Wednesday 26 June 2019

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


அனைவருக்கும் வணக்கம்

மெட்டுக்குக் கவி பாடிய மேட்டுக்குடி கவிஞரில்லை, புரட்டுகளைப் பாடிய வறட்டுக் கவிஞரில்லை. அவர் தமிழர் நலம் பாடிய தன்மானக் கவிஞர், பகுத்தறிவைப் பாடி நின்ற புரட்சிக்கவிஞர்.
ஆம் நான் விரும்பும் கவிஞர் பெரியாரின் தோழர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவர் பாரதிதாசன் இல்லை அந்த பாரதிக்கே ஆசான். பாரதிதாசன் தமிழ்த்தாய் தவமிருந்து பெற்றெடுத்த புரட்சிப் பாவலர்

அழகின் சிரிப்புக்காகப் பாண்டியன் பரிசு தந்தார். இருண்டவீட்டில் ஒளியேற்ற குடும்ப விளக்கேற்றி இசையமுது படைத்திட்டார். சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் நனைந்தபடி காதல் நினைவுகளுடன் எதிர்பாராத முத்தம் இனித்திடவே கொடுத்திட்டார். இளைஞர் இலக்கியமும் சிறுகாப்பியமும் படைத்து தமிழியக்கம் கண்டிட்டார். சத்திமுத்தப் புலவருடன் மணிமேகலை வெண்பா மாண்புடனே பாடிட்டார். வீரத்தாய் பாடி பெண் பெருமை பேசி நின்றார். காலமெல்லாம் கவிதைகள் பாடி புரட்சிக்கவியாக நம் கருத்தினிலே நிறைந்திட்டார்.

நம் தாய்மொழியாம் தமிழைப்பற்றி பாடுகிறார் பாவேந்தர் இப்படி
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று.
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -- இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு
தமிழ் நம் தாய்மொழி மட்டுமல்ல அது நம் உயிர். தமிழ் வாழ வேண்டும் தமிழ் வெல்ல வேண்டும்.

தமிழர் வாழ்வு சிறப்புற்று இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டார் பாரதிதாசன்
என்னருந் தமிழ்நாட்டின் கண்
     எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
     பராக்கிரமத்தால், அன்பால், 
உன்னத இமமலைபோல்
     ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
     இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? என்கிறார்.
புரட்சிக்கவிஞரின் சங்கு முழங்குவதைக் கேளுங்கள் இப்போது.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு

தமிழர்க்கு இன்னல் விளைவிப்பவருக்கு சாவு நிச்சயம் என்கிறார் பாவேந்தர்.

பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார் பாவேந்தர், பெண் குழந்தைக்கு ஒரு தாலாட்டு.
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! 
வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

பாடும் தாலாட்டிலும் பெண் குழந்தைக்கு பகுத்தறிவு பாடம் நடத்துகிறார் பாவேந்தர்.

பெண்குழந்தைக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைக்கும் இருக்கிறது ஒரு தாலாட்டு

நீதி தெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் 
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளை நோய் போல் மதத்தை கூட்டியழும் வைதீகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் 
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!

தொட்டிலில் ஆடும் ஆண் மகவிடம் சாதி மதம் ஒழிக்கச் சொல்லி ஆணை இடுகிறார் கவிஞர்.

கொலை வாளினை எடடா என்கிறார் பாவேந்தர், எதற்காக நீங்களே கேளுங்கள்.
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர் 
குணமேவிய தமிழா!
வலியோர் சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் 
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனதுதாய் மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா! 

சாதியும் மதமும் ஒழிய பகுத்தறிவு வேண்டுமென்கிறார் புரட்சிக் கவிஞர்
இருட்டறையில் உள்ள தடா உலகம்! சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே! 
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்தாள்?
சுருட்டுகின்றார் தமகையில் கிடைத்தவற்றை!
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் 
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்.
உனது மொழிப்பற்றை இழந்து உரிமைகளைத் துறந்து கழுதைகள் ஆட்சி செய்ய அனுமதிக்கின்றாயே என கோபம் கொள்கிறார் கவிஞர் உன் வீரத்தை காட்ட வெளியில் வா என அழைக்கிறார் நம்மை.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
 
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே 
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் 
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் 
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
சாதிகளையும் மதங்களையும் ஒழித்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை நீக்கி நாம் எல்லோரும் மனிதர்கள்தான் என்ற எண்ணம்கொண்டு எல்லோரையும் சொந்தமாக்கிக் கொள்ளுமாறு கவி பாடுகிறார் புரட்சிக்கவி. 

