Friday 23 November 2018

ஜாதி வெறியும் ஆணவப்படுகொலைகளும்

ஜாதி வெறியும் ஆணவப்படுகொலைகளும்
--------------------------------------------------------------------
தெலங்கானாவில் ஒரு ஆணவப் படுகொலை நடந்திருக்கிறது, இதே போன்றதொரு படுகொலை இங்கேயும் நடந்திருக்கிறது. கொலை நடந்த இடங்கள் தான் வேறு வேறு, கொலைக்கான காரணத்திலும் கொலையை நிகழ்த்தியவர்களிடத்திலும் ஒற்றுமை இருக்கிறது. கொலைக்கான அடிப்படைக் காரணம் ஜாதியும் ஆதிக்க ஜாதி வெறி மன நிலையும் தான். தங்களுடைய பெண்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத தந்தைகள் இந்த கொலைகளை செய்துள்ளனர்.
இந்து மதம் தன்னை இந்துவாக கருதிக்கொள்கிற ஒவ்வொரு தனி மனிதனின் மூளையிலும் ஜாதி என்ற நஞ்சை ஆழமாக பாய்ச்சியிருக்கிறது. நால் வர்ணத்தையும் உண்டாக்கி அதில் ஒரு கூட்டத்தை மட்டும் உயர்ந்தவர்களாக சித்தரித்து, ஜாதிப் படிநிலையை உருவாக்கி ஒருவருக்கு ஒருவர் கீழானவர்கள் என்ற கட்டமைப்பை உண்டாக்கி தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் ஏற்பாட்டை செய்து வைத்திருக்கிறது இந்து மதம், இந்த ஏற்பாடு எதற்காகவென்றால் உயர்ந்த நிலையில் இருக்கின்ற கூட்டம் தங்கள் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவும் நிலைநிறுத்திக்கொள்ளவும் தான்.
ஜாதிப் பற்றோடும் ஆதிக்க வெறியோடும் திரிகின்ற ஒவ்வொரு தனி மனிதனுக்கும் படுகொலைகள் செய்திட்ட அந்த பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தைக்கும் பெரிதாக ஒன்றும் வேறுபாடு இல்லை, ஜாதிப் பற்றோடு இருக்கிற ஒவ்வொரு தனி மனிதனும் தன் பிள்ளைகளுக்கு தன் ஜாதியிலேயே மணம் முடிக்கின்றனர். முடியாத பட்சத்தில் தான் ஜாதிக்கு நிகரான மற்றொரு ஜாதியிலோ அல்லது தன்னைவிட உயர் ஜாதியிலோ மணம் முடிக்கின்றனர் ஆனால் தான் கீழாக நினைக்கின்ற ஜாதியில் மணம் முடிப்பதில்லை காரணம் ஆதிக்க ஜாதி வெறி, இது காதல் திருமணத்திற்கும் பொருந்தும் தன் பிள்ளைகள் தன் ஜாதியிலோ அல்லது தன்னை விட உயர்ந்த ஜாதியிலோ உள்ள ஒருவரை காதலிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் பெற்றோர் தான் கீழாக நினைக்கின்ற ஜாதியை சேர்ந்த ஒருவரை தம் பிள்ளைகள் விரும்பும்போது மிகப்பெரிய அளவில் எதிர்க்கின்றனர். சரியான வாய்ப்பும் வசதியும் இருந்து மூளைச்சலவை செய்யக்கூடிய கைதேர்ந்த நபரால் தூண்டப்படும்போது இவர்களும் கொலைகாரர்கள் ஆவதற்கான வாய்ப்பு நிறையவே இருக்கிறது.
இத்தகைய ஆணவப் படுகொலைகள் இல்லாது போக வேண்டுமானால் ஜாதி என்னும் அசிங்கத்தை ஒவ்வொரு தனி மனிதனும் தன் மனதில் இருந்து நீக்க வேண்டும், ஜாதி நீங்கிவிட்டால் ஜாதிஆணவமும் ஆதிக்க ஜாதிவெறி மனநிலையும் இல்லாது போகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற உயர்ந்த மன நிலையை ஒவ்வொருவரும் அடைவதில்தான் இருக்கிறது ஒட்டு மொத்த மனித சமூகத்தின் வளர்ச்சி. ஜாதியை இந்த சமூகத்திலிருந்து துடைத்தெறிய வேண்டிய பெரும் பொறுப்பு ஜாதி ஒழிப்பு போராளிகளுக்கு நிறையவே இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...