Wednesday 26 June 2019

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்


அனைவருக்கும் வணக்கம்

மெட்டுக்குக் கவி பாடிய மேட்டுக்குடி கவிஞரில்லை, புரட்டுகளைப் பாடிய வறட்டுக் கவிஞரில்லை. அவர் தமிழர் நலம் பாடிய தன்மானக் கவிஞர், பகுத்தறிவைப் பாடி நின்ற புரட்சிக்கவிஞர்.
ஆம் நான் விரும்பும் கவிஞர் பெரியாரின் தோழர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவர் பாரதிதாசன் இல்லை அந்த பாரதிக்கே ஆசான். பாரதிதாசன் தமிழ்த்தாய் தவமிருந்து பெற்றெடுத்த புரட்சிப் பாவலர்

அழகின் சிரிப்புக்காகப் பாண்டியன் பரிசு தந்தார். இருண்டவீட்டில் ஒளியேற்ற குடும்ப விளக்கேற்றி இசையமுது படைத்திட்டார். சஞ்சீவி பர்வதத்தின் சாரலில் நனைந்தபடி காதல் நினைவுகளுடன் எதிர்பாராத முத்தம் இனித்திடவே கொடுத்திட்டார். இளைஞர் இலக்கியமும் சிறுகாப்பியமும் படைத்து தமிழியக்கம் கண்டிட்டார். சத்திமுத்தப் புலவருடன் மணிமேகலை வெண்பா மாண்புடனே பாடிட்டார். வீரத்தாய் பாடி பெண் பெருமை பேசி நின்றார். காலமெல்லாம் கவிதைகள் பாடி புரட்சிக்கவியாக நம் கருத்தினிலே நிறைந்திட்டார்.

நம் தாய்மொழியாம் தமிழைப்பற்றி பாடுகிறார் பாவேந்தர் இப்படி
தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று.
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு -- இன்பத்
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு
தமிழ் என்று தோள் தட்டி ஆடு! நல்ல
தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு
தமிழ் நம் தாய்மொழி மட்டுமல்ல அது நம் உயிர். தமிழ் வாழ வேண்டும் தமிழ் வெல்ல வேண்டும்.

தமிழர் வாழ்வு சிறப்புற்று இருக்க வேண்டுமென்று ஆசை கொண்டார் பாரதிதாசன்
என்னருந் தமிழ்நாட்டின் கண்
     எல்லோரும் கல்விகற்றுப்
பன்னறும் கலைஞானத்தால்,
     பராக்கிரமத்தால், அன்பால், 
உன்னத இமமலைபோல்
     ஓங்கிடும் கீர்த்தி எய்தி
இன்புற்றார் என்று மற்றோர்
     இயம்பக் கேட்டிடல் எந்நாளோ? என்கிறார்.
புரட்சிக்கவிஞரின் சங்கு முழங்குவதைக் கேளுங்கள் இப்போது.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
பொங்கு தமிழர்க் கின்னல் விளைத்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு

தமிழர்க்கு இன்னல் விளைவிப்பவருக்கு சாவு நிச்சயம் என்கிறார் பாவேந்தர்.

பிறந்த குழந்தைக்கு தாலாட்டு பாடுகிறார் பாவேந்தர், பெண் குழந்தைக்கு ஒரு தாலாட்டு.
தெய்வீகத்தை நம்பும் திருந்தாத பெண்குலத்தை
உய்விக்க வந்த உவப்பே! பகுத்தறிவே!
எல்லாம் கடவுள் செயல் என்று துடைநடுங்கும்
பொல்லாங்கு தீர்த்துப் புதுமைசெய வந்தவளே! 
வாயில்இட்டுத் தொப்பை வளர்க்கும் சதிக்கிடங்கைக்
கோயிலென்று காசுதரும் கொள்கை தவிர்ப்பவளே!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

பாடும் தாலாட்டிலும் பெண் குழந்தைக்கு பகுத்தறிவு பாடம் நடத்துகிறார் பாவேந்தர்.

பெண்குழந்தைக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைக்கும் இருக்கிறது ஒரு தாலாட்டு

நீதி தெரியும் என்பார் நீள்கரத்தில் வாளேந்திச் 
சாதியென்று போராடும் தக்கைகளின் நெஞ்சில்
கனலேற்ற வந்த களிறே, எனது
மனமேறு கின்ற மகிழ்ச்சிப் பெருங்கடலே!
அள்ளும் வறுமை அகற்றாமல் அம்புவிக்குக்
கொள்ளை நோய் போல் மதத்தை கூட்டியழும் வைதீகத்தைப்
போராடிப் போராடிப் பூக்காமல் காய்க்காமல் 
வேரோடு பேர்க்கவந்த வீரா, இளவீரா!