எங்கும் பாரடா இப்புவி மக்களை! 
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'
என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு! 
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! 
புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ள அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

பாவேந்தரவர் பாடாத பொருள் இல்லை அதனால்தான் அவர் பாடுபொருளாய் நிற்கின்றார் பாரினிலே 

அவர்
அறுவடையைப் பாடினார்
ஆணவத்தைச் சாடினார்

கடலை விரியவைத்தார்
கானகத்தைப் புரியவைத்தார்

கைம்பெண்ணை நிமிரவைத்தார்
கைம்மைப்பழியைத் தீரவைத்தார்

பெண்ணுரிமைக் கொடிபிடித்தார்
போர்முரசு கொட்டவைத்தார்

மயிலை ஆடவைத்தார்
மாங்குயிலைக் கூவவைத்தார்

முல்லையைச் சிரிக்கவைத்தார்
மூடத்தை முடங்கவைத்தார்

நிலவைப் பேசவைத்தார்
நேயத்தை அரவணைத்தார்

சிறுத்தையைச் சீறவைத்தார்
சாதித்தீயை அணையவைத்தார்

பெரியாரின் வழிசென்றார்
பகுத்தறிவு பேசிநின்றார்

புரட்சிக்கவிஞரவர்
வாழ்க பல்லாண்டு
வாழ்க தமிழ், நன்றி வணக்கம்

இன்றைய தலைமுறை இழந்தது என்ன?

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற தலைமுறைக்கு பள்ளி விடுமுறையென்று ஒன்று இருந்தது, அவர்களுக்கு கிராமத்தில் ஆயா வீடோ அப்பத்தா வீடோ ஒன்று இருந்தது. அங்கே பச்சைப்பசேலென்ற வயல்கள் இருந்தன, ஊர் முழுவதும் மரங்கள் இருந்தன. தூய்மையான காற்றும் இருந்தது, மரங்களில் ஊஞ்சலும் இருந்தது. ஓடி விளையாட பெரிய பொட்டலும் இருந்தது, நீச்சலடித்து குளிக்க கண்மாய் இருந்தது, அங்கே கோவில்கள் இருந்தன திருவிழாக்களும் இருந்தன, பலூன்களும் வண்ண வண்ண கண்ணாடிகளும் கூடவே குச்சி ஐஸ்களும் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சி இருந்தது.

இந்த தலைமுறையில் எங்களுக்கும் பள்ளி விடுமுறையென்று ஒன்று இருக்கிறது. நாங்கள் செல்வதற்கு கணினி வகுப்புகள் இருக்கிறது, தனிப் பயிற்சி வகுப்புகள் இருக்கிறது, நீச்சல் பயில வகுப்பு இருக்கிறது, பாட்டு கற்கவும் இசை கற்கவும் கூட வகுப்புகள் இருக்கின்றன. இந்தி கற்க, பேச்சு ஆங்கிலம் பயிலவும் வகுப்புகள் இருக்கின்றன.

சென்ற தலைமுறையினர் குழந்தை வயதில் குழந்தைகளாகவும்  சிறுவயதில் சிறுவர்களாகவும் வளர்வதற்கு வரமளிக்கப்பட்டவர்கள். நாங்கள் இரண்டு வயதிலேயே பள்ளி செல்வதற்கும் குழந்தையிலேயே மேதையாகித் தொலைவதற்கும் என சபிக்கப்பட்டவர்கள்
சென்ற தலைமுறைக்கென ஏராளமான விளையாட்டுகள் இருந்திருக்கின்றன, ஆனால் அதுபற்றி எதுவுமே தெரியாது எங்களுக்கு. பட்டம் விட்டதில்லை நாங்கள், பம்பரம் சுற்றத் தெரியாது, கோலிக்குண்டு அடித்ததில்லை, கிட்டிப்புள் தெரியாது, மரக்குரங்கு ஏறியது இல்லை, ஒளிந்து பிடித்து ஆடியது இல்லை. சொக்கட்டான், தாயம், பல்லாங்குழி, பாண்டி ஒன்று கூட அறிந்ததில்லை.

