Thursday 15 March 2018

நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
காமம் தலைகேறிய
உன் வக்கிரக் கண்களால்
எங்கேயும் என்னை 
வன்புணர்வு செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
வெறும் பாலுறுப்பாகவே
என்னை எப்போதும் பார்க்கிறாய்
நான் ஆறாக இருந்தாலும்
அறுபதாக இருந்தாலும்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
என்னை அவமானப்படுத்த
நடத்தை சரியில்லை என
எளிதாகச் சொல்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நான் அடைந்த உயரமெல்லாம்
பெண்ணாக இருப்பதால் என
பொதுவெளியில் பகடி செய்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
கூண்டைத் தூக்கிக்கொண்டே
பறக்கச் சொல்கிறாய்
சாவியை உன் கையில் வைத்துக்கொண்டு
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
சாலைகளில்
உன் வாகனத்தை நான் முந்துவதையே
ஏற்றுக்கொள்ள முடியாத நீ
எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நீ ஈட்டும் பொருள்
உனது என்கிறாய்
நான் ஈட்டும் பொருளும்
உனதே என்கிறாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து
நான் எப்போதும் இருக்கிறேன்
தாயாய் மகளாய் சகோதரியாய்
தோழியாய் துணைவியாய்
ஆனால் நீ மட்டும் இருக்கிறாய்
எப்போதும் ஒரு ஆணாய்
நீ எதற்காகச் சொல்கிறாய் மகளிர் தின வாழ்த்து

பெரியார் – சிலை அல்ல மலை

பெரியார் – சிலை அல்ல மலை
வெறும் பெயர் அல்ல
தமிழகத்தின் உயிர்
அது சிலை அல்ல
எதிரிகளை மோதிச் சாய்த்த
மலை
அவர் வாய்ப் பேச்சு
எரி அனல் வீச்சு
அவர் காவிகளை ஓடவிட்ட
கலகக்காரன்
உங்களுக்கு வைத்தது
அது உலை
அதனால் நீ இடுகின்றாய்
ஊளை
உங்களுக்கு மரண அடி
காரணம்
அந்த வெண்தாடி
அவர் மண்டைச் சுரப்பை
உலகு தொழும்
நீ இழிவு படுத்தினால்
உன் முதுகில் விழும்
வளைந்த கைத்தடி
உன் எலும்பை ஆக்கும்
பொடிப்பொடி
அவரோ பெரு நெருப்பு
நீ
வெறும் காதறுந்த செருப்பு

அனிதா நீயொரு பெருநெருப்பு

அனிதா
நீயொரு பெருநெருப்பு
ஆயிரமாயிரம் தீப்பந்தங்களை
ஏற்றி வைத்த தீச்சுடர் நீ
நீ
மனுநீதியால் மரித்துப்போன
சமூகநீதி
கோழையல்ல
நீ
போராளி
இறந்தும் போராட
போராளிகளால் மட்டுமே முடியும்
தீலிபனையும் உன்னையும் போல
எழுதியோ பேசியோ
சொல்ல முடியாத ஏதோவொன்றை
மறைந்து போய் எங்களுக்குச் சொல்லிவிட்டாய்
மாட்டிற்காகக் கூடிய நாங்கள்
நீட்டிற்காகக் கூடாமல் போனோமோ
திரையரங்க இருட்டிற்குள்
மண்டியிட்டு மதியிழந்தோமோ
தாயே எங்களை மன்னித்து விடு
உன்னை இழந்ததற்காக
நாங்கள் கண்ணீர் விடுகின்றோம்
நீ ஏற்றி வைத்த பெருநெருப்பை
எம் நெஞ்சங்களில் ஏந்துகின்றோம்
மனுநீதி அழித்து
சமூகநீதி காப்பதற்காய்

லோக குரு

லோக குரு என்றார்கள்
நானும் நம்பினேன்
வாழும் தெய்வம் என்றார்கள்
நானும் நம்பினேன்
அனைத்தும் அவரென்றார்கள்
நானும் நம்பினேன்
முதுமை வந்தாலும்
மரணம் வராதென
நானும் நம்பினேன்
தேவலோக விமானம் வரும்
அதில் தேவர்கள் இருப்பர்
கூடவே தேவதைகளும் இருப்பர்
கழுத்தில் மாலை சூட்டி
பூ மழை பொழிந்து
தேவலோகம் அழைத்துச் செல்வர்
என்றெல்லாம் நம்பினேன்
ஆனால்
எப்போதும்
நோய் வந்தே சாகின்றன
கடவுளின் அவதாரங்களும்
இறைத் தூதர்களும்
வாழும் தெய்வங்களும்.

சிரியாவின் குழந்தைகளே - உங்கள் புன்னகையைப் பறித்தது யார் ?

சிரியாவின் குழந்தைகளே - உங்கள் புன்னகையைப் பறித்தது யார் ?
மணல்வீடு கட்டி விளையாட வேண்டிய நீ
மரித்துக்கிடக்கிறாய் மணல் வெளியில்
தீவிரவாதத்தின் தீராப்பசிக்கு
உணவாகிப் போனாய் நீ
பிறந்த நாட்டின் உள்நாட்டுப்போர் பற்றி
ஏதேனும் தெரியுமா உனக்கு
மரணம் என்ற சொல்லை உச்சரிக்க அறியுமா
உன் மழலை நாக்கு
வல்லாதிக்க நாடுகளின் ஆதிக்கத் திமிருக்கு
ஐயோ நீ பலியானாய்
இந்தப் பிஞ்சுகளின் உயிர் பருக
எப்படித்தான் மனது வந்ததோ
கொடுமை கொடுமை
உயிர் பிரியும் நேரத்தில் எப்படித் துடித்திருப்பாய்
நினைக்கும்போதே கண்ணில் நீர் நிறைகிறது
நீ மரணித்து
எங்களைக் காட்டுமிராண்டிகள் எனச்
சொல்லாமல் சொல்லிவிட்டாய்
மனிதகுலத்தின் மனிதநேயத்தின் மீது
காறி உமிழ்ந்துவிட்டாய்
செருப்பணிந்த உன் கால்களினால்
உலகத்தின் முகத்தில் ஓங்கி உதைத்துவிட்டாய்
உனைக் காப்பாற்ற வக்கில்லாத
மனித சமூகமும் கடவுள்களும்
மண்ணோடு மண்ணாகப் போகட்டுமென்று
சாபமிட்டுவிடு என் செல்லமே.

உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம் உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்
பஞ்சமனென்றாய்
தாழ்ந்தவனென்றாய்
சூத்திரனென்றாய்
இழிபிறப்பென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
பார்த்தாலே பாவமென்றாய்
ஏகலைவன் விரலொடித்தாய்
சம்புகனின் தலை பறித்தாய்
தீண்டத்தகாதவனென்றாய்
சேரியிலே வாழவைத்தாய்
வெட்டுவேன் நாக்கையென்றாய்
ஈயம் காதில் ஊற்றுவேனென்றாய்
தகுதி திறமை இல்லையென்றாய்
இடஒதுக்கீடு எதற்கென்றாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்குள் வராதேயென்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
கொழுந்துவிட்டு எரிந்தன குடிசைகள்
நாங்கள் கதறியழும்போது
ஏனென்று கேட்காத
உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...