Monday 25 February 2019

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் - வர்ணாசிரம தர்மமும்

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் - வர்ணாசிரம தர்மமும்
---------------------------------------------------------------------------------------------
அன்றொரு நாள் காட்டில் தன்னந்ததனியாக தவம்(கல்வி) புரிந்துகொண்டிருந்தான் சம்பூகன். சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என்பதுதானே பார்ப்பன தர்மம், அந்த தர்மத்தை ராமனிடம் சொன்னான் ஒரு பார்ப்பான் அதைக்கேட்டு சம்பூகனின் தலையை வெட்டினான் ராமன். பார்ப்பான் சொன்னான் அரசன் செய்தான்.
அன்றொரு நாள் வில்வித்தையில் சிறந்தவனாய் இருந்தான் ஏகலைவன், சூத்திரனுக்கு வித்தைகள் எதற்கு? விரலைக் கேட்டான் துரோணன் எனும் பார்ப்பான் வெட்டிக்கொடுத்தான் ஏகலைவன். கொடுக்காது இருந்தால் வெட்டியிருப்பான் அர்ஜுனன்.
அன்றொரு நாள் ஆங்கிலேயன் கல்வி தந்தான் சூத்திரனுக்கு, சம்பூகனின் பேரன்களும் ஏகலைவனின் பேத்திகளும் கல்வி கற்றனர். தாங்கமுடியாத கோபத்தோடு காலம் மாறுமெனக் காத்திருந்தது பார்ப்பனியம்.
அன்றொரு நாள் ஆட்சி செய்யும் வாய்ப்பு பார்ப்பனியத்திற்கு வந்தது. பள்ளிகள் இருப்பதால் தானே சூத்திரன் படிக்கிறான் என பள்ளிகளை மூடி குலக்கல்வியை கொண்டுவந்தது அது. அதனை எதிர்த்து கலகம் செய்தான் ஈரோட்டுக் கிழவன், இடஒதுக்கீட்டுக்கு தடை கொண்டுவர முயன்றது பார்ப்பனியம் அப்போதும் களத்தில் இறங்கிப் போராடினான் அந்தக் கிழவன். கிழவனிடம் தோற்ற பார்ப்பனியம் மீண்டும் ஒரு வசந்தகாலம் வருமெனக் காத்துக்கிடந்தது.
அன்றொரு நாள் அனிதா எனுமொரு ஏகலைவனின் பேத்தி 1176 மதிப்பெண் எடுத்தவள் மருத்துவம் படிக்கப் போகிறேன் என்றாள். இனிமேலும் சூத்திரன் மருத்துவம் படிப்பதை அனுமதிக்க இயலாது என பார்ப்பன மூளை பயங்கரமாய் யோசித்தது. ஆளுகின்றவன் கையில் நீட்டைக் கொடுத்தது. நீட்டை எடுத்து அனிதாவிடம் நீட்டி உன் உயிரைக்கொடு என்றான் ஆளுபவன், ஏகலைவனின் பேத்தியல்லவா கேட்டதும் அவளும் கொடுத்துவிட்டாள்.
இன்றொரு நாள் இப்படி யோசித்தது பார்ப்பனியம், மேல்நிலைப் பள்ளி போவதால் தானே சூத்திரன் மேற்படிப்பு படிக்கிறான் 5,8 வகுப்புகளோடு பள்ளியில் இருந்தே துரத்திவிட்டால்... ஆளுபவனின் கையில் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் வஞ்சக திட்டத்தைக் கொடுத்துவிட்டான் பார்ப்பான், பார்ப்பானின் பேச்சுக்கு மறுப்பேது. ஆளுபவன் கொண்டுவந்து திணித்து விட்டான். பார்ப்பான் சொல்லுவான் ஆளுபவன் அதை உடனே செய்வான் அதுவே காலம் காலமாய் இங்கு நடக்கும் வர்ணாசிரம வரலாறு.
க.ம.மணிவண்ணன்

பள்ளிகளும் – பாதபூஜையும்

பள்ளிகளும் – பாதபூஜையும்
--------------------------------------------
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நெருங்கி வரும் சூழலில் சில பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று தேர்வு பெறவேண்டும் என்பதற்காக மாணவர்களைக் கொண்டு அவர்களின் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாதபூஜை நடைபெற்று வருகிறது. இந்த அர்த்தமற்ற சடங்குகளின் மூலமாக பள்ளி நிர்வாகம் மாணவர்களின் மனதில் விதைக்க நினைப்பது என்ன?
1) ஆசிரியர்களும் பெற்றோர்களும் மரியாதைக்குரியவர்கள் என்பதை மாற்றி வழிபாட்டுக்குரியவர்கள் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் ஏற்படுத்த முனைகிறார்களா?
2) பூஜை,சடங்கு,யாகம் இவற்றின் மூலம் உழைக்காமலேயே எளிதில் வெற்றி பெறலாம் என்ற மூடநம்பிகையை மாணவர்கள் மனதில் ஏற்படுத்த முயலுகிறார்களா?
3) அறிவியலையும் பகுத்தறிவையும் மதச்சார்பின்மையும் போதிக்க வேண்டிய கல்வி நிறுவனங்கள் அதை விடுத்து ஒரு குறிப்பிட்ட மதம்சார்ந்த அர்த்தமற்ற சடங்குகளை வலிந்து திணிப்பது, மாணவர்கள் மனதில் மதமும் மதம்சார்ந்த சடங்குகளும் மிகவும் புனிதமானது என்ற முட்டாள்த் தனத்தை புகுத்துவதற்கு செய்யப்படும் முயற்சியா?
க.ம.மணிவண்ணன்

மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய அறிவியலாளர் - கலீலியோ கலிலி

