Monday 6 August 2018

இராஜாஜியும் குலக்கல்வியும்

"என் பாட்டன் ராஜாஜி குலக்கல்வியை கொண்டு வந்ததை தவிர வேறு எந்தத் தவறையும் செய்ய வில்லை - "சீமான்"
இராஜாஜியும் குலக்கல்வியும்
-----------------------------------------------
அன்றைய சென்னை மாகாணத்தின் முதல்வராக 1952 முதல் 1954 வரை இராஜாஜி இருந்தார். அவர் கொண்டு வந்த திட்டம் தான் “குலக்கல்வி”. தந்தை பெரியார் துவங்கி சாதாரணமானவர்கள் வரை எதிர்த்த திட்டம். அந்த திட்டம் என்ன? அதாவது, தினமும் மூன்று மணி நேரம் மட்டுமே கல்வி. மீதி நேரம் தகப்பன் செய்யும் தொழிலை கற்றுக் கொள்ளவேண்டும். எவ்வளவு அருமையான திட்டம்?
அதாவது இராஜாஜி போன்ற பார்ப்பனர்கள் படித்து, பட்டம் பெற்று, பதவி சுகத்தை அடையலாம். அதே வேளை முடிவெட்டுகிற குப்பனின் மகன் பள்ளிக்கு செல்லலாம் அங்கு மூன்று மணி நேரம் இருந்து விட்டு வந்து முடிவெட்ட தகப்பனாருடன் வீடு வீடாக சென்று ‘தொழில்’ பழகலாம். அப்படியே காலப்போக்கில் படிப்பை நிறுத்தி முடி திருத்தும் தொழிலில் ஈடுபடலாம். என்ன உயரிய சிந்தனை? துணி வெளுப்பவர் மகன் துணி வெளுக்கவும், செருப்பு தைப்பவர் மகன் செருப்பு தைக்கவும், மீன் விற்பவர் மகன் மீன் விற்கவும், மணியாட்டி பூஜை செய்பவர் மகன் மணியாட்டவுமான சாதிச் சாக்கடையை கட்டிக்காக்கிற சாக்கடை நாற்றெமெடுக்கிற ஆரிய சிந்தனையின் வக்கிரம் தான் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டம்.
அன்று இந்த குலக்கல்வித் திட்டத்தை முழுவேகமாக சிலிர்த்தெழுந்து சிங்கமாக தந்தை பெரியார் எதிர்த்ததால் இன்று அனைவருக்கும் அடிப்படைக் கல்வியும் தொழில்நுட்ப கல்வி என்பதும் நடைமுறையாகி இருக்கிறது. அந்த எதிர்ப்பை தாங்காது இராஜாஜி பதவியை துறக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் என்பது தான் உண்மை. இராஜாஜி பதவி துறந்தது 1954.இராஜாஜி பதவியிழந்த பின்னர் தந்தை பெரியாரால் ஆதரவளிக்கப்பட்டு படிக்காத மேதை காமராஜர் முதலமைச்சரானார்.
குலக்கல்வி திட்டத்தை ஒழித்ததோடு அதிக எண்ணிக்கையில் பள்ளிகள், கல்லூரிகளை திறந்து அனைவருக்கும் கல்வியை தந்தார் காமராஜர். இலவச கல்வி முறை, மதிய உணவு திட்டம் என சமூக நோக்கான உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்து ஏழை வீட்டு பிள்ளைக்கும் கல்வி கிடைக்க செய்தார். அதன் விளைவு தான் இன்று பார்ப்பனர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் கல்வி என்பது நடைமுறையானது. அனைவரும் மருத்துவம், சட்டம், பொறியியல் என படிக்க முடிந்தது. (திராவிட இயக்கங்களின் சாதனை, தாக்கமென்ன என முகமூடியணிந்து கேட்பவர்களுக்கு இதுவும் சாதனைகளில் ஒன்று என்பது புரியட்டும்.)
இராஜாஜி பதவியை விட்டு இறங்கியதும் அரசுக்கு நெருக்கடி தீர்ந்தது எப்படி? பள்ளிகளுக்கு கட்டிடங்கள், ஆசிரியர்கள், புதிய பள்ளிகள், கல்லூரிகள், மதிய உணவு என திட்டங்கள் வந்தது எப்படி? அப்படியானால் இராஜாஜிக்கு நிர்வாக திறனில்லை! அல்லது அவர் சார்ந்த பார்ப்பன குலத்தின் வேதங்கள் சொல்லுகிற சாதியை கட்டிக்காக்க அரசு திட்டங்கள் தீட்டி தனது ‘சாணக்கியத்தனத்தை’ நிரூபித்தார். அந்த குலக்கல்வி சாணக்கியம் பெரியார், காமராஜர் என்கிற திராவிடர்களால் அழிக்கப்பட்டது என்பது வரலாறு.
இராஜாஜியின் குலக்கல்வி திட்டம் மனிதனை அடிமையாக வைத்திருக்கும் தந்திரமுடையதே தவிர கல்வியை வழங்குவதோ அல்லது வேலைவாய்ப்பின்மையை களையும் நோக்கமுடையதோ அல்ல. கல்வி பயிலும் பார்ப்பனரல்லாத ஒவ்வொருவரும் மனதில் நிறுத்த வேண்டிய தலைவர்கள் பெரியார், காமராஜர் என்பதை தமிழக வரலாறு பதிவு செய்துள்ளது.
ராஜாஜி இரண்டு முறை சென்னை மாநிலத்திற்கு முதல் அமைச்சராக வந்தார்.இரண்டு முறையும் தேர்தலில் நின்று மக்கள் வாக்குப் பெற்று முதல் அமைச்சர் ஆனவர் இல்லை. கொல்லைப்புறம் வழியாக (மேல்சபை மூலம்) உள்ளே நுழைந்தவர்தான் அவர்.
1937இல் முதல் அமைச்சராக வந்தபோது அவர் செய்தது 2500 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடியது,அதே நேரத்தில் ரூ.12 லட்சம் செலவில் சமஸ்கிருதக் கல்லூரியை ஏற்படுத்தினார். 1952_54 காலகட்டத்தில் இரண்டாவது முறையாக மாநில முதல் அமைச்சராக வந்தபோது அரசிடம் போதிய நிதி இல்லை என்று சொல்லி 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் மூதறிஞர் ராஜாஜி(!?). ஆனால் அதே நேரத்தில் வேதபாடசாலைகள் திறக்கப்பட்டன.இருமுறை முதல் அமைச்சராக வந்தபோதும் அவர் செய்ததெல்லாம் பள்ளிக் கூடங்களை இழுத்து மூடியதுதான்.காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய பள்ளிகளை திறந்ததோடு மட்டுமல்லாமல் மேலும் ஆயிரக்கனக்கான பள்ளிகளை திறந்தார். அதன் மூலம் தமிழகத்தில் கல்வி புரட்சி ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த 60,70 ஆண்டுகளில் என்ன நடந்தது என்பது இப்போது இருக்கும் இளைய சமுதாயத்திற்கு தெரியவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம்.
அண்ணன் சீமான் சொல்வதே அரசியல்,வரலாறு என நம்பி கைதட்டி விசிலடித்து சில்லரைகளை சிதற விடும் தம்பிகளை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...