Saturday 25 August 2018

மனிதநேயமும் ஐயப்பனின் கோபமும்

ஒவ்வொரு இயற்கைப் பேரிடரும் உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் தாங்கமுடியாத வலியையும் சொல்லமுடியாத சோகத்தையும் தந்துவிட்டு செல்வதோடு மனிதநேயத்தின் வலிமையையும் சொல்லிவிட்டுத்தான் செல்கிறது.
ஒவ்வொரு சாதாரண மனிதனும் மனிதநேயம் மிக்கவனாகவே இருக்கிறான். பேரவலம் நடைபெறும்போதெல்லாம் பிறரது துன்பத்தை கண்டு ஓடோடிச்சென்று உதவுபவனாகவும் தம்மால் இயன்றதை கொடுப்பவனாகவும் ஏதும் செய்ய இயலாத போது ஆற்றாமையில் கண்ணீர் விட்டு அழுகின்றவனாகவுமே இருக்கிறான்.
மனிதநேயம் மிக்கவர்களாலேயே இந்த உலகம் இன்னும் நிலை பெற்றிருக்கிறது இல்லாது போனால் உலகம் என்றோ மண்ணோடு மண்ணாயிருக்கும். சாதி மதம் இனம் மொழி கடவுளின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்கள்தான் மனிதநேயமற்ற இழிபிறவிகளாக இருக்கின்றனர்.
அனுப்ரியா என்ற விழுப்புரத்தில் உள்ள சிறுமி கேரளத்தில் நிகழ்ந்த இயற்கை பேரழிவை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஒரு குழந்தை அழுவதைப் பார்த்து தானும் அழுதவள் அவர்களுக்கு ஏதாவது உதவி செய்யவேண்டும் என எண்ணி தான் மிதிவண்டி வாங்குவதற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை கொடுத்து உதவி இருக்கிறாள், ஒருவர் அழும்போது தான் அழுவதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற அந்த சிறுமியின் எண்ணம்தான் ஒவ்வொரு சாதாரண மனிதனின் எண்ணமும்.
மெத்தப்படித்த அறிவாளியாக சுட்டிக்காட்டப்படுகிற ஆடிட்டர் குருமூர்த்தி கேரள பேரழிவிற்கு காரணம் அனைத்து பெண்களையும் ஐயப்பன் கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு போட்டதனால் ஐயப்பன் கொண்ட கோபம் தான் என்கிறார், சுனாமி வந்ததற்கு காரணம் சங்கராச்சாரியாரை கைது செய்ததுதான் என்று கூறியவர்கள்தான் இவர்கள்.
ஒரு பேரவலம் நடைபெறும்போது கூட தங்கள் மதத்தையும் மதக்கருத்துக்களையும் நிலைநிறுத்த முயல்கின்ற கொடூர மனம் படைத்த மதவாதிகள். இவர்கள் பிழைப்பு நடத்துவற்கு மதம் வேண்டும் மதம் நிலை பெற்றிருக்க வேண்டும் என்பது மட்டுமே இவர்களின் ஒரே சிந்தனை, இது கடவுள் தந்த தண்டனை எல்லோரும் அனுபவியுங்கள் என்று சொல்வது எப்படிப்பட்ட குரூர மனத்தின் வெளிப்பாடு,மதவாதிகளுக்கும் மனித நேயத்திற்கும் வெகுதூரம், இல்லையென்றால் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரை தீயிட்டுக் கொளுத்தியிருப்பார்களா.
இந்த உலகில் இன்னும் மனித இனம் நிலைபெற்று வாழ்வது அனுப்ரியாக்களால் தான். அனுப்பிரியாக்களை வளர்ப்பதில்தான் இருக்கிறது எதிர்கால மனிதகுலத்தின் வாழ்வு.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...