மதவாதிகளின் சிம்மசொப்பனமாக விளங்கிய அறிவியலாளர் - கலீலியோ கலிலி பிறந்தநாள் பிப்ரவரி 15
வானத்தை பாருங்கள், அது உண்மையைச் சொல்லும்.
டெலஸ்கோப் மிகவும் நம்பகமானது. போப்பைக் காட்டிலும்
- கலீலியோ கலிலி
500 ஆண்டுகளுக்கு முன்புவரை பூமிதான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்றும், நிலாவும் சூரியனும் பூமியை சுற்றுகின்றன என்றும் உலகம் நம்பிக்கொண்டிருந்தது. அது பொய் சூரியனை சுற்றிதான் அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்ற உண்மையை துணிந்து சொன்னதற்காக மதவாதிகளால் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தவர்தான் வானியல் அறிஞர் கலீலியோ கலிலி.
மக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற அறிஞர் கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், "மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.
ஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது.
1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது.
இந்த நிலையில்தான் கலீலியோ “சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன” என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.
கலீலியோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனவும் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில், "உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது.'' Pslam 104: 5 இல் "கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது'' என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். "பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை'' எனக்கூறி அதனை மறுத்தார். அதற்காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.
அந்தக்காலகட்டத்தில் சர்வ வல்லமை பெற்றிருந்தன தேவாலாயங்கள். நாட்டை அரசன் ஆண்டாலும் அந்த அரசனையும் ஆளும் வல்லமை தேவாலாயங்களுக்கு இருந்தன. 1615-ஆம் ஆண்டில் கலிலியோ தமது கண்டுபிடிப்புகளையும், சூரியன்தான் பிரபஞ்சத்தின் நடுநாயகம் என்ற கருத்தையும் ஒரு புத்தகமாக வெளியிட்டார். புனித தேவாலாயத்திற்கு எதிராக செயல்பட்டார் என்றுகூறி கலிலியோவை கைது செய்தனர் தேவாலாய அதிகாரிகள்.
தன்னுடைய கருத்துகள் தவறானவை என்று ஒப்புக்கொள்ளும்படி கலிலி வற்புறுத்தப்பட்டார். தன் உயிருக்கே ஆபத்து என்று உணர்ந்த கலிலி வேறு வழியில்லாமல் தன் கூற்று தவறு என்று உதட்டளவில் ஒப்புக்கொண்டார்.
ப்ளோரன்ஸ் (Florence) நகர அதிகாரிகளின் அனுமதியோடு 1632-ஆம் ஆண்டில் அவர் மற்றொரு புத்தகத்தை வெளியிட்டார். மீண்டும் தேவாலயத்தை அவமதிக்கிறார் என்றுகூறி ரோம் நகர உயரதிகாரிகள் அவரை மீண்டும் கைது செய்தனர் இம்முறை விடுதலை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் அவரை வீட்டுக்காவலில் வைத்தனர் அப்போது அவருக்கு வயது 68. பத்து ஆண்டுகள் வீட்டுக்காவலிலேயே காலம் கழித்த கலிலி 1642-ஆம் ஆண்டு தமது 78-ஆவது அகவையில் காலமானார்.
உண்மை என்று நம்பப்படுபவைகளை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சந்தேகம் இருந்தாலும் துணிந்து கேட்கலாம் அது பொய் என்று தெரிந்தால் தைரியமாக சொல்லலாம். கலிலியோ போல் கேள்வி கேட்க துணிபவர்களுக்கும், புதிய உண்மைகளை கண்டுபிடிக்க முனைவர்களுக்கும் விடாமுயற்சியுடன் தன்னம்பிக்கையோடு உழைப்பவருக்கும் நிச்சயம் அந்த வானம் வசப்படும்.
க.ம.மணிவண்ணன்

மனு (அ)தர்மம் - சில வரலாற்று உண்மைகள்

மனு (அ)தர்மம் - சில வரலாற்று உண்மைகள்
----------------------------------------------------------------------
1) மனுதர்மம் தான், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் 1772 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் சட்டமாகவே இருந்தது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுதர்மத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன. லண்டனில் இருந்த உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சில்’ வரை இந்தியர்களின் வழக்கில் இதுதான் பின்பற்றப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
2) ‘பிராமணன்’ கொலை செய்தால், உச்சிக் குடுமியிலிருந்து, மயிரை மட்டும் வெட்டினால் போதும். அதுவே ‘சூத்திரன்’ கொலை செய்தால் தலையையே வெட்ட வேண்டும் என்று வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு மனுதர்மத்திலிருநது் எடுத்துக்கூற நீதிமன்றங்களிலேயே பார்ப்பனர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
3) மனுதர்மத்தை நீதிபதிகளே நேரடியாக அறிந்திட 1801 இல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசாங்கமே ஹென்றி தாமஸ் கோல் புரூச் என்பவரை நியமித்து, ‘மனுதர்மத்தை’ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1860 ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுதர்ம அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் ‘மனுதர்ம’த்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5) சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் ‘மனுதர்மத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) மனுதர்மமே காலம் காலமாக சட்டமாக இருந்த காரணத்தினால்தான் சூத்திரர்களான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுததப்பட்ட மக்களும் கல்வி மறுக்கப்பட்டு படிக்காதவர்களாக தற்குறிகளாக இருந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
7) ‘மனுதர்மம்’ சட்டப்படி இன்னும் தடை செய்யப்படவில்லை. அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் இந்த ‘மனுதர்மம்’ தான் மூல நூலாக ஏற்கப்பட்டுள்ளது. நமது சமுதாயத் தலைவர்களான தந்தை பெரியாரும்(டிசம்பர் 4, 1927), அண்ணல் அம்பேத்கரும்(டிசம்பர் 25, 1927), இந்த மனுதர்மத்தை எதிர்த்து - எரித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
‘எரிந்து பொசுங்கட்டும் மனு(அ)தர்மம்’
க.ம.மணிவண்ணன்

மனுசாத்திரம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?

மனுசாத்திரம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?
-----------------------------------------------------------------
பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு எழுதப்பட்டதுதான் மனு சாத்திரம். சமுதாயத்தை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது மனுசாத்திரம்.
பிறப்பிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உண்டாக்கி, பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்றும் சூத்திரர்களும் பஞ்சமர்களும் பெண்களும் மிகவும் இழிவானவர்கள் என்ற கருத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்துவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடே மனு சாத்திரம்.
பார்ப்பனர்களை உயர்வாகவும், சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் பெண்களையும் இந்த சமுதாயமும் அரசர்களும் அரசுகளும் தாழ்வாக நடத்த வேண்டும் என கட்டளை இடுகிறது மனு சாத்திரம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிற வள்ளுவ அறநெறிக்கு நேர் எதிரானது மனுசாத்திரம்.
சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அடிமை, வேதத்தையோ கல்வியையோ கற்க உரிமை இல்லாதவன் என்றும் வேதத்தை சூத்திரன் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும், காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் உழைக்கும் மக்களை அவமதிக்கிறது மனுசாத்திரம்.
மனுசாத்திரம்தான், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் 1772 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் சட்டமாகவே இருந்தது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுசாத்திரத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
1860 ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுசாத்திர அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் மனுசாத்திரத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் மனுசாத்திரத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது.
மனுசாத்திரமே காலம் காலமாக சட்டமாக இருந்த காரணத்தினால்தான் சூத்திரர்களான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுததப்பட்ட மக்களும் கல்வி மறுக்கப்பட்டு படிக்காதவர்களாக தற்குறிகளாக இருந்தனர்.
இப்போதும் மனுசாத்திரம் சட்டப்படி தடை செய்யப்படவில்லை. அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் இந்த மனுசாத்திரம் தான் மூல நூலாக ஏற்கப்பட்டுள்ளது. நமது சமுதாயத் தலைவர்களான தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், இந்த மனுசாத்திரத்தை எதிர்த்து - எரித்தார்கள்.
‘எரிந்து பொசுங்கட்டும் மனுசாத்திரம்’
க.ம.மணிவண்ணன்