எங்கள் விளையாட்டரங்கம் வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே இருக்கிறது, வீடியோ கேம்சிலும் செல்போனிலுமே முடிந்துவிடுகிறது எங்கள் விளையாட்டு, எங்களுக்கும் நண்பர்கள் உண்டு ஆனால் சேர்ந்துதான் விளையாடியதில்லை. விளையாட்டுக்குக் கூட விளையாடியதில்லை வெளியில் சென்று, விளையாடி வியர்த்ததும் இல்லை, வியர்க்க வியர்க்க விளையாடியதும் இல்லை.வெளியில் சென்று விளையாடச் சொல்வார்களாம் அப்போது, வெளியில் என்ன விளையாட்டு வீட்டிற்குள் வா என்கிறார்கள் இப்போது. ஆம் நாங்கள் தொட்டிகளில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள், பறக்கத் தெரியாத பிராய்லர் கோழிகள், மதிப்பெண்ணைச் சொல்லியே வளர்க்கப்படும் மதிப்பிகுரியவர்கள். இனி எங்கள் பெயரை மறந்து விட்டு பெற்ற மதிப்பெண்களை சொல்லியே அழைப்பார்கள் போலிருக்கிறது.

அப்போது பெரிய வீடுகள் இருந்திருக்கின்றன, அதில் பாட்டி தாத்தா, அம்மா அப்பா, பெரியப்பா பெரியம்மா, சின்னம்மா சித்தப்பா, அண்ணன் அக்கா, தம்பி தங்கை என நிறைந்திருக்கிறது வீடு, கேலியும் கிண்டலும் இருந்திருக்கிறது அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் கூட, ஒன்றாகவே சமைத்து ஒன்றாகவே உண்டும் இருக்கிறார்கள். நிலா வெளிச்சத்தில் நிலாச்சோறு உண்பார்களாம் படித்திருக்கிறேன் நானும். வசதி வாய்ப்பு குறைவாக இருந்த போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவாகவே இருந்திருக்கிறது அப்போது.

இப்போதும் வீடுகள் பெரிதாகவே இருக்கின்றன அதில் பாட்டி தாத்தா இல்லை, அம்மா அப்பா பிள்ளை ஒன்று அதிகம் போனால் இரண்டு. அம்மாவும் அப்பாவும் செல்கிறார்கள் வேலைக்கு பள்ளியிலிருந்து திரும்பும் எங்களை வரவேற்கிறது பூட்டு, உள்ளே சென்றமர்ந்து மோட்டை வெறிப்போம் இல்லையென்றால் தொலைக்காட்சிப் பெட்டியை முறைப்போம். அம்மா அப்பா வருவார்கள் முத்தம் தந்து தலையை தடவுவார்கள் என்று காத்திருப்போம் வந்ததும் தடவுவார்கள் செல்போனை, பேச வேண்டியவர்கள் பேசாமல் இருக்க பேச முடியாத விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன எங்களோடு கார்ட்டூன் சேனலில்.

சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு பாட்டியும் தாலாட்டும் கிடைத்திருக்கின்றன. ஆனால் எங்களோடு பாட்டிகள் இல்லை, பாட்டிகள் இருந்தாலும் அவர்களிடம் தாலாட்டு இல்லை, எங்கே தாலாட்டுப் பாடினால் தூங்கும் குழந்தை எழுந்துவிடுமோவென பாடுவதில்லை போல. அப்போது தாத்தாக்களும் பாட்டிகளும் பெரிய கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய தாத்தா பாட்டிகளுக்கு சொல்வதற்கு கதைகள் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சரவணன் மீனாட்சி கதைகளும் ராஜா ராணி கதைகளும் தான். அவர்களுக்காவது இளையராஜா இருந்திருக்கிறார் எங்களுக்கு வெறும் டங்கா மாரி ஊதாரி புட்டுக்கிட்ட நீ நாறி மட்டும் தான்.

வகை வகையான சுவையான தின்பண்டங்களும் ஆரோக்கியமான உணவுகளும் இருந்திருக்கின்றன அப்போது, எங்களுக்கு சிப்சும் பர்கரும் தான், இழுத்தாலும் வராத பீட்சாவிலும் அஜினோமோட்டோ நிறைந்த ப்ரைட் ரைஸிலும் நூடுல்சுகளின் சிக்கல்களிலும் எங்கள் உடல் நலத்தை தொலைத்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.

பெரியார்,அண்ணா,காமராஜர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் சென்ற தலைமுறைக்கு. ஆனால் எங்களுக்கு வாய்த்ததெல்லாம், சொல்வதற்கு எதுவுமில்லை.

