Friday 23 November 2018

படேலும் மோடியும் – ஒற்றுமைக்கான சிலையும்

படேலும் மோடியும் – ஒற்றுமைக்கான சிலையும்
----------------------------------------------------------------------------
நரேந்திர மோடி வல்லபாய் படேலுக்கு உலகத்திலயே மிக உயரமான சிலையை(597 அடி) 3000 கோடி செலவில் நிறுவி அதனை திறந்து வைத்திருக்கிறார். இந்த சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என்று பெயரிடிடப்பட்டுள்ளது. மோடிக்கும் படேலுக்கும் உள்ள ஒற்றுமைக்காக இந்த பெயரை வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த படேலுக்கும் பாஜாகவைச் சேர்ந்த மோடிக்கும் என்ன ஒற்றுமை, இந்துத்துவா என்பது தான் அவர்களுக்குள்ள ஒற்றுமை அவர்கள் இருவரும் இணைகின்ற புள்ளி அதுதான். இன்னும் புரியும்படியாக சொல்ல வேண்டுமானால் அப்போதைய மோடி தான் படேல், இப்போதுள்ள படேல்தான் மோடி. மோடியின் முன்னோடிதான் இந்த படேல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் ஒரு இந்துத்துவாவாதி இருந்தால் அவர்களது எண்ணமும் செயல்பாடும் எப்படி இருக்கும் என்பதற்கு படேலும் மோடியுமே எடுத்துக்காட்டு.
வல்லபாய் பட்டேலைத் தன் நாயகனாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிறுத்துவதற்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்து மதவெறி அரசியலுக்கு ஏற்பளித்த, இஸ்லாமியர்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட போது அதைப்பற்றிக் கவலைப்படாமல், இந்து மத வெறி அமைப்புகளுக்கு ஆதரவாக நின்ற தலைவர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் மற்றும் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேல். படேலைத் தங்கள் நாயகனாக இந்துத்துவவாதிகள் முன்னிறுத்துவதற்க்கான காரணம் இதுதான்.
ஆங்கிலேயர்கள் சேர்த்து பயிற்சி கொடுத்து வைத்திருந்த இராணுவத் தைப் பயன்படுத்தி எல்லா பகுதிகளையும் வலுவில் பிடுங்கி ஒருங்கிணைத்துவிட வேண்டும் என்ற உந்துதலும் முனைப்பும் படேலிடம் மிகுந்து கிடந்தன. இதே கனவுதான் ஆர்.எஸ்.எஸ் இடம் ‘அகண்டபாரதம்’ என்ற திட்டமாகவும், காந்தியைக் கொலை செய்த நாதுராம் கோட்சேயிடம் ‘இந்து ராஷ்டிரம்’ என்ற பெயரிலும் இருந்து வந்தது. இன்று நரேந்திர மோடியும், வல்லபாய் பட்டேலும், பிற இந்து மதவாத அமைப்புகளும் எந்த புள்ளியில் சந்திக்கிறார்கள் என்பது இப்போது புரியும் ‘இந்து மயமே இந்தியம்’, ‘வன்முறையே வழிமுறை’ என்பதில் கோட்சேவுக்கும், பட்டேலுக்கும், நரேந்திர மோடிக்கும் வேறுபாடே கிடையாது.
மோடி ஒரு இந்துத்துவாவாதி என்பது நமக்கு நன்றாகத் தெரியும், படேலின் பேச்சுக்களையும் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் அறிந்துகொண்டால் அவரும் இந்துத்துவாவாதிதான் என்பது நன்கு விளங்கும்.
இந்தியாவில் பணிபுரிய விருப்பந்தெரிவித்த முஸ்லிம் அதிகாரிகள்கூட இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஆகவே, அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்பது படேலின் கருத்து.
வங்காளத்தில் கலவரத்தில் முஸ்லிம்கள் பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி, அதைத் தடுக்கவே ஆள் இல்லா நிலை ஏற்பட்ட போது, படேல் 1946 ஆகஸ்ட் 21 அன்று இராஜகோபாலாச்சாரியாருக்கு எழுதிய கடிதத்தில், இவ்வாறு குறிப்பிட்டார்: “பாதுகாப்பும் ஒழுங்கும் முற்றிலுமாக நொறுங்கியது; இவற்றைத் தடுக்க எவருமே இல்லை. ஆனாலும், முஸ்லீம்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். ஏனெனில், இறந்தவர்களில் விகிதாச்சாரத்தில் முஸ்லிம்களே கணிசமாக அதிகம் என்று நான் கேள்விப்படுகிறேன்.’’
வங்கப் பிரிவினை நிகழ்ந்த போது அங்கிருந்து இந்துக்கள் இந்தியாவை நோக்கி வெளியேறினர். அப்போது படேல்,இந்துக்கள் கிழக்கு வங்காளத்தில் இருந்து வெளியேற நேர்ந்தால் அதே அளவு எண்ணிக்கையுள்ள முஸ்லிம்கள் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்படுவர் என்று இந்தியா பாகிஸ்தானை எச்சரிக்க வேண்டும் என்று யோசனை கூறியிருக்கிறார். இதுதானே இந்துத்துவா யோசனை.
‘முஸ்லிம்கள் தாக்கினார்கள்’ என்ற புகார் வந் தாலே, அதைப் பற்றி விசாரிக்காமலே “அப்பகுதிகளில் உள்ள இந்துக்களின் கோழைத்தனம் அவ மானகரமானது’’ என்று படேல் கருத்துரைத்தார்.
இந்து மகா சபையினரையும் காங்கிரசில் சேர அழைத்தார் வல்லபாய் படேல். ‘இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் மட்டுமே என்று நீங்கள் கருதியிருந்தால், தவறு செய்கிறீர்கள்’ என்று கூறினார்.