காந்தியின் படுகொலையும் - பார்ப்பனிய பாசிச இந்துத்துவ வெறியும்

காந்தியின் படுகொலையும் - பார்ப்பனிய பாசிச இந்துத்துவ வெறியும்
------------------------------------------------------------------------------------------------------------
1) விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை காந்தியின் படுகொலைதான் என்பதும், இந்த படுகொலையைச் செய்தவன் நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனன் என்பதும், இவன் இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ் இரண்டிலும் உறுப்பினராக இருந்தவன் என்பதும், இவனது எரியூட்டப்பட்ட உடலின் சாம்பல் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வைத்து வணங்கப்படுகிறது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
2) காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஒரு பார்ப்பனன் என்ற செய்தியை பார்ப்பன ஏடுகள் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து செய்திகள் வெளியிட்டன என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
3) காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சே பார்ப்பான் தனது படுகொலைக்கு ஆதரவாக கிருஷ்ணனின் கீதை உபதேசத்தை நீதிமன்றத்தில் எடுத்துக் காட்டினான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
4) காந்தி இறந்த 1948 ம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள் வெள்ளிக்கிழமை காலையிலேயே ஆர்எஸ்எஸின் வானொலியில் இன்று ஒரு நல்ல தகவல் வரும் என்று ஒரு செய்தி ஒலிபரப்பானது. அதன்பின் காந்தி கொல்லப்பட்ட பின் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?( காந்தியின் தனிச் செயலாளராக பணிபுரிந்த ப்யாரேலால் நையர் எழுதிய "மகாத்மா காந்தி: கடைசி கட்டம்" (பக்கம் எண் 70))
5) காந்தி படுகொலையில் முக்கியத் தொடர்புடைய சாவர்க்காரை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க முக்கிய காரணமாக இருந்ததும் ஆர்எஸ்எஸ் மீதிருந்த தடையை நீக்கியதும் அப்போது உள்துறை அமைச்சராக இருந்த படேல்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) 1994 ஜனவரி 28ஆம் தேதி, பிரண்ட்லைன் பத்திரிகைக்கு பேட்டியளித்த நாதுராம் கோட்ஸேவின் சகோதரர் கோபால் கோட்ஸேவிடம்(காந்தி படுகொலையில் சிறைத் தண்டனை பெற்றவர்) நாதுராமுடனான ஆர்எஸ்எஸ் தொடர்பை அத்வானி மறுத்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது அதற்கு அவர், 'அத்வானி கோழைத்தனமாக பேசுகிறார். 'சென்று காந்தியை கொன்றுவிட்டு வா' என்று நாதுராமுக்கு ஆர்.எஸ்.எஸ் உத்தரவிடவில்லை என்று அவர் கூறுகிறாரா?' நாதுராமுக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எதவித தொடர்பும் இல்லை என்று மறுத்துவிடமுடியாது. ஆனால் இந்து மகாசபை நாதுராமுடனான தொடர்பை மறுக்கவில்லை. நாதுராம் 1944ஆம் ஆண்டிலேயே இந்து மகாசபைக்கு வேலை செய்ய தொடங்கிவிட்டார்.'' என்று பதிலளித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) 2016 செப்டம்பர் எட்டாம் தேதியன்று எகனாமிக் டைம்ஸிற்கு பேட்டியளித்த கோட்ஸேவின் குடும்ப உறுப்பினர்கள், "கோட்ஸே ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஒருபோதும் விலகவுமில்லை அங்கிருந்து வெளியேற்றப்படவும் இல்லை" என்று கூறினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
8) ராம ராஜ்ஜியத்தையும் வர்ணாசிரமத்தையும் ஆதரித்து வந்த காந்தியிடம் ஏற்பட்ட சிறு மனமாற்றத்தை தாங்க முடியாமலேயே அவரை பார்ப்பன பாசிச இந்துத்துவ மதவெறி கொன்று விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
9) பார்ப்பனருக்கு சம்பந்தியாகவே இருந்தாலும் (காந்தி ராஜாஜியின் சம்பந்தி) தனக்கு ஒத்துவராவிட்டால் அவர்களை பார்ப்பனிய பாசிச வெறி கொன்று விடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
10) தங்களை எதிர்த்த காந்தியை ஆங்கிலேயர்கள் உயிருடன் வைத்திருந்தனர் என்பதும் தங்களை காந்தி எதிர்ப்பார் என்று கருதியதாலேயே பார்ப்பனிய இந்துத்துவ பாசிச வெறி அவரைக் கொன்றது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
11) காந்தியை கொல்ல முயன்ற பார்ப்பன பாசிச இந்துத்துவ வெறி 5 முறை முயன்று தோல்வி அடைந்து 6 வது முயற்சியில் அவரைக் கொன்று விட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?
12) காந்தி சுடப்பட்டபோது அவர் ஹேராம் என்று சொல்லவேயில்லை என அந்நிகழ்வு நடந்தபோது அங்கு இருந்த காந்தியின் தனிச்செயலர் கல்யாணம்(தமிழகத்தை சேர்ந்தவர்) கூறியுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
காந்தி படுகொலை செய்யப்பட்ட நாள் ஜனவரி 30
க.ம.மணிவண்ணன்

மொழிப்போர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் வீரர்களுக்கு வீர வணக்கம்

