Tuesday 7 August 2018

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்

அறத்தை மீறிய ஆசிரியர்களும், கண்டுகொள்ளாத களவானிகளும்
------------------------------------------------------------------------------------------
தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தந்து அவர்களை சிறந்த மனிதர்களாக ஆக்கும் பொறுமையும் திறமையும் ஆசிரியர்களுக்கு உண்டு என ஒவ்வொரு பெற்றோரும் நம்புகின்றனர் ஆனால் இந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமான செய்திகளே அடிக்கடி வந்து கொண்டிருக்கின்றன.
அண்ணா பல்கலைக்கழகம் உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு கல்வி நிறுவனம், இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை உலக அளவில் இருக்கிறது அதனாலேயே மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் இங்கு பயின்ற மாணவர்களை பணியில் அமர்த்திக்கொள்கின்றனர். ஆனால் இந்த நம்பிக்கையை கெடுக்கும்விதமாகவும் பல்கலைக்கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
தங்கள் தேர்வுத்தாள்களை மறுகூட்டல் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்த மாணவர்களிடமிருந்து லஞ்சமாகப் பணத்தைப் பெற்றுக்கொண்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கும் தோல்வி அடைந்தவர்களுக்கும் அதிக மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். இந்த ஊழல் முறைகேட்டில் இதுவரை 200 கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்டிருக்கிறது. இந்த ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் அனைவருமே உயர் கல்வி கற்று உயர் பதவியில் இருந்து கொண்டு அதிக சம்பளம் பெறக்கூடிய பேராசிரியர்களும் உதவிப் பேராசிரியர்களும் தான்.
அறத்தை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்கள் அறத்தின் மீது அக்கறை இல்லாமல் பொருளின் மீது பேராசை கொண்டிருக்கின்றனர். நாமும் இவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளை அனுப்பி வைக்கிறோம் அறத்தையும் நல் ஒழுக்கத்தையும் கற்றுத்தருவார்கள் என நம்பி. இவர்களிடம் பயிலும் மாணவர்களிடம் நாம் எவ்வாறு அறத்தையும் ஒழுக்கத்தையும் எதிர்பார்க்க முடியும், இவ்வாறு பணம் கொடுத்து மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று வெளியில் வரும் மாணவன் இந்த சமூகத்துக்கு என்ன நல்லது செய்வான். பெற்றோருக்குத் தெரியாமல் இந்த குற்றச்செயல் நடந்திருக்க முடியுமா அப்படியானால் தங்கள் பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதிர்பார்ப்பதுதான் என்ன, அறம் வேண்டாத பொருள் மட்டும் தானா. பணம் மட்டும் இருந்தால் போதும் ஒருவன் படிக்காமலேயே அதிக மதிப்பெண்ணுடன் பட்டமும் பெற்று வேலையும் பெற்றுவிட முடியுமானால் எதற்காக இந்த கேடுகெட்ட கல்விமுறை தேர்வுமுறை.
இது எதுவுமே தெரியாமல் ஏதாவது ஒரு அரசு வேலை கிடைத்துவிடாதா என்று எண்ணி அரசுப்பணிக்காக நம்பிக்கையோடு தொடர்ந்து தேர்வெழுதி வருகிறதே ஒரு இளைஞர் கூட்டம் அவர்களுக்கு இந்த சமூகம் சொல்ல வருவதுதான் என்ன. இந்த இளைஞர்கள் விரக்தியுற்று ஒரு கட்டத்தில் தவறான பாதையில் செல்லும்போது அவர்களுக்கு அறிவுரை சொல்ல வரும் அறிவாளிகள் கூட்டம் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறது.
உலக அளவில் நடக்கின்ற ஊழல்களைப் பற்றி எல்லாம் வாய்கிழிய பேசியும் எழுதியும் வரும் நாம் நம்மைப்போன்ற சக மனிதர்களின் ஊழல்களை கண்டும் காணாமல் கடந்துவிடுவது எதனால், உண்ணுவது உறங்குவதைப்போல் ஊழலும் சாதாரண நிகழ்வுதான் என எண்ணத் தொடங்கிவிட்டோமா, நம்மைப்போன்ற ஒருவர்தானே செய்திருக்கிறார் என்ற பாசமா, வாய்ப்புக் கிடைத்தால் நாமும் யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யலாம் என்கிற கேடுகெட்ட மனநிலையா. இனி வரும் காலங்களில் தனி மனித ஊழல்வாதிகள் பெருகி வருவர், தனி மனித ஊழல்வாதிகள் நிறைந்த சமூகத்தை ஆள்வதற்கு ஊழல் அரசர்களே வருவார்கள் உத்தமர்கள் வரப்போவதில்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...