய் வா என் தோழனே!
நாளை நானாகவும் இருக்கக்கூடும்

என்றாவது ஓர் நாளில் நமது பொழுதுகள்
நாம் சொல்லித்தான் விடியும்
அதுவரை அமைதியாய் கண்ணுறங்கு

என் பார்வையில் மனிதநேயம்


என் பார்வையில் மனிதநேயம் எதுவென்று கேட்டால் நான் இப்படிச் சொல்வேன். ஒடுக்கப்பட்டோரின் பக்கமே நான் நிற்பேன் என்றுரைத்து அவர்களின் உரிமைக்காய், கல்விக்காய், வேலைவாய்ப்பிற்காய், பெண்களின் உரிமைக்காய், இழிநிலையைப் போக்குதற்காய் இறுதிவரை களம் கண்டு போராடினாரே நம் தந்தை பெரியார் அந்தப் போரட்ட குணத்தையே மனிதநேயமென்று அடித்துச் சொல்வேன் நான்.

ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பிற்காக பல சட்டங்கள் இயற்றினாரே நம் அண்ணல் அம்பேத்கர் அந்த சட்ட அறிவை நான் மனித நேயம் என்பேன்.
ஏழைத் தொழிலாளர்களின் உயர்வுக்காக அல்லும் பகலும் சிந்தித்தாரே காரல் மார்க்ஸ் அந்த சிந்தனையை மனித நேயம் என்பேன் நான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வள்ளுவத்தை, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் புறநானூற்று வரிகளை, அறம் செய விரும்பெனும் ஆத்திசூடியை, வாடிய போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகளை நான் மனித நேயம் என்றுரைப்பேன்.

வெளிநாட்டில் பிறந்திட்டாலும் இந்திய மண்ணில் வந்து தொண்டு பல செய்த அன்னை தெரசாவின் சேவையை, கருப்பின மக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மண்டேலா, லூதர்கிங், மால்கம் எக்ஸ் தியாகத்தை மனிதநேயம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்.

மனிதநேயமென்ன மரித்தா போய்விட்டது கோபத்தோடு சிலர் கேட்கக்கூடும். மனிதநேயமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சமூகத்தில் ஒரு சிறு விழுக்காடு. கல்விக்காகவும் நற்செயல்களுக்காகவும் செல்வத்தையும் பொருளையும் உழைப்பையும் அளிக்கின்ற நல்லவர்கள் சிலரே உண்டு. ஆனால் பெரும்பாலோர்?

ஆயிரம் நண்பர்களை முகநூலில் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறும் நாம் அண்டை வீட்டாரின் பெயரை அறிந்து வைத்திருக்கிறோமா? ஆதரவாய் எப்போதாவது பேசியிருக்கிறோமா? நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவோரை காணொலி எடுத்து வலைத்தளத்தில் இட்டு விருப்பக்குறி பெறுவது மனிதநேயமா? மருத்துவமனை சேர்த்து குருதி கொடுத்து உயிரைக் காப்பது மனிதநேயமா?

சம்புகனின் உயிர் பறித்த ஏகலைவன் விரல் பறித்த வர்ணாசிரமம், நீட்டின் பெயரால் அக்கா அனிதாவின் உயிர் பறித்த போதும், ஜாதியின் பெயரால் அண்ணன் வெமுலாவின் உயிர் பறித்த போதும், உங்கள் மனிதநேயம் என்ன செய்தது? எளிதாகக் கடந்து போய் வீட்டின் முகப்பறையில் அகன்ற ஒளித்திரையில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது அப்படித்தானே?

யானை இறந்து போனதற்காக கண்ணீர் விட்டு கதறி அழும் நம் மனிதநேயம் பசிக்காகத் திருடியவனை கொன்றதுதான் வரலாறு. மதத்தின் பெயரால் படுகொலைகள் நிகழ்ந்த போது மனிதநேயம் என்ன மரத்தா போனது? குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டல் புரியும் மிருக மனம் படைத்தவர்களை மனிதக் கூட்டத்தில் எப்படிச் சேர்ப்பது?

சங்கர்களும் இளவரசன்களும் கோகுல்ராஜ்களும் கொலை செய்யப்பட்டபோது போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டுதானே இருந்தது உங்கள் மனிதநேயம்? சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத மனித நேயம், தன் சுய ஜாதியிலேயே வரன் பார்த்துத் திருமணம் செய்துவைக்கத் துடிக்கும் நம் மனிதநேயம் வெட்கக்கேடானது, அது மனித அறமற்றது.

