Monday 25 February 2019

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் - வர்ணாசிரம தர்மமும்

5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வும் - வர்ணாசிரம தர்மமும்
---------------------------------------------------------------------------------------------
அன்றொரு நாள் காட்டில் தன்னந்ததனியாக தவம்(கல்வி) புரிந்துகொண்டிருந்தான் சம்பூகன். சூத்திரன் கல்வி கற்கக்கூடாது என்பதுதானே பார்ப்பன தர்மம், அந்த தர்மத்தை ராமனிடம் சொன்னான் ஒரு பார்ப்பான் அதைக்கேட்டு சம்பூகனின் தலையை வெட்டினான் ராமன். பார்ப்பான் சொன்னான் அரசன் செய்தான்.
அன்றொரு நாள் வில்வித்தையில் சிறந்தவனாய் இருந்தான் ஏகலைவன், சூத்திரனுக்கு வித்தைகள் எதற்கு? விரலைக் கேட்டான் துரோணன் எனும் பார்ப்பான் வெட்டிக்கொடுத்தான் ஏகலைவன். கொடுக்காது இருந்தால் வெட்டியிருப்பான் அர்ஜுனன்.
அன்றொரு நாள் ஆங்கிலேயன் கல்வி தந்தான் சூத்திரனுக்கு, சம்பூகனின் பேரன்களும் ஏகலைவனின் பேத்திகளும் கல்வி கற்றனர். தாங்கமுடியாத கோபத்தோடு காலம் மாறுமெனக் காத்திருந்தது பார்ப்பனியம்.
அன்றொரு நாள் ஆட்சி செய்யும் வாய்ப்பு பார்ப்பனியத்திற்கு வந்தது. பள்ளிகள் இருப்பதால் தானே சூத்திரன் படிக்கிறான் என பள்ளிகளை மூடி குலக்கல்வியை கொண்டுவந்தது அது. அதனை எதிர்த்து கலகம் செய்தான் ஈரோட்டுக் கிழவன், இடஒதுக்கீட்டுக்கு தடை கொண்டுவர முயன்றது பார்ப்பனியம் அப்போதும் களத்தில் இறங்கிப் போராடினான் அந்தக் கிழவன். கிழவனிடம் தோற்ற பார்ப்பனியம் மீண்டும் ஒரு வசந்தகாலம் வருமெனக் காத்துக்கிடந்தது.
அன்றொரு நாள் அனிதா எனுமொரு ஏகலைவனின் பேத்தி 1176 மதிப்பெண் எடுத்தவள் மருத்துவம் படிக்கப் போகிறேன் என்றாள். இனிமேலும் சூத்திரன் மருத்துவம் படிப்பதை அனுமதிக்க இயலாது என பார்ப்பன மூளை பயங்கரமாய் யோசித்தது. ஆளுகின்றவன் கையில் நீட்டைக் கொடுத்தது. நீட்டை எடுத்து அனிதாவிடம் நீட்டி உன் உயிரைக்கொடு என்றான் ஆளுபவன், ஏகலைவனின் பேத்தியல்லவா கேட்டதும் அவளும் கொடுத்துவிட்டாள்.
இன்றொரு நாள் இப்படி யோசித்தது பார்ப்பனியம், மேல்நிலைப் பள்ளி போவதால் தானே சூத்திரன் மேற்படிப்பு படிக்கிறான் 5,8 வகுப்புகளோடு பள்ளியில் இருந்தே துரத்திவிட்டால்... ஆளுபவனின் கையில் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எனும் வஞ்சக திட்டத்தைக் கொடுத்துவிட்டான் பார்ப்பான், பார்ப்பானின் பேச்சுக்கு மறுப்பேது. ஆளுபவன் கொண்டுவந்து திணித்து விட்டான். பார்ப்பான் சொல்லுவான் ஆளுபவன் அதை உடனே செய்வான் அதுவே காலம் காலமாய் இங்கு நடக்கும் வர்ணாசிரம வரலாறு.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...