தொட்டிலில் ஆடும் ஆண் மகவிடம் சாதி மதம் ஒழிக்கச் சொல்லி ஆணை இடுகிறார் கவிஞர்.

கொலை வாளினை எடடா என்கிறார் பாவேந்தர், எதற்காக நீங்களே கேளுங்கள்.
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செயல் அறவே
குகைவாழ்ஒரு புலியேஉயர் 
குணமேவிய தமிழா!
வலியோர் சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல் 
நிலையாம் எனும் நினைவா?
உலகாள உனதுதாய் மிக
உயிர்வாதை யடைகிறாள்;
உதவாதினி ஒருதாமதம்
உடனே விழி தமிழா! 

சாதியும் மதமும் ஒழிய பகுத்தறிவு வேண்டுமென்கிறார் புரட்சிக் கவிஞர்
இருட்டறையில் உள்ள தடா உலகம்! சாதி
இருக்கின்ற தென்பானும் இருக்கின் றானே! 
மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே!
வாயடியும் கையடியும் மறைவ தெந்தாள்?
சுருட்டுகின்றார் தமகையில் கிடைத்தவற்றை!
சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார் தம்மை
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின் 
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்.
உனது மொழிப்பற்றை இழந்து உரிமைகளைத் துறந்து கழுதைகள் ஆட்சி செய்ய அனுமதிக்கின்றாயே என கோபம் கொள்கிறார் கவிஞர் உன் வீரத்தை காட்ட வெளியில் வா என அழைக்கிறார் நம்மை.

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
 
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே 
சிம்புட் பறவையே சிறகை விரி, எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத் 
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி

நமக்குள் உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும் 
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
சாதிகளையும் மதங்களையும் ஒழித்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை நீக்கி நாம் எல்லோரும் மனிதர்கள்தான் என்ற எண்ணம்கொண்டு எல்லோரையும் சொந்தமாக்கிக் கொள்ளுமாறு கவி பாடுகிறார் புரட்சிக்கவி. 

எங்கும் பாரடா இப்புவி மக்களை! 
பாரடா உனது மானிடப் பரப்பை!
பாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்!
'
என்குலம்' என்றுனைத் தன்னிடம் ஒட்டிய
மக்கள் பெருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்!
அறிவை விரிவுசெய்! அகண்டமாக்கு! 
விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
அணைந்துகொள்! உன்னைச் சங்கம மாக்கு.
மானிட சமுத்திரம் நானென்று கூவு!
பிரிவிலை எங்கும் பேதமில்லை
உலகம் உண்ணஉண்! உடுத்த உடுப்பாய்! 
புகல்வேன் உடைமை மக்களுக்குப் பொது
புவியை நடத்துப் பொதுவில் நடத்து!
வானைப் போல மக்களைத் தாவும்
வெள்ள அன்பால் இதனைக்
குள்ள மனிதர்க்கும் கூறடா தோழனே!

பாவேந்தரவர் பாடாத பொருள் இல்லை அதனால்தான் அவர் பாடுபொருளாய் நிற்கின்றார் பாரினிலே 

அவர்
அறுவடையைப் பாடினார்
ஆணவத்தைச் சாடினார்

கடலை விரியவைத்தார்
கானகத்தைப் புரியவைத்தார்

கைம்பெண்ணை நிமிரவைத்தார்
கைம்மைப்பழியைத் தீரவைத்தார்

பெண்ணுரிமைக் கொடிபிடித்தார்
போர்முரசு கொட்டவைத்தார்

மயிலை ஆடவைத்தார்
மாங்குயிலைக் கூவவைத்தார்

முல்லையைச் சிரிக்கவைத்தார்
மூடத்தை முடங்கவைத்தார்

நிலவைப் பேசவைத்தார்
நேயத்தை அரவணைத்தார்

சிறுத்தையைச் சீறவைத்தார்
சாதித்தீயை அணையவைத்தார்

பெரியாரின் வழிசென்றார்
பகுத்தறிவு பேசிநின்றார்

புரட்சிக்கவிஞரவர்
வாழ்க பல்லாண்டு
வாழ்க தமிழ், நன்றி வணக்கம்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...