மனிதநேயம் பற்றி பேசுகையில் நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

பஞ்சமனென்றாய்
தாழ்ந்தவனென்றாய்
சூத்திரனென்றாய்
இழிபிறப்பென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
பார்த்தாலே பாவமென்றாய்
ஏகலைவன் விரலொடித்தாய்
சம்புகனின் தலை பறித்தாய்
தீண்டத்தகாதவனென்றாய்
சேரியிலே வாழவைத்தாய்
வெட்டுவேன் நாக்கையென்றாய்
ஈயம் காதில் ஊற்றுவேனென்றாய்
தகுதி திறமை இல்லையென்றாய்
இடஒதுக்கீடு எதற்கென்றாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்குள் வராதேயென்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
கொழுந்துவிட்டு எரிந்தன குடிசைகள்
நாங்கள் கதறியழும்போது
ஏனென்று கேட்காத
உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

என் பார்வையில் மனிதநேயமென்பது ஜாதி மதம் கடவுளைத் துறந்து, நிற இன மொழி பாலின வேறுபாடு களைந்து ஒவ்வொரு மனிதரும் தன் சக மனிதர்களுடன் எல்லையற்ற அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகநீதியையும் பேணுவதுதான்.

அறிவை நம்புவோம்   மனிதரை நினைப்போம்
மனிதராய் வாழுவோம் மனிதநேயம் காப்போம்.  

குடியும் கொரோனாவும்


எது நடக்காது என்றிருந்தேனோ
கடைசியில் அது நடந்தே விட்டது

அது ஒரு தனி அறை
அங்கே நானும் கொரோனாவும் மட்டும்

விட்டுவிடுமாறு கைகூப்பி கெஞ்சினேன்
நீதான் என்னைப் பிடித்தாய் என்றது

எங்கே எப்போது நிகழ்ந்ததெனக் கேட்டேன்
மதுக்கடை வாசலில் தான் என்றது அது
முகக் கவசம் அணிந்திருந்தேனே நானென்றேன்
இடுப்பு வேட்டியே உன் பேச்சைக் கேட்காதே
முகக் கவசம் மட்டும் எப்படி என்றது

குடிக்காமல் இருக்க முடியாதென்றேன்
குடித்தாலும் நீண்டநாள் இருக்க முடியாதென்றதது

தப்பிக்க வழி என்ன கேட்டது நான்
நோயெதிர்ப்பு ஆற்றல் உடலிலிருந்தால்
சாத்தியமென்றது அது

கடவுள் என்னைக் காப்பார் என்றேன்
அமைதியாய் இருந்த அந்தக் குறும்புக் கோரோனா
அறை அதிரச் சிரித்துவிட்டு
யார் அந்தக் கடவுள் என்றது

அறையை விட்டு தப்பிக்க எண்ணி
கதவைத் திறக்க வேகமாய் ஓடினேன்
அப்போதுதான் அது நிகழ்ந்தது
கட்டிலிலிருந்து தூக்கத்தில் விழுந்த நான்
கண்களைக் கசக்கி மெல்லமாய் எழுந்தேன்.


மதப் பசியெடுத்தால் மனித உயிர் தின்னும்


இந்தியப் பசுக்களும்
சைவம்தான் உண்ணும்
மதப் பசியெடுத்தால்
மனித உயிர் தின்னும்.
தும்பிக்கை நீட்டி பிச்சையெடுத்தது
நேற்று சாமி சிலை சுமந்துவந்த
அந்த வாடகை யானை.
எதிர்காலம் சொல்லும்
கிளிகளின் எதிர்காலம் ஜோசியக்காரனின்
நெல் மணிகளில்.
அமாவாசைக்கு
வடை தின்ன அழைக்கப்படும்
அந்தக் காகம்தான்
பாட்டியிடம் என்றோ திருடிய
ஒரு வடைக்காக
இன்னும் அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
எப்போதும் பலன் சொல்லும்
சமையலறைப் பல்லி
கொதிக்கும் பாலில் விழுந்தது
அந்தோ பரிதாபம்.

எத்தனை முறை குறுக்கே போனாலும்
குறைவதே இல்லை
பூனை வளர்க்கும் நடிகையின் செல்வம்.
கழுதையின் முகத்திலேயே
நாள்தோறும் விழித்தாலும்
பழைய துணியையே
துவைத்துக் கொண்டிருக்கிறார்
அந்த சலவைத் தொழிலாளி.

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...