மொழிப்போர் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப்போர் வீரர்களுக்கு வீர வணக்கம்.
-----------------------------------------------------------------------------------
1) 1937 - 38 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,கிரிமினல் திருத்தச் சட்டத்தை போராட்ட வீரர்கள் மீது ராஜாஜி ஏவினார் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா?
2) 1938 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி வீட்டின் முன்பு அணி அணியாக மறியல் போராட்டம் நடத்தி கைதானார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
3) 1939 இந்தி எதிர்ப்புப் போரில் பங்கு கொண்டு சிறையிலே மரணமடைந்த மாவீரன் நடராசனை 'ஒரு படிப்பு வாசனை இல்லாத அரிஜன்' என்று சட்டசபையில் சாதியைச் சொல்லி கேலி பேசியவர் ராஜாஜி என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு கைதியாகவே மரணமடைந்த மாவீரன் நடராசனை முன்கூட்டியே விடுதலை செய்து விட்டதாகத் துணிந்து பொய் சொன்னவர் தான் ராஜாஜி என்பது உங்களுக்குத் தெரியுமா?
5) 1939 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்குகொண்டு மாவீரன் நடராசனைத் தொடர்ந்து மாவீரன் தாளமுத்துவும் சிறையிலே மரணமடைந்தார், இவர்களை கூலிக்கு அமர்த்தப்பட்ட அடியாட்கள் என்று ராஜாஜி விமர்சித்தார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
6) 1965 மொழிப்போரில் அய்யம்பாளையம் வீரப்பன், கீழப்பழவூர் சின்னச்சாமி, கீரனூர் முத்து, கோடம்பாக்கம் சிவலிங்கம், மாயவரம் சாரங்கபாணி, சத்தியமங்கலம் முத்து, விருகம்பாக்கம் அரங்கநாதன் போன்றோர் தங்கள் உடலில் தீவைத்துக் கொண்டு தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று முழக்கமிட்டபடியே இறந்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
7) மொழிப் போராட்டத்தை அடக்க போராடிய மாணவர்கள் மீது பக்தவத்சலத்தின் காங்கிரசு அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதிலே பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
8) தங்கள் இன்னுயிரை ஈந்த மொழிப் போர் வீரர்களை முதலமைச்சர் பக்தவத்சலம் வறுமையில் இறந்து போனார்கள் என்றும் வயிற்று வலியின் காரணமாக இறந்தார்கள் என்றும் காதல் தோல்வியாலும் கடன் தொல்லையாலும் இறந்தார்கள் என்றும் நாகூசாமல் சட்டப் பேரவையில் இழிவுபடுத்தினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
க.ம.மணிவண்ணன்

புண்படுத்தி விட்டதா ?!

புண்படுத்தி விட்டதா ?!
------------------------------------
சம்பூகன் ஏகலைவன்......
கல்வி பறித்த உங்களை
வெமுலா வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
ஆசிபா நந்தினி......
கொன்றொழித்த உங்களை
அனிதா வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
கௌரிலங்கேஷ் கல்புர்கி......
உயிர் குடித்த உங்களை
அண்ணல் வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
ராஜாக்கள் சேகர்கள்......
பார்பனத்திமிர் பிடித்த உங்களை
பெரியார் வரைந்த ஓவியம்
புண்படுத்தி விட்டதா ?!
புண்பட்ட மனதோடு வாழ்ந்து தொலையாதே
ஆகட்டும் சீக்கிரம் இப்போதே செத்துப் போ.
க.மணிவண்ணன்

இதுக்கு பேருதான் தில்லு - சார்லி சாப்ளின்

இதுக்கு பேருதான் தில்லு
----------------------------------------
முன் குறிப்பு : இது தமிழ்நாட்டு நடிகர்களுக்கு எதிரான பதிவு அல்ல 😆😆😆😆😆😆
ஹிட்லர் ஆயிரக்கணக்கில் யூதர்களை கொன்று குவித்து தன்னை கொடுங்கோலனாக நிறுவிவிட்டிருந்த காலகட்டத்தில்(1940), சார்லி சாப்ளின் ‘The Great Dictator’ (அந்த சிறந்த சர்வாதிகாரி)என்ற படம் ஒன்றை எடுத்தார். படத்தில் ஹிட்லரை ஒரு மனநோயாளிபோல சித்தரித்திருந்தார்.
சாப்ளினின் மற்ற குறும்படங்களைப்போலல்லாமல் இது இரண்டுமணி நேரம் ஓடுகிறது. இந்தப்படத்தில் சாப்ளின் ரெட்டை வேடம் போடுகிறார். ஒருவர் சர்வாதிகாரி இன்னொருவர் சாதாரண சிகை திருத்துபவர்(Barber), யூதர்.
சர்வாதிகாரியாக சாப்ளின் செய்யும் எதுவும் சிரிக்க வைக்கும். ஹிட்லரை மன நோயாளிபோல காண்பிக்கும் சில காட்சிகள் கேலி என்பதைவிட கடுமையான விமர்சனமாகவே காணப்படுகிறது.
படத்தின் இறுதியில் ஹிட்லரைப் போலவே இருக்கும் சிகை அலங்கரிப்பவர், ஆள்மாறாட்டத்தினால் சர்வாதிகாரிக்குப்பதிலாக ஜெர்மனி படைவீரர்களுக்கு ஒரு உரை ஆற்றுகிறார். ஹிட்லரின் கருத்துக்களுக்கு நேரெதிரான கருத்துக்களை அந்த உரையில் வைக்கிறார்.
ஹிட்லரின் வாழ்நாளிலேயே, ஹிட்லர் உலகையே மிரட்டிக்கொண்டிருந்த காலத்திலேயே அவரை கேலி செய்து ஒரு முழுப்படமே எடுத்தார் சார்லி சாப்ளின். அப்படிப்பட்ட தைரியமான மக்கள் கலைஞனே இந்த உலகில் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.

“தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”

நமது தமிழ்ப் புத்தாண்டு தைத் திங்களில் மிதமான பனியும் மிதமான வெயிலும் நிலவும் இதமான காலத்தில் தொடங்குகிறது, நாகரிகமற்ற காட்டுமிராண்டிகளுக்குத் தான் கொளுத்தும் வெயில் காலமாம் சித்திரையில் ஆண்டு தொடங்கும் போலிருக்கிறது. நமது புத்தாண்டு எந்தவித புராண ஆபாசங்களை அடிப்படையாக கொண்டதல்ல, உலகத்திற்கு அறத்தைச் சொல்லித்தந்த திருவள்ளுவரின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது.
இந்த நாள் தமிழர் திருநாள், காலமெல்லாம் உழைத்த உழைப்பினால் விளைந்த வெற்றியை அறுவடை செய்து சர்க்கரைப் பொங்கலும் கரும்புமாய் இனிப்போடு கொண்டாடி மகிழும் நாள், இயற்கையை போற்றும் நாள். இரண்டாம் நாள், உதவி புரிந்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள் மட்டுமல்ல வள்ளுவனின் அறிவைப் போற்றும் திருவள்ளுவர் திருநாள். மூன்றாம் நாள் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் உறவையும் நட்பையும் பேணுகின்ற நாள்.
நாடு,இன,மொழி,மத வேறுபாடின்றி எல்லோரும் கொண்டாடத் தகுந்தது இந்தத் தமிழர் திருநாள், ஏனென்றால் எந்த மத மூடக்கருத்துகளுக்கும் தொடர்பில்லாதது இந்தத் திருநாள்.
உழைப்பையும் இயற்கையையும் போற்றுகின்ற, செய்நன்றி பாராட்டுகின்ற,அறிவையும் அன்பையும் கொண்டாடுகின்ற இந்தத் திருநாள் நமக்குச் சொந்தமானது என்ற திமிருடன் சொல்வோம் “தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”.

திருவள்ளுவர் ஆண்டு - தமிழ்ப் புத்தாண்டு - வரலாறு

திருவள்ளுவர் ஆண்டு - தமிழ்ப் புத்தாண்டு - வரலாறு
-----------------------------------------------------------------------------------
கிறித்தவர்கள் ஏசுவை வைத்து ஆங்கிலப் புத்தாண்டைத் தொடங்கியதுபோல், திருவள்ளுவரிலிருலிந்து புத்தாண்டைத் தொடங்கத் திட்டமிட்டனர் தமிழறிஞர்கள். அதை நோக்கிக் காலம் அவர்களை நகர்த்தியது.
1937 டிசம்பர் 26-ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், தமிழர் மாநாட்டைத் திருச்சியில் நடத்தினார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இது, வைகறைக்கு வாசல் திறந்த தமிழர் மாநாடு.
இதில், கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்கிற தன் காலக்கணிப்பை வெளியிட்டார் மறைமலை அடிகளார். இதை அங்கிருந்த தந்தை பெரியார் ஏற்பாரா? என அனைவர் கண்களும் அவரையே கவனித்தன. அந்த கணநேரத்தில், காற்றுக்கும் அங்கே வியர்த்திருக்கும். தந்தை பெரியாரோ, அந்த முடிவை ஏற்பதாகப் பச்சைக்கொடி அசைத்தார். அவருக்கு அங்கேயே திரு.வி.க., தன் உரையால் நன்றி முத்தம் பெய்தார். இதைத் தொடர்ந்தே, தை மகளின் வயிற்றில், கருக்கொள்ள ஆரம்பித்திருந்த தமிழர் புத்தாண்டு உருக்கொள்ள ஆரம்பித்தது.
1949 ஜனவரி 15, 16-ல் பெரும்புலவர் தெ.பொ.மீ. தலைமையின் திருக்குறள் மாநாட்டைத் தந்தை பெரியார் சென்னையில் நடத்தினார். அண்ணா, திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், இலக்குவனார், புலவர் குழந்தை போன்ற அறிஞர் பெருமக்கள் அணிவகுத்தனர். இதுபோன்ற முயற்சிகளால், தமிழர் திருநாளாய் தமிழர் நெஞ்சமெலாம் பொங்கல் பொங்கியது.
தைத்திங்களில் தொடங்கும் திருவள்ளுவராண்டு நாட்காட்டிகளைத் தமிழ் இயக்கங்கள் பரப்பியபோதும், அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம், செரிக்காத உணவாய் உணர்வாளர்களின் நெஞ்சில் கரித்துக்கொண்டிருந்தது.
இதற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தீர்வு கிடைத்தது. 69-ல் முதல்வராக முதல்முறை பொறுப்பேற்ற கலைஞர் தைப்பொங்கலுக்கு மறுநாளைத்
’திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசுவிடுமுறை அறிவித்தார். இதன் மூலம், தமிழன்னையின் கோட்டையில் வெற்றிக்கொடி ஏறியது.
1971-ல் தமிழக அரசால் திருவள்ளுவர் ஆண்டு ஏற்கப்பட்டு, அது 1972-ல் அரசிதழிலும் இடம்பிடித்தது. அடுத்து, தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு என்று 28.1.2008-ல் சட்டப்பேரவையில் சட்டமியற்றிச் சாதனை படைத்தார் கலைஞர். வரலாற்றில், தமிழருக்குக் கிடைத்த மகத்தான பண்பாட்டுப் பதிவு இது.
பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவால் இதனை ஏற்க முடிய வில்லை. 2011-ல் சித்திரையே தமிழர் புத்தாண்டு என, ஏறுக்குமாறாக சட்டத்தை நிறைவேற்றிவிட்டார். இதன்மூலம், தமிழறிஞர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகாலம் போராடி, தைமகளின் தலையில் அணிவித்த 'தமிழர் புத்தாண்டு’எனும் மகுடத்தைக் கழற்றி வீசிவிட்டார்.
அடிக்கடி மாறும் அரசாணைகள் வேண்டுமானால், தையை நிராகரிக்கலாம். எனினும், தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