எங்கள் அம்மாக்கள் சிறுவயதில் அந்த வயதுக்கே உரிய அப்பாவித்தனத்தோடு பயமின்றி சுற்றித் திரிந்திருக்கிறார்கள் அப்போது ஆனால் எங்கள் தலைமுறைக்கு தினந்தோறும் ஆசிஃபாக்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் எங்கள் தலைமுறை நடுநடுங்கியபடியே செல்கிறது எங்கேயும் காமவெறி பிடித்த கயவர்களுக்கு பயந்து.

இந்த தலைமுறைக்கு பொருளாதாரமும் வசதிவாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் சென்ற தலைமுறையிடம் இருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லை, அதுவும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை


இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா? மிகுந்தே இருக்கிறது இதுவே என் கருத்து.

சமுதாய அக்கறை இல்லாமல் ஒரு சில இளைஞர்கள் இருப்பதாக வேண்டுமானால் சொல்லலாம் ஆனால் மிகுதியான இளைஞர்கள் சமுதாய அக்கறை மிகுந்தே உள்ளனர்.

பள்ளி கல்லூரிகளில் படிக்கும்போதே இளைஞர்களின் சமுதாய அக்கறை தொடங்கிவிடுகிறது. என்.எஸ்.எஸ். என்.சி.சி போன்றவற்றில் சேர்ந்து சமுதாயத் தொண்டாற்ற தொடங்கி விடுகின்றனர். கல்லூரி காலங்களில் கிராமங்களுக்குச் சென்று ஆறு,குளம்,கண்மாய்,ஏரி ஆகியற்றை தூர்வாரி மக்களுக்கு உதவுவது சமுதாய அக்கறையினால் தானே.

இன்றைய இளைஞர் சமுதாயம் பிறருக்கு உதவும் மனப்பான்மையை அதிகம் கொண்டுள்ளது. புயல் வெள்ளம் பெருமழை, நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் ஜாதி மத பேதம் இன்றி இளைஞர்கள் ஓடி ஓடி உதவுவது சமுதாயத்தின் மீதுள்ள அக்கறை மிகுந்திருப்பதாலா குறைந்திருப்பதாலா நீங்களே சொல்லுங்கள்.

இன்றைய இளைஞர்கள்தான் உயிர்காக்கும் பணிகளில் அதிகமாக ஈடுபடுகின்றனர். விபத்துக் காலங்களில் இரத்ததானம் செய்ய முண்டியடித்துக்கொண்டு வருவது இளைஞர் கூட்டம் தானே, அதற்குக் காரணம் சமுதாய அக்கறை இல்லாமல் வேறென்ன, இரத்ததானம் செய்கின்ற ஆர்வம் அவர்களுக்கு கல்லூரி காலங்களிலேயே தொடங்கி விடுகிறது. உடல் உறுப்பு தானங்களில் அதிகம் ஆர்வம் காட்டுவதும் இளைஞர்கள்தான். இப்போது சொல்லுங்கள் இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்திருக்கிறதா இல்லையா என்று.

இன்றைக்கும் படித்த இளைஞர்கள் கிராமங்களில் மாலை நேர வகுப்புகள் நடத்தி கல்வி அறிவை வளரச் செய்வதற்கு சமூக அக்கறை ஒன்றே காரணம் அல்லவா, தன்னார்வ மிகுதியால் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்கின்ற இளைஞர்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.
நகரை தூய்மைப்படுத்துதலிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களிலும் தன்னார்வத் தொண்டர்களாய் ஈடுபடும் இளைஞர்களின் சமூக அக்கறையை அறிந்ததில்லையா நீங்கள்.

வரதட்சணை வாங்க மாட்டோம், சாதி மதத்தை மறுப்போம் என்ற குறிக்கோளோடு மணம் முடிக்கும் இளைஞர்கள் கூட்டம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இது சமூக அக்கறை இல்லையா
அரசு வேலையை மட்டும் நம்பிக்கொண்டிராமல் தாமாகத் தொழில் தொடங்கி எண்ணற்ற வேலையற்ற இளைஞர்களுக்கு வேலை தருவதையும் நாம் சமுதாய அக்கறையில்தானே சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் பொதுப் பிரச்சனைகளில் ஒன்றுகூட மாட்டார்கள் என்ற கருத்தை உடைத்தது ஜல்லிக்கட்டு போராட்டம், இளைஞர்களின் ஒற்றுமையை உலகுக்கே உணர்த்தியது அப்போராட்டம், தன்னெழுச்சியாக கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழர் மரபை மீட்டெடுப்பதற்காக கடைசி வரை களத்தில் நின்று போராடி உரிமையை மீட்டுத்தந்தது சமுதாய அக்கறை இல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்.

