Tuesday 7 August 2018

அடிமைகளின் வாழ்க்கை

அடிமைகளின் வாழ்க்கை
----------------------------------------
அப்படி ஒன்றும் எளிதானதல்ல அடிமைகளாய் வாழ்வது, சூடு சொரணை வெட்கம் மானம் எல்லாவற்றையும் உதிர்த்து விட வேண்டியதாய் இருக்கிறது, விடுதலை உணர்வோடும் தன்மானத்தோடும் வாழத்தெரிவதில்லை அடிமைகளுக்கு, அடிமைகளாய் நடத்தும் ஏதாவதொரு எஜமான் தேவையாய் இருக்கிறது எப்போதும் அவர்களுக்கு, முகத்தில் காறி உமிழ்ந்தாலும் துடைத்துவிட்டு மீண்டும் துப்புங்கள் எஜமான் என்று முகத்தைக்காட்டும் மனப்பக்குவம் தேவையானதாக இருக்கிறது. ஆகச் சிறந்த அடிமை தான்தான் என்பதை நொடிக்கொரு முறை நிரூபிக்க வேண்டியதாக இருக்கிறது.
அடிமைகளுக்குள் அவ்வப்போது போட்டியும் வந்துவிடுகிறது யார் மிகச் சிறந்த அடிமையென்று காட்டிக்கொள்வதில், அடிமைத்தனத்தில் புதிய யுக்திகளை கற்றுக்கொண்டுவரும் புதிய அடிமைகளிடம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டி இருக்கிறது அதற்காக தனது அடிமைத்தன உத்திகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியமாகி விடுகிறது. எஜமானர்கள் காலில் விழுவதற்கு தயாராக இருக்க வேண்டியிருக்கிறது எங்கேயும் எப்போதும். எட்டி உதைத்தாலும் உதைத்த கால்களை தொட்டு வணங்கி கால்கள் வலிக்கிறதா எஜமான் என்று கேட்கக்கூடிய பொறுமை அவசியமாகிறது.
அறிவாளிகளாலும் திறமையாளர்களாலும் அவர்களுக்குரிய இடத்தை எஜமானர்களிடத்தில் பெற்று விட முடியும் ஆனால் அந்த இடத்தில் காலமெல்லாம் நீடித்து இருப்பதற்கு அடிமைகளால் மட்டும் தான் முடியும், எஜமானர்களுக்கு எப்போதும் அடிமைகளையே பிடித்திருக்கிறது அடிமைகளுக்கும் தங்களை அடிமைகளாய் நடத்தும் எஜமானர்களையே பிடித்திருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...