‘ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தங்கள் அறிவுத் திறனைப் பயன்படுத்தி சாதுர்யமாக செயல்பட வேண்டும்’ எனக் கூறிய படேல், இஸ்லாமியர்களை நோக்கி, ‘நாட்டுப்பற்று அற்றவர்கள் பாகிஸ்தானுக்குப் போய்விட வேண்டும். இன்னமும் இரண்டு குதிரைகளில் சவாரி செய்கிறவர்கள் (முடிவெடுக்காதவர்கள்) இந்துஸ்தானத்தை விட்டு வெளியேறி விட வேண்டும்’ என்றார் இந்தியா என்று சொல்லை விட இந்துஸ்தானம் என்ற சொல் படேலுக்கு இனிப்பானது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை அடக்கி வைக்க வேண்டும் என்று கோருவோர் காங்கிரசில் இருந்தனர். படேல் அவர்களுக்குக் கூறினார்.
‘காங்கிரசின் அதிகாரமான இடத்தில் இருப்பவர்கள் தங்கள் அதிகார நிலையைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நொறுக்கிவிடலாம் என்று கருதுகிறார்கள். ‘தடி’ எடுத்து ஓர் அமைப்பை அடக்கி விட முடியாது. மேலும் ‘தடி’ என்பது திருடர்களுக்கும் கொள்ளைக்காரர்களுக்குதான். தண்டம் எடுப்பது அதிக பலனைத்தராது. அது மட்டுமல்லாது, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் திருடர்களோ கொள்ளைக்காரர்களோ அல்லர். அவர்கள் தேச பக்தர்கள். அவர்களின் சிந்தனைப் போக்கு மட்டுமே மாறுபட்டது. காங்கிரசுக்காரர்கள் அவர்களை அன்பால் வெற்றி கொள்ள வேண்டும் (‘For a United India’, Speeches of Sardar Patel, Publi cation Division, Govt. of India, pp.64-69; A.G.Noorani, Patel’s Communalism, p.15)
நேரு வெளிநாடு சென்றிருந்த நேரம், அவர் அருகே இல்லாததைப் பயன்படுத்தி, 1949 நவம்பர் 10ஆம் தேதி, ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினரை காங்கிரசில் சேர அனுமதித்து தீர்மானம் இயற்றினார் படேல். நேரு திரும்பி வந்து, நவம்பர் 17 அன்று இத் தீர்மானத்தை இரத்து செய்தார்.
1948 செப்டம்பர் 9 அன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் கோல்வால்கருக்கு படேல் எழுதிய கடிதத்தில் ‘ஆர்.எஸ்.எஸ். பரப்பிய வகுப்புவாத நஞ்சினால்தான் காந்தியை இழக்க வேண்டி வந்தது’ என்று எழுதினார். ஆனால், அதே கடிதத்தில் ஆர்.எஸ்.எஸ் தனது தேசப்பற்று செயல்பாடுகளை காங்கிரஸ் சேர்வதன் மூலமே செய்ய முடியும் என்று அழைப்பு விடுத்தார். படேலின் பார்வையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு தேசப்பற்றாளர் அமைப்பு.
காந்தியின் படுகொலைக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய கோல்வால்க்கர் 1948 நவம்பர் 13 அன்று கைது செய்யப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் ஒரு அமைப்பு வரைவைத் தயாரித்து அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கும்படிக் கூறினார் படேல். இதைப் பெற்றுக் கொண்டு (சூன் 1949) ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீதான தடையை படேல் நீக்கினார். (12சூலை 1949) மறுநாள் கோல்வால்க்கரும் விடுதலை செய்யப்பட்டார்.
ஆர்.எஸ்.எஸ். மீது கட்டாயத்தின் பேரிலேயே படேல் தடை விதிக்க நேர்ந்தது. 1949 ஜீலை 12இல் ஆர்.எஸ்.எஸ் மீதான தடை நீக்கப் பட்டது. படேல் கோல்வால்கருக்குக் கடிதம் எழுதினார். அதில். ‘எனக்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும், சங்கத்தின் மீதான தடை நீக்கப்பட்ட போது எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் என்பது’ என்று எழுதினார்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை பாதுகாக்கிற வேலையை படேல் செய்தார். காந்தியின் படுகொலையினால் ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபை முழுவதும் பாதிக்கப்பட்டுவிடாமல், அகப்பட்டுக் கொண்ட அந்த சிலரோடு பிரச்சினை முடிக்கப்பட வேண்டும் என்பது அவருடைய உள்ளார்ந்த விருப்பமாக இருந்தது. 1948 பிப்ரவரி 27இல் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், படேல் ” நமக்கு முன் உள்ள சான்றுகளின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். அல்லது இந்து மகா சபையின் வேறு எந்த உறுப்பினரையும் தண்டிக்க இயலாது என்றே நான் கருதுகிறேன்’ என்று குறிப்பிட்டார். இது ஆர்.எஸ்.எஸ் செய்தது அல்ல என்பதே கடிதத்தில் வலியுறுத்தப்பட்ட செய்தி.
நரேந்திர மோடி கோரும் மத சார்பின்மை(!) வல்லபாய் படேலிடம் இருந்தது. அது முஸ்லிம்கள் விரட்டப்படுவதை, கொத்துக் கொத்தாய் கொல்லப்படுவதை ஏற்றுக் கொண்டது.
இந்துத்துவாவாதியாக செயல்பட்ட படேலுக்கு மோடி சிலை வைக்கிறார் என்றால் ஆச்சரியம் இல்லை, சிலை வைக்காமல் இருந்தால் அது நன்றி கெட்டதனமல்லவா? இனம் இனத்தோடு சேர்ந்திருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...