எனக்கு ஒரு சிறு வருத்தம், மாட்டுக்காக கூடிய கூட்டம் நீட்டுக்காக கூடாமல் போனதேனோ, நீட்டுக்காகக் கூடியிருந்தால் சகோதரி அனிதா நம்மோடு இருந்திருப்பார்.

இன்றைய இளைஞர்களின் சமுதாய அக்கறை மிகுந்தே இருந்தாலும் ஒரு சில இளைஞர்கள் சமுதாய அக்கறை இன்றி ஜாதி மத வெறியோடும், போதைப் பழக்கத்திற்கு அடிமையாகவும், திரைக் கலைஞர்களின் மாயக் கவர்ச்சியாலும் பாதை மாறி பயணம் செய்வது கவலை கொள்ள வைக்கிறது. அவர்களும் நல்வழிக்கு திரும்பி சமுதாய அக்கறை கொண்டால் நம் தமிழ்ச் சமுதாயம் உயர்ந்த வாழ்வும் வளமும் பெறும் என்பது உறுதி.

நான் விரும்பும் சமூகம்


நான் விரும்பும் சமூகம் எதுவென்று தெரியுமா உங்களுக்கு? அது தந்தைப் பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் காண விரும்பிய சமூகநீதிச் சமூகம், காரல் மார்க்ஸ் விரும்பிய சமச்சீர் சமூகம்.

நான் விரும்பும் சமூகம் எப்படிப்பட்டதென அறிவீர்களா நீங்கள்? அங்கே உயர்வு தாழ்வு கற்பிக்கும் நால்வர்ணங்கள் இருக்காது. சாதியும் மதமும் இருக்கவே இருக்காது, சாதியும் மதமும் இல்லாச் சமூகத்தில் சாதிமதச் சண்டைகள் மட்டும் எப்படி இருக்கும். அங்கே உயிர்கள் பறிக்கப்படாது, இரத்தம் சிந்தப்படாது, குடிசைகள் கொளுத்தப்படாது, தீண்டாமையென்பது கண்டிப்பாக இருக்காது. ஆணவக் கொலைகள் அறவே நடக்காது.

நான் விரும்பும் சமூகத்தில் என் பாட்டன் சம்பூகனும் ஏகலைவனுமே ஆசிரியர்களாக இருப்பார்கள். அங்கே எங்கள் அக்கா அனிதாவும் பிரதீபாவும் மருத்துவம் படிப்பார்கள், நானும் கூட மருத்துவம் படிப்பேன். எங்கள் மருத்துவக் கனவுகள் அங்கே யாராலும் சிதைக்கப்படாது. அச்சமூகத்தில் எங்கள் அண்ணன் வெமூலா உயர் பதவி வகிப்பார்.
எங்கள் தெருக்களில் ஆசிபாவும் ஹாசினியும் எந்த பயமும் இன்றி சுதந்திரமாகச் சுற்றித் திரிவார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து ஓடிப்பிடித்து விளையாடுவேன். பெண் பிள்ளைகளான எங்களை நினைத்து எங்களைப் பெற்றவர்கள் பயந்து பயந்தே வாழ வேண்டிய தேவை இல்லாதிருக்கும்.

நான் விரும்பும் சமூகம் ஏழை பணக்காரன் என்ற வர்க்கங்கள் ஒழிந்து எல்லோரும் செல்வச் செழிப்புடன் வாழ்கின்ற சமூகமாக இருக்கும், அங்கே நிற வேற்றுமை இருக்காது, அச்சமூகம் பாலின சமத்துவம் தழைத்தோங்கும் சமூகமாக இருக்கும்.

நான் விரும்பும் சமூகம் அய்யா அண்ணல் வழியில் நடக்கின்ற அறிவார்ந்த சமூகமாக இருக்கும், அங்கே பெண்கள் எல்லாம் உயர்க்கல்வி கற்று கல்வியிலும் வேலையிலும் மேன்மையுற்று திகழ்வார்கள்.