சமூகநீதியும் - தமிழ்நாடும்

சமூகநீதியும் - தமிழ்நாடும்
-------------------------------------------
மோடி அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்ற மாபெரும் மோசடியை கொண்டுவர முயலுகிறது. இதற்கு மற்ற மாநிலங்கள் எல்லாம் வாயை மூடி அமைதியாக அல்லது ஆதரவாக இருக்கும்போது தமிழகம் மட்டுமே இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏனென்றால் இது பெரியாரின் மண்,சமூகநீதி மண். இந்த மண்ணில்தான் சமூகநீதி விதைக்கப்பட்டு திராவிட இயங்கங்களால் பெருமரமாக வளர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதிப் பயிர் வளர்த்த வரலாறு தெரியுமா உங்களுக்கு?
1) நீதிக்கட்சி ஆட்சியில், தமிழ்நாட்டில் 1920லேயே இடஒதுக்கீடு இருந்துவந்தது, பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகணத்தில்தான் இடஒதுக்கீடு முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
2) நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து நிறைவேற்றப்பட்ட அரசாணை 1921லும்,1922லும் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப்படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
3) 1922 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில், 50 விழுக்காடு இடங்களுக்கு மேல் பார்ப்பன மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற அரசாணையின் படி 46 பார்ப்பன மாணவர்களை சேர்க்க மறுத்தனர். கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பன மாணவர்களுக்கு இடமில்லை என்று சேர்க்க மறுத்த சமூகப் புரட்சி, நீதிக் கட்சி ஆட்சியில் தான் நடைபெற்றது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1923இல் வேலைவாய்ப்பில் மட்டுமன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5) 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.(அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது) இந்த அமைப்பின் மூலம்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் பணி நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது, அதற்கு முன் அந்தந்த துறைகள் மூலமாகவே பார்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக்கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது, இந்தத் தடையை உடைத்தெறிந்தவர் அப்போது முதல்வராக இருந்த பனகல் அரசர்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
7) பனகல் அரசர் காலத்தில்தான் ஆதித்திராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன. என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
8) 1925ல் நடேசனார் கொண்டு வந்த சட்ட மன்றத் தீர்மானத்தின் படி, கீழ்க்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 44%, பார்ப்பனர்கள் 16%, முகமதியர்கள் 16%, ஆங்கிலோ இந்தியர்,இந்திய கிருஸ்தவர் 16%, ஆதி திராவிடர்கள் 8%, அதனால்தான் முதன் முதலாக பார்ப்பனரல்லாதாரிலும், ஆதிதிராவிடர்களிலும் பலர் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
9) 1934ல் சிறப்பாணை பிறப்பிக்கப்பட்டு சென்னை மாகணத்திலிருந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இடஒதுக்கீடு ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது.இந்த இடஒதுக்கீடு சென்னை மாகணத்தில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
10) மத்திய அரசின் இடஒதுக்கீட்டை,சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை,இந்தியா சுதந்திரம் பெற்று ஒன்றரை மாதத்திற்குள் அரசியல் சட்டத்தில் சில விதிகளைத் திருத்தி 1947 செப்டம்பர் 30ல் பார்ப்பனர்கள் நீக்கம் செய்து விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
11) 1950ல் செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண், தான் மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பம் போட்டிருந்ததாகவும் தான் பார்ப்பனத்தி என்பதால்தான் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையின்படி தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது அவர் விண்ணப்பமே போடவில்லை என்பதும்,விண்ணப்பிக்கும் வயதை கடந்தவர் என்பதும். அந்த பெண்ணின் சார்பாக வழக்கை நடத்தியவர் அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்.விண்ணப்பிக்கத் தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில்தான் இடஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
12) உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் வழிநடத்திய வகுப்புரிமை போரால்தான் 1951ல் முதல் சட்டத் திருத்தம் நடைபெற்றது. முதல் சட்டத் திருத்தமே இடஒதுக்கீட்டிற்காகத்தான் என்பதும், அது நிகழ்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
13) ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதற்குமுன் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட என்ற சொல் வகுப்புரிமை ஆணையில் இடம் பெற்றது என்பதும் பெருந்தலைவர் காமராசர் முதல்வர் ஆன காலத்தில், ‘‘தாழ்த்தப்பட்டவர்’’ இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஆணை செயற்பாட்டிற்கு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
14) 1969 இல் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இருந்த 16 விழுக்காடு இடஒதுக்கீடு 18 ஆக உயர்த்தப்பட்டது,பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது, எஞ்சிய 51 விழுக்காடு முன்னேறிய வகுப்பினர் உள்பட அனைவரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கானது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
15) 1979 இல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். திராவிடர் கழகத்தின் தலைமையில் பிரச்சாரமும், கிளர்ச்சியும் நடைபெற்றது அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. அதனால் அவர், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிய 31 விழுக்காட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது.
16) மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தி.மு.க. ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 விழுக்காடாக உயர்ந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
17) 1990ல் திரு.வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று மத்திய அரசில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (அய்.ஏ.எஸ்.முதல் பல நிலைகள்) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது அப்போது சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு மட்டுமே திரு.வி.பி.சிங் அவர்களை சமூகநீதிக் காவலர் என்று கொண்டாடி மகிழ்ந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
18) 1992ல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் அமலில் இருந்த 69 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, அப்போது திராவிடர் கழகம் கூறிய யோசனையை ஏற்று அதுவரை வெறும் ஆணையாக இருந்ததை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் அதுவும் அரசு ஆணையாக இல்லாமல், சட்டமாகி உள்ளது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
19) 1990 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருந்தபோது,, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 விழுக்காடானது, மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற பிரிவுக்கு 20 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடு என்று பிரிக்கப்பட்டு, சமூகநீதி பரவலாக ஏற்பட செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம் களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பரவலாக சமூகநீதி கிடைத்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
க.ம.மணிவண்ணன்

