Monday 25 February 2019

மனுசாத்திரம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?

மனுசாத்திரம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?
-----------------------------------------------------------------
பார்ப்பனர் வேதக் கருத்துகளை பாமர மக்களின் வாழ்க்கையில் புகுத்துவதற்கு எழுதப்பட்டதுதான் மனு சாத்திரம். சமுதாயத்தை பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று நான்கு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று உத்தரவிடுகிறது மனுசாத்திரம்.
பிறப்பிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உண்டாக்கி, பார்ப்பனர்கள் உயர்வானவர்கள் என்றும் சூத்திரர்களும் பஞ்சமர்களும் பெண்களும் மிகவும் இழிவானவர்கள் என்ற கருத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்துவதற்கு செய்யப்பட்ட ஏற்பாடே மனு சாத்திரம்.
பார்ப்பனர்களை உயர்வாகவும், சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் பெண்களையும் இந்த சமுதாயமும் அரசர்களும் அரசுகளும் தாழ்வாக நடத்த வேண்டும் என கட்டளை இடுகிறது மனு சாத்திரம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்கிற வள்ளுவ அறநெறிக்கு நேர் எதிரானது மனுசாத்திரம்.
சூத்திரன், பார்ப்பானின் வைப்பாட்டி மகன், அடிமை, வேதத்தையோ கல்வியையோ கற்க உரிமை இல்லாதவன் என்றும் வேதத்தை சூத்திரன் படித்தால் நாக்கை வெட்ட வேண்டும், காதால் கேட்டால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் உழைக்கும் மக்களை அவமதிக்கிறது மனுசாத்திரம்.
மனுசாத்திரம்தான், வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் 1772 ஆம் ஆண்டிலிருந்து நாட்டின் சட்டமாகவே இருந்தது. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றங்களுக்கு மனுசாத்திரத்தின் அடிப்படையிலேயே நீதிமன்றங்களில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
1860 ஆம் ஆண்டில்தான் கிரிமினல் குற்றங்களுக்கு மனுசாத்திர அடிப்படையில் தண்டனை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஆனால், குடும்பம், மதம், வாரிசுரிமை, சாதி, சொத்துப் பிரச்சினை போன்ற சிவில் வழக்குகளில் மனுசாத்திரத்தின் அடிப்படையிலேயே தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
சுதந்திரத்துக்குப் பிறகு 1950 ஆம் ஆண்டு அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் மனுசாத்திரத்துக்கு பதிலாக சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் முறை வந்தது.
மனுசாத்திரமே காலம் காலமாக சட்டமாக இருந்த காரணத்தினால்தான் சூத்திரர்களான தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுததப்பட்ட மக்களும் கல்வி மறுக்கப்பட்டு படிக்காதவர்களாக தற்குறிகளாக இருந்தனர்.
இப்போதும் மனுசாத்திரம் சட்டப்படி தடை செய்யப்படவில்லை. அரசியல் சட்டத்தில் இந்துக்களுக்கான சட்டங்களில் இந்த மனுசாத்திரம் தான் மூல நூலாக ஏற்கப்பட்டுள்ளது. நமது சமுதாயத் தலைவர்களான தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும், இந்த மனுசாத்திரத்தை எதிர்த்து - எரித்தார்கள்.
‘எரிந்து பொசுங்கட்டும் மனுசாத்திரம்’
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...