Monday 25 February 2019

திருவள்ளுவர் ஆண்டு - தமிழ்ப் புத்தாண்டு - வரலாறு

திருவள்ளுவர் ஆண்டு - தமிழ்ப் புத்தாண்டு - வரலாறு
-----------------------------------------------------------------------------------
கிறித்தவர்கள் ஏசுவை வைத்து ஆங்கிலப் புத்தாண்டைத் தொடங்கியதுபோல், திருவள்ளுவரிலிருலிந்து புத்தாண்டைத் தொடங்கத் திட்டமிட்டனர் தமிழறிஞர்கள். அதை நோக்கிக் காலம் அவர்களை நகர்த்தியது.
1937 டிசம்பர் 26-ல் நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், தமிழர் மாநாட்டைத் திருச்சியில் நடத்தினார் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம். இது, வைகறைக்கு வாசல் திறந்த தமிழர் மாநாடு.
இதில், கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்கிற தன் காலக்கணிப்பை வெளியிட்டார் மறைமலை அடிகளார். இதை அங்கிருந்த தந்தை பெரியார் ஏற்பாரா? என அனைவர் கண்களும் அவரையே கவனித்தன. அந்த கணநேரத்தில், காற்றுக்கும் அங்கே வியர்த்திருக்கும். தந்தை பெரியாரோ, அந்த முடிவை ஏற்பதாகப் பச்சைக்கொடி அசைத்தார். அவருக்கு அங்கேயே திரு.வி.க., தன் உரையால் நன்றி முத்தம் பெய்தார். இதைத் தொடர்ந்தே, தை மகளின் வயிற்றில், கருக்கொள்ள ஆரம்பித்திருந்த தமிழர் புத்தாண்டு உருக்கொள்ள ஆரம்பித்தது.
1949 ஜனவரி 15, 16-ல் பெரும்புலவர் தெ.பொ.மீ. தலைமையின் திருக்குறள் மாநாட்டைத் தந்தை பெரியார் சென்னையில் நடத்தினார். அண்ணா, திரு.வி.க., சோமசுந்தர பாரதியார், இலக்குவனார், புலவர் குழந்தை போன்ற அறிஞர் பெருமக்கள் அணிவகுத்தனர். இதுபோன்ற முயற்சிகளால், தமிழர் திருநாளாய் தமிழர் நெஞ்சமெலாம் பொங்கல் பொங்கியது.
தைத்திங்களில் தொடங்கும் திருவள்ளுவராண்டு நாட்காட்டிகளைத் தமிழ் இயக்கங்கள் பரப்பியபோதும், அதற்கு அரசின் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம், செரிக்காத உணவாய் உணர்வாளர்களின் நெஞ்சில் கரித்துக்கொண்டிருந்தது.
இதற்கு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தீர்வு கிடைத்தது. 69-ல் முதல்வராக முதல்முறை பொறுப்பேற்ற கலைஞர் தைப்பொங்கலுக்கு மறுநாளைத்
’திருவள்ளுவர் நாள்’ என பிரகடனம் செய்து, அரசுவிடுமுறை அறிவித்தார். இதன் மூலம், தமிழன்னையின் கோட்டையில் வெற்றிக்கொடி ஏறியது.
1971-ல் தமிழக அரசால் திருவள்ளுவர் ஆண்டு ஏற்கப்பட்டு, அது 1972-ல் அரசிதழிலும் இடம்பிடித்தது. அடுத்து, தை முதல்நாளே தமிழர் புத்தாண்டு என்று 28.1.2008-ல் சட்டப்பேரவையில் சட்டமியற்றிச் சாதனை படைத்தார் கலைஞர். வரலாற்றில், தமிழருக்குக் கிடைத்த மகத்தான பண்பாட்டுப் பதிவு இது.
பின்னர் முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவால் இதனை ஏற்க முடிய வில்லை. 2011-ல் சித்திரையே தமிழர் புத்தாண்டு என, ஏறுக்குமாறாக சட்டத்தை நிறைவேற்றிவிட்டார். இதன்மூலம், தமிழறிஞர்கள் ஏறத்தாழ 80 ஆண்டுகாலம் போராடி, தைமகளின் தலையில் அணிவித்த 'தமிழர் புத்தாண்டு’எனும் மகுடத்தைக் கழற்றி வீசிவிட்டார்.
அடிக்கடி மாறும் அரசாணைகள் வேண்டுமானால், தையை நிராகரிக்கலாம். எனினும், தரணி ஆண்ட தமிழனுக்குத் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...