நான் விரும்பும் சமூகத்தில் தமிழே ஆட்சி மொழியாக இருக்கும். சாலைகள் தோறும் கல்விச்சாலைகள் தோறும் தமிழே இருக்கும் தமிழ் மட்டுமே இருக்கும். சட்டமன்றம் முதல் நீதிமன்றம் வரை தமிழே முழங்கும். பொருளாதாரம் முதல் பொறியியல் வரை அறிவியல் முதல் மருத்துவம் வரை அனைத்தையும் தமிழிலியே கற்கலாம். அனைத்து கலைச் சொற்களும் எங்கள் தாய்த் தமிழ் மொழியிலே இருக்கும். அயல்மொழி மோகம் அடியோடு அழிந்து போகும். இல்லாதவன் தானடா இரவல் வாங்குவான் செழுந்தமிழ் இருக்க ஏனடா அயல்மொழி என்ற நிலையே அச்சமூகத்தில் இருக்கும்.

நான் விரும்பும் சமூகத்தில் தனிமனித ஒழுக்கமே சிறந்து விளங்கும். அங்கே குழந்தைகளுக்கு அறத்தின் வழியே பொருளீட்டி இன்பமோடு வாழ சொல்லித்தரப்படும். குழந்தைகள் பாலின வேறுபாடின்றி வளர்க்கப்படுவார்கள். ஆண்கள் தங்களைப் போன்ற சக உயிராக பெண்களை மதிக்கும் அச்சமூகத்தில், பெண்களுக்கு மட்டுமே கலாச்சார வகுப்பெடுக்கும் தேவை இல்லாது போகும். அங்கே அனாதை இல்லங்களும் இருக்காது முதியோர் இல்லங்களும் இருக்காது.

நான் விரும்புகின்ற சமூகம் போதைப்பழக்கத்தை அடியோடு வெறுக்கின்ற உயர் சமூகமாக இருக்கும். மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் அறவே இருக்காது. அறம் சார்ந்து வாழும் அச்சமூகத்தில் ஊழல் என்பது இருக்கவே இருக்காது. உண்மையும் நேர்மையும் நிறைந்த அச்சமூகத்தில் பொய், திருட்டு, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு போன்ற சமூகக் குற்றங்கள் ஒழிந்தே போயிருக்கும். எங்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமே நிறைந்திருக்கும். அன்பும் அறிவுமே அச்சமூகத்தை வழி நடத்தும்.

நான் விரும்பும் அறம்சார் சமூகத்தில் அரசியல் செய்வோரும் நல்லவர்களாகவே இருப்பர். தேர்தல் முறையாகவே நடக்கும், வாக்குகள் விற்கவும் படாது வாங்கவும் படாது. நன்மக்கள் நிறைந்த அச்சமூகத்தை நல்லவர்கள் மட்டுமே ஆட்சி செய்வர். அச்சமூகத்தில் பொய்யான வாக்குறுதிகளும் இருக்காது பிரித்தாளும் சூழ்ச்சிகளும் இருக்காது.

நான் விரும்பும் சமூகத்தில் கல்வியும் மருத்துவமும் இலவசமாகவே கிடைக்கும், வேலைவாய்ப்பு திண்டாட்டம் எள்ளளவும் இருக்காது. உழவையும் தொழிலையும் வந்தனை செய்கின்ற சமூகமாக அச்சமூகம் இருக்கும். அங்கே மருத்துவருக்கு இருக்கும் மதிப்பு விவசாயிக்கும் இருக்கும்.

நான் விரும்பும் சமூகத்தில் மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரங்களாக இருக்கப்போவதில்லை. அங்கே மதிப்பெண்கள் வெறும் எண்களாக மட்டுமே மதிக்கப்படும். மனப்பாடக் கல்வி மாய்ந்து போகும், செய்முறைக் கல்வி செழித்தோங்கியிருக்கும். விருப்பமான துறைகளில் வளர்ந்தோங்கி வருவதற்கு வாய்ப்புகள் அங்கே கொட்டிக்கிடக்கும்.

நான் விரும்பும் சமூகம் நலமான சமூகம், நன்மக்கள் வாழும் நல்லதொரு சமூகம், அறிவார்ந்தோர் நிறைந்திருக்கும் அறம் சார்ந்த சமூகம், அன்பு வழி வாழுகின்ற ஆன்றோர்கள் சமூகம்.

தோழர்களே வாருங்கள், புதியதோர் உலகு செய்வோம். அன்பும் அறிவும் வழி நடத்தும் அறம்சார் சமூகம் செய்வோம்.

அனைவருக்கும் நன்றி.  

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...