பார்ப்பனர்களும் – தீட்டும்

பார்ப்பனர்களும் – தீட்டும்
----------------------------------------
சபரிமலைக்குச் சென்று இரு பெண்கள் வழிபட்டார்கள் என்பதற்காக கோவிலை பூட்டிவிட்டு கேரள பார்ப்பன நம்பூதிரிகள் தீட்டுக் கழித்தனர் என்ற செய்தி உங்களுக்குத் தெரியும், இதே போன்ற இழிசெயலை பல இடங்களில் பலமுறை பார்ப்பனர்கள் செய்துள்ளனர் என்ற வரலாறு இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா.
1) 1927ல் திருச்சி மலைக்கோட்டை கோவில் நுழைவுக்கு ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்ற நீதிக்கட்சியின் தலைவர்கள் ஜே.என்.இராமநாதன்,டி.வி.சுப்பிரமணியன் ஆகியோர் பார்ப்பனர்களால் படிகளில் உருட்டிவிடப்பட்டு மூர்க்கமாக தாக்கப்பட்டனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
2) 1929ல் ஈரோடு கோவில் கருவறைக்குள் நுழைய உரிமை கோரி தாழ்த்தப்பட்ட தோழர்களுடன் உள்ளே சென்ற மாயூரம் நடராசன்,பட்டுக்கோட்டை அழகிரி உள்ளிட்ட தோழர்களைப் பார்பனர்கள் கோவிலுக்குள்ளே வைத்துப் பூட்டினர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
3) 1927ல் திருவண்ணாமலைக் கோவிலுக்கு நீதிக்கட்சியைச் சேர்ந்த திரு.கண்ணப்பன் தோழர்களுடன் சென்றபோது பறையர்கள் வருகிறார்கள் என்று பார்ப்பனர்கள் கோயிலையே இழுத்துப் பூட்டி விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1874ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வழிபட வந்த நாடார்களை பார்ப்பனர்கள் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதோடு அது தொடர்பாக நடந்த வழக்கில் நாடார்கள் கோவிலுக்குள் நுழைய உரிமை கிடையாது என்று தீர்ப்பு வழங்கப்பட்ட வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5) 1939ல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடந்தவுடன் கோவிலை விட்டு மீனாட்சியே ஓடிப்போய் விட்டால் என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்து கோவிலுக்கும் பூட்டுப் போட்டுவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) 1984ல் பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியையே(அவர் பார்சி வகுப்பைச் சேர்ந்தவரை திருமணம் செய்தார் என்பதால்) உள்ளே விட பார்ப்பனர்கள் மறுத்துவிட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
7) 1946ல் திருவையாறு தியாகராயர் விழாவில் தண்டபாணி தேசிகர் தமிழ்ப் பாட்டுப் பாடினார் என்பதற்காக மேடை தீட்டாகி விட்டது என்று பார்ப்பனர்கள் தீட்டுக் கழித்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
8) 1925ல் கன்னியாகுமரிக்கு கோவிலுக்கு வந்த காந்தியடிகளை பிரகாரத்தை மட்டுமே சுற்றி வருவதற்கு பார்ப்பனர்கள் அனுமதித்தார்கள்,கோவிலுக்குள்ளே விடவில்லை என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
9) 1927ல் சிதம்பரத்துக்கு காந்தியார் வந்தபோது ஆதிதிராவிடர்களை உள்ளே அழைத்துச் சென்று விடாமல் தடுக்க தீட்சிதப் பார்ப்பனர்கள் கோவிலின் நான்கு கதவுகளையும் இழுத்து மூடிவிட்டனர்,கோவிலுக்குள் இருத்த பக்தர்கள் அன்று முழுவதும் உள்ளேயே அடைபட்டு கிடந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
10) 1979ல் பாபு ஜெகஜீவன்ராம் துணைப் பிரதமராக இருந்தபோது சம்பூர்ணானந்தா சிலையைத் திறந்து வைத்தார். ஒரு தாழ்த்தப்பட்டவரால் திறக்கப்பட்டது என்பதாலேயே சம்பூர்ணானந்தா சிலை பசுவின் சிறுநீரும் கங்கை நீரும் தெளித்து தீட்டுக் கழிக்கப்பட்டது என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
11) 2014ல் பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சி, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர், மதுபானி மாவட்டத்தில் உள்ள கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே சென்றதும் பார்ப்பனர்கள் கோயிலைக் கழுவி தீட்டுக் கழித்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
12) 2018ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அவர்களையும், அவரது துணைவியாரையும், தாழ்த்தப்பட்ட சமூகம் என்பதனால்,இராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டம், புஷ்கரில் உள்ள பிரம்மா கோவிலுக்குள் நுழையவே அனுமதிக்கவில்லை. கோவில் படிக்கட்டில் அமர்ந்து பக்தி பூஜை செய்தனர் என்ற வரலாறு தெரியுமா உங்களுக்கு?
க.ம.மணிவண்ணன்

பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே



பெண் கல்வியின் அன்னை - சாவித்ரிபாய் புலே
--------------------------------------------------------------------------
பள்ளிக்குச் செல்லும் போது இரண்டு புடவைகளையும் எடுத்துச் சென்றாள் அந்தப் பெண். ஏனெனில் அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே வழி நெடுகிலும் சேற்றையும், சாணத்தையும், மண்ணையும் மாறி மாறி அவள் மீது வீசுவார்களாம் இந்து சனாதனவாதிகளும் ஆதிக்க மேல்சாதியினரும். அவற்றை அமைதியாக எதிர் கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக் கொள்வாளாம் அந்தப் பெண். யாரிந்தப் பெண்? இவள் செய்த குற்றம்தான் என்ன?இந்திய தேசத்தின் ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கும், சமூக கொடுமைகளுக்கும் எதிராகப் போராடிய முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் புலே தான் அவர். இதுதான் பெண்கல்வியை முனைப்பாக கொண்டு சென்ற முதல் பெண் ஆசிரியருக்கு, இந்தியாவில் பரம்பரியத்தைக் காப்பாற்றும் சனாதன கும்பலால் கிடைத்த பரிசு என்றே நாம் கொள்ள வேண்டும். சாவித்திரிபாய் புலே என்கிற இந்தப் பெயரை உச்சரிக்காமல் போனால் வரலாறு நம்மை மன்னிக்காது.
சாவித்திரிபாய் புலே , 1831, ஜனவரி மாதம் 3ம் நாள், மகாராஷ்ட்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில், நைகோன் என்ற கிராமத்தில் பணக்கார விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
இந்திய வரலாற்றில் பெண்கல்விக்காக முதல் பள்ளி அமைத்தவர், சாதியத்தை தீயிட்டுக் கொளுத்திய, பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்த சமூகப் போராளியும் கூட. அரசியல் கவிதை எழுதிய புரடசிப் பெண்ணும் ஆவார்.. மராட்டிய மண்ணின் முதல் பெண் கவிஞரும் இவரே. 19ம் நூற்றான்டின் அனைத்து சமூகத்தடைகளையும் உடைத்து தூக்கி எறிந்தவர்.
இந்தியாவின் கடந்த காலத்தைப் புரட்டிப் பார்த்தால், அதுவும் கல்வி தொடர்பான தகவல்களைப் படித்தால் கொஞசம் அச்சமாகவும் வேதனையைத் தருவதாகவும் உள்ளது. 1800 களில் பார்ப்பனருக்கு மட்டுமே கல்வி கொடுக்கப்பட்டது. அப்போது ஆண்ட பிரிட்டிஷ்காரர்களும், உயர்தட்டு மக்களுக்கே கல்வி கொடுக்க திட்டமிட்டனர். இந்த காலகட்டத்தில் இந்திய பெண்களின், சமூகத்தை உய்விக்கப் பிறந்தவர்கள்தான் ஜோதிராவ் கோவிந்த புலே மற்றும் காண்டோஜி சாவித்திரி பாய் புலே என்ற தம்பதியர் இருவரும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கும்,கல்வி மறுக்கப்பட்ட மக்களுக்கும் மறுக்கப்பட்ட கல்வியை, ஜோதிராவ் மற்றும் சாவித்திரி இருவரும் பிள்ளைகளுக்கும், பெண்களுக்கும் கல்வி தருவோம் என்று கூறினர், 1847 ல் முதல் பள்ளியை தாழ்த்தப்பட்ட மற்றும் விதவைப் பெண்களுக்காக துவங்கினார்கள். பின்னர் 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதன் முறையாக, முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர். அதில் சாவித்திரிபாய்தான் பள்ளியில் பொறுப்பு ஏற்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக ஆனார். பின் 1849ல், ஒரு பள்ளியை ஜோதிராவ் மற்றும் சாவித்திரிபாய் துவங்கினார்கள். அதுவே பெரியவர்களுக்கான பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள், என அனைத்து சாதியினருக்கும் என உருவாக்கப்பட்ட முதல் பள்ளி, இந்தியாவிலேயே இதுதான்.
சாவித்திரி பாய் புலே, ஜோதிராவ் புலே இருவரும் மகாராஷ்டிரத்தில் 9 இடங்களில் அனைத்து சாதியினருக்கும், விதவைகளுக்கும், தவறான உற்வின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் என எல்லோருக்கும் கல்வி கொடுக்க பள்ளியை துவங்கினர். இதில் 150 பெண்களும், 100 ஆண்களும் படித்தனர். இந்த பள்ளிகள் அரசு பள்ளியைவிட சிறப்பாக செயல்பட்டன. இதனால், 1852, நவம்பர் 14ல், பிரிட்டிஷ் அரசால் இவர்கள் இருவரும் சிறந்த ஆசிரியர்கள் என்ற பாராட்டும்பரிசும் பெற்றனர்.
இந்திய வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி என்றுதான் கூறவேண்டும். ஏனெனில்,முறையாக ஆசிரியர் தினம் என்று சாவித்திரிபாய் பிறந்த தினத்தைத்தான் கொண்டாட வேண்டும். ஆனால், சமூக சீர் திருத்தவாதியான சாவித்திரிபாய் பற்றி எந்த பாட புத்தகத்திலும் இல்லை. இது ஒரு வரலாற்றுப் பிழையே.
தவித்த வாய்க்கு தீண்டத்தகாதவர் எனச் சொல்லி தண்ணீர் மறுத்த கொடுமையை எண்ணி தங்கள் வீட்டிலேயே எல்லா ஒடுக்கப்பட்ட மக்களும் தண்ணீர் எடுக்க அனுமதித்தனர். பால்ய விதவை ஆன பெண்களின் தலையை மழித்து விடும் கொடியநடைமுறை அமலில் இருந்தது; அந்த மழிக்கும் பணியைச் செய்யும் மக்களை வைத்தே
அதை நாங்கள் செய்யமாட்டோம் என அறிவிக்கச் செய்தார் .விதவை மறுமணங்களை தொடர்ந்து நடத்திக்காட்டினார்.
பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதே குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில், தன் கணவனின் இறுதிச் சடங்கைத் தானே செய்யும் கம்பீரத்தைப் பெற்றவர். சாதாரணங்களைக் கொடுத்தவர்களையெல்லாம் அசாதாரணமாக கடந்தவர். பூக்கள் அல்ல பெண்கள். புயல்களாகவும் இருப்பார்கள் என புரட்சி செய்து காட்டிய பெண். தன்னம்பிக்கை மனிதியாக, சமுதாயத்தின் பிழை திருத்தும் போராளியாக, சமூக ஏற்றத் தாழ்வினை வேரறுக்கும் சக்தியாக வாழ்ந்து காட்டிய வீராங்கனை. ஆனால் இந்திய வரலாற்றில் இந்த உயர்ந்த மனிதி ஏன் பதிவு செய்யப்படவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
1876-1878 பஞ்ச காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் போக்குவதற்குத் தமது கணவரோடு கடுமையாக உழைத்ததோடு மக்களின் துயரங்கள் தீர்வதற்கான பல்வேறு ஆலோசனைகளையும் முன்வைத்தார் அவர். மகாராஷ்ட்ராவை ப்ளேக் நோய் தாக்கிய பொழுது ஆங்கிலேய அரசு நோய்த்தொற்று பரவாமல் இருக்க கடுமையான ப்ளேக் சட்டங்களை போட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வைத்தது.
சாவித்திரி பாய் தானே பல பேரை தூக்கிக்கொண்டு வந்து, தனது அறுபத்தி ஆறு வயதில், மனித நேயம் காக்க மனித உயிர்கள் காக்கப்போராடினார். அப்படி பத்து வயது சிறுவன் பாண்டுரங் பாபாஜியை காக்க தூக்கிக்கொண்டு வந்த பொழுது நோய் தொற்று ஏற்பட்டு,1897, மார்ச் 10 ம் ள் மரணமடைந்தார் சாவித்திரி பாய் புலே. அந்த சிறுவன் பிழைத்துக்கொண்டான்.
சாவித்திரிபாய் புலே நம் அனைவருக்கும் சொல்லிச் சென்ற செய்தி இதுதான். உனக்குள்ளே எல்லா ஆற்றலும் அடங்கியுள்ளது. அந்த ஆற்றலை இந்த சமூகத்திற்கு நல்லது செய்யப் பயன்படுத்து. ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்பதும், சாதிப்பதற்கு பாலினம் ஒரு தடையில்லை என்பதும் தான்.
போ கல்வி கல்
சொந்தக்காலில் நில்,சோராமல் உழை
ஞானத்தை,செல்வத்தைச் சேர்
அறிவில்லாமல் போனால் அனைத்தும் அழியும்
ஞானமில்லாமல் விலங்காகி போவோம் நாம்
இன்னமும் சோம்பலுற்று அமர்ந்திருக்காதே,போ,போய்க் கல்வி பெறுக !
ஒடுக்கப்பட்ட,ஒதுக்கப்பட்ட நம்மவர்களின் துயரங்கள் துடைத்திடுக
கற்க ஒரு பொன்னான வாய்ப்பு இது
கற்று,ஜாதியின் சங்கிலிகளை அறுத்திடுக
பிராமண நூல்களை வேகமாகத் தூக்கி எறிக !
இப்படியாகச் செல்கிறது அவரின் கவிதை வரிகள்.
க.ம.மணிவண்ணன்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...