Friday 23 November 2018

சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னாவின்(ஜூன் 14, 1928 – அக்டோபர் 9, 1967)
----------------------------------------------------------------------------
தன் நாட்டிற்காக,இனத்துக்காக,மக்களுக்காக புரட்சி செய்த புரட்சியாளர்கள் உண்டு. இதில் சே குவேரா சற்று வித்தியாசமானவர், அர்ஜென்டினாவில் பிறந்த அவர் கியூபா,மெக்ஸிகோ,காங்கோ,பொலிவியா நாட்டு மக்களுக்காக புரட்சி இயக்கங்களில் கலந்து கொண்டு போராடினார்.
எனக்கு வேர்கள் கிடையாது கால்கள் தான் உண்டு என்று கூறிய சே குவேரா மக்களை நோக்கிய தனது பயணத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களின் வாழ்வியலை தெரிந்து கொண்டார். அவர்கள் படும் இன்னல்களையும் துயரங்களையும் கண்ட பிறகே அடிமைப்பட்டவர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராட வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றுகிறது. மானுடப்பற்று கொண்டவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமான ஒன்று.
கியூபாவின் புரட்சியை சேகுவேராவை தவிர்த்துவிட்டு எழுதிவிட முடியாது. எங்கோ அர்ஜென்டினாவில் பிறந்து, கியூப விடுதலைக்காக போராடவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. ஆனால் அவர் விலங்கு பூட்டப்பட்ட மக்களின் விடுதலையில்அளவு கடந்த நம்பிக்கை வைத்திருந்தார். மருத்துவம் பயின்ற ஒருவர், ஆஸ்துமா நோயுடன் கைகளில் துப்பாக்கி ஏந்தி படைத் தளபதியாக செயல்பட முடியுமென்றால், அது சேகுவேரா எனும் சாகசக்காரனால்தான் முடியும்.
சேவும் காஸ்ட்ரோவும் இணைந்து நடத்திய புரட்சியால் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா ஆட்சியில் இருந்து வீழ்ந்தார். ' இனி கியூப மக்கள் அமெரிக்காவின் அடிமையாக இருக்கப்போவதில்லை' என்ற மகிழ்ச்சி அனைவரிடத்திலும் ஏற்பட்டது. தங்கள் நாட்டைச் சேர்ந்தவர் போலவே சேகுவேராவை கியூப மக்களும் காஸ்ட்ரோவும் கொண்டாடினார்கள். சேகுவேராவுக்கு அரசு பதவியும் கியூப நாட்டு கரண்சியில் 'சே' எனக் கையெழுத்திடம் கவுரவுமும் வழங்கப்பட்டது.கியூப நாட்டு தொழில் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் வகையில் பல சிறப்பான திட்டங்களை கொண்டுவந்ததோடு மக்களோடு மக்களாக நின்று தமது உடல் உழைப்பையும் தந்தார்.
அரசு ஆடம்பரங்களையும்,மரியாதைகளையும் உதறித்தள்ளிவிட்டு, 'காங்கோவில் நடக்கும் ஆயுத புரட்சிக்கு உதவ போகிறேன்' என காஸ்ட்ரோவிடமிருந்து விடைபெற்றுக் கொண்டார் ‘சே’. ஒரு தோழனை விட்டும் செல்லும் நிலை சேவுக்கு ஏற்பட காரணம், உலக மக்களின் விடுதலை மீது அவருக்க இருந்த பெரு விருப்பம்தான்.
காங்கோவில் இருந்து பொலிவியா வந்த சேகுவேரா, அங்குள்ள சிறு ஆயுதக் குழுக்களுக்கு கெரில்லா பயிற்சிகளை அளித்தார். புதிய நாடு, வித்யாசமான தட்பவெட்ப சூழ்நிலை என பொலிவியாவில் சிரமத்தை எதிர்கொண்டார். அதற்கெல்லாம் அவர் அஞ்சவில்லை. ஒருகட்டத்தில், (1967-ம் வருடம் அக்டோபர் மாதம்) அமெரிக்க படைகளால் சுற்றி வளைக்கப்பட்டார் சேகுவேரா. உலக முதலாளித்துவத்துக்கு சிம்ம சொப்பனமாய் விளங்கிய சேகுவேரா பிடிப்பட்டதை அமெரிக்க அதிகாரிகளால் எளிதில் நம்ப முடியவில்லை.தான் இறக்கப்போவது தெரிந்த நிலையிலும், போராட்டங்கள் மீதும் மாற்றத்தின் மீதும் மிகப் பெரிய நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அசாத்தியங்களை விரும்பும் எதார்த்தவாதியாக இருந்தார்.
அக்டோபர் 9, சேகுவேரா சுட்டுக் கொல்லப்பட்டார். 'நீ ஒரு கோழையை சுடவில்லை. ஒரு வீரனைத்தான் சுடுகிறாய்' என தோட்டாக்களை தனது நெஞ்சில் வாங்கி கொண்டார். அவர் மறைந்து 50 வருடங்கள் ஆகப் போகின்றன. ஆனால், இன்றும் ‘சே’ கொண்டாடப்படுகிறார். கியூபாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும். இப்போதும் இளைஞர்களின் சட்டைகளிலோ, போராட்டக் களத்திலோ சேகுவேரா புகைப்படங்கள் அலங்கரிக்கின்றன. உலக மக்களின் விடுதலைக்காக அவர் போராடினார். இந்த உலகுக்கே அவர் பொதுவானவர். அடக்குமுறைகள் இருக்கும் வரையில் போராட்டங்கள் நீடித்துக் கொண்டுதான் இருக்கும். போராட்டங்கள் இருக்கும் வரையில் ‘சே’வும் மக்கள் நினைவுகளில் வாந்துகொண்டுதான் இருப்பார்.
இன்றும் கியூபாவில் பள்ளிக