Monday 25 February 2019

சமூகநீதியும் - தமிழ்நாடும்

சமூகநீதியும் - தமிழ்நாடும்
-------------------------------------------
மோடி அரசு பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்ற மாபெரும் மோசடியை கொண்டுவர முயலுகிறது. இதற்கு மற்ற மாநிலங்கள் எல்லாம் வாயை மூடி அமைதியாக அல்லது ஆதரவாக இருக்கும்போது தமிழகம் மட்டுமே இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. ஏனென்றால் இது பெரியாரின் மண்,சமூகநீதி மண். இந்த மண்ணில்தான் சமூகநீதி விதைக்கப்பட்டு திராவிட இயங்கங்களால் பெருமரமாக வளர்க்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் சமூகநீதிப் பயிர் வளர்த்த வரலாறு தெரியுமா உங்களுக்கு?
1) நீதிக்கட்சி ஆட்சியில், தமிழ்நாட்டில் 1920லேயே இடஒதுக்கீடு இருந்துவந்தது, பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகணத்தில்தான் இடஒதுக்கீடு முதன்முதலாக நடைமுறைக்கு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
2) நீதிக்கட்சி ஆட்சியில்தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் அளித்து நிறைவேற்றப்பட்ட அரசாணை 1921லும்,1922லும் பிறப்பிக்கப்பட்டது என்பதும் இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப்படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
3) 1922 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில், 50 விழுக்காடு இடங்களுக்கு மேல் பார்ப்பன மாணவர்களைச் சேர்க்கக் கூடாது என்ற அரசாணையின் படி 46 பார்ப்பன மாணவர்களை சேர்க்க மறுத்தனர். கடந்த இரண்டாயிரம் ஆண்டு இந்திய வரலாற்றில் முதல் முறையாகப் பார்ப்பன மாணவர்களுக்கு இடமில்லை என்று சேர்க்க மறுத்த சமூகப் புரட்சி, நீதிக் கட்சி ஆட்சியில் தான் நடைபெற்றது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
4) 1923இல் வேலைவாய்ப்பில் மட்டுமன்றி பதவி உயர்விலும் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை கடைபிடிக்க வேண்டும் என்று நீதிக்கட்சி ஆணை பிறப்பித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
5) 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது.(அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது) இந்த அமைப்பின் மூலம்தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் பணி நியமனங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டது, அதற்கு முன் அந்தந்த துறைகள் மூலமாகவே பார்பனர்கள் ஏராளமாக வேலைக்கு நியமிக்கப்பட்டு வந்தார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
6) நீதிக்கட்சி ஆட்சிக்கு முன்புவரை மருத்துவக்கல்லூரிப் பட்டப்படிப்பிற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்துவந்தது, இந்தத் தடையை உடைத்தெறிந்தவர் அப்போது முதல்வராக இருந்த பனகல் அரசர்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
7) பனகல் அரசர் காலத்தில்தான் ஆதித்திராவிட மாணவர்கள் 3 பேருக்கு வகுப்புரிமையின் அடிப்படையில் மருத்துவக் கல்வியில் இடம் கிடைத்தது. அதேபோல் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரியிலும், கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் இடங்கள் கிடைத்தன. என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
8) 1925ல் நடேசனார் கொண்டு வந்த சட்ட மன்றத் தீர்மானத்தின் படி, கீழ்க்கண்டவாறு இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 44%, பார்ப்பனர்கள் 16%, முகமதியர்கள் 16%, ஆங்கிலோ இந்தியர்,இந்திய கிருஸ்தவர் 16%, ஆதி திராவிடர்கள் 8%, அதனால்தான் முதன் முதலாக பார்ப்பனரல்லாதாரிலும், ஆதிதிராவிடர்களிலும் பலர் அரசு வேலைக்குச் செல்ல முடிந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
9) 1934ல் சிறப்பாணை பிறப்பிக்கப்பட்டு சென்னை மாகணத்திலிருந்த மத்திய அரசு அலுவலகங்களிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது,சென்னை மாகாண பார்ப்பனர் அல்லாதோர் இடஒதுக்கீடு ஆணையை மத்திய அரசு பிறப்பித்தது.இந்த இடஒதுக்கீடு சென்னை மாகணத்தில் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
10) மத்திய அரசின் இடஒதுக்கீட்டை,சென்னை மாகாணத்தில் மட்டும் கொடுக்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டை,இந்தியா சுதந்திரம் பெற்று ஒன்றரை மாதத்திற்குள் அரசியல் சட்டத்தில் சில விதிகளைத் திருத்தி 1947 செப்டம்பர் 30ல் பார்ப்பனர்கள் நீக்கம் செய்து விட்டார்கள் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
11) 1950ல் செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பனப் பெண், தான் மருத்துவக்கல்லூரியில் சேர விண்ணப்பம் போட்டிருந்ததாகவும் தான் பார்ப்பனத்தி என்பதால்தான் தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டு கொள்கையின்படி தனக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற பிறகுதான் ஒரு உண்மை தெரிந்தது அவர் விண்ணப்பமே போடவில்லை என்பதும்,விண்ணப்பிக்கும் வயதை கடந்தவர் என்பதும். அந்த பெண்ணின் சார்பாக வழக்கை நடத்தியவர் அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்.விண்ணப்பிக்கத் தகுதியில்லாத பெண் விண்ணப்பிக்காத இடத்திற்காகப் போடப்பட்ட வழக்கில்தான் இடஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதி மன்றமும் உச்சநீதி மன்றமும் தீர்ப்பு வழங்கியது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
12) உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தந்தை பெரியார் வழிநடத்திய வகுப்புரிமை போரால்தான் 1951ல் முதல் சட்டத் திருத்தம் நடைபெற்றது. முதல் சட்டத் திருத்தமே இடஒதுக்கீட்டிற்காகத்தான் என்பதும், அது நிகழ்வதற்கு காரணமாக இருந்தவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
13) ஓமந்தூர் ஓ.பி.இராமசாமி அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில், அதற்குமுன் இடம்பெறாத பிற்படுத்தப்பட்ட என்ற சொல் வகுப்புரிமை ஆணையில் இடம் பெற்றது என்பதும் பெருந்தலைவர் காமராசர் முதல்வர் ஆன காலத்தில், ‘‘தாழ்த்தப்பட்டவர்’’ இணைந்து மலைவாழ் மக்கள், என்ற பிரிவுகளின் கீழ் முறையே 16 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 25 விழுக்காடு என 41 விழுக்காடு இடஒதுக்கீடு என்று ஆணை செயற்பாட்டிற்கு வந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
14) 1969 இல் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இருந்த 16 விழுக்காடு இடஒதுக்கீடு 18 ஆக உயர்த்தப்பட்டது,பிற்படுத்தப்பட்டோருக்கு 25 விழுக்காடாக இருந்த இடஒதுக்கீடு 31 விழுக்காடாக உயர்த்தப்பட்டது, எஞ்சிய 51 விழுக்காடு முன்னேறிய வகுப்பினர் உள்பட அனைவரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கானது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
15) 1979 இல் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தார். திராவிடர் கழகத்தின் தலைமையில் பிரச்சாரமும், கிளர்ச்சியும் நடைபெற்றது அதன் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. படுதோல்வியை சந்தித்தது. அதனால் அவர், பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு ஆணையை ரத்து செய்ததோடு, பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கிய 31 விழுக்காட்டை 50 விழுக்காடாக உயர்த்தினார். அதன்படி, இட ஒதுக்கீடு 68 சதவிகிதமாக உயர்த்தப் பட்டது.
16) மலைவாழ் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு, பிறகு வந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பால் தி.மு.க. ஆட்சியில் ஒரு சதவிகிதம் ஒதுக்கப்பட்டது. 68 சதவிகிதம் 69 விழுக்காடாக உயர்ந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
17) 1990ல் திரு.வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று மத்திய அரசில் முதல் முறையாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு (அய்.ஏ.எஸ்.முதல் பல நிலைகள்) 27 விழுக்காடு இட ஒதுக்கீடு கிடைக்கப் பெற்றது அப்போது சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு மட்டுமே திரு.வி.பி.சிங் அவர்களை சமூகநீதிக் காவலர் என்று கொண்டாடி மகிழ்ந்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
18) 1992ல் ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழ்நாட்டில் அமலில் இருந்த 69 சதவிகிதத்திற்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்க, அப்போது திராவிடர் கழகம் கூறிய யோசனையை ஏற்று அதுவரை வெறும் ஆணையாக இருந்ததை, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமாக்கினார். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மொத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் அதுவும் அரசு ஆணையாக இல்லாமல், சட்டமாகி உள்ளது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
19) 1990 ஆம் ஆண்டு கலைஞர் முதலமைச்சாராக இருந்தபோது,, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 50 விழுக்காடானது, மிகவும் பிற் படுத்தப்பட்டவர் என்ற பிரிவுக்கு 20 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30 விழுக்காடு என்று பிரிக்கப்பட்டு, சமூகநீதி பரவலாக ஏற்பட செய்தார். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டில் முஸ்லீம் களுக்கு 3.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிறகு அதேபோல், தாழ்த்தப்பட்டவர்களுக்கு உள்ள பிரிவில், அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தனியே மாநில அரசில் ஒதுக்கீடு செய்தார். அதன் காரணமாக தாழ்த்தப்பட்டோருக்குப் பரவலாக சமூகநீதி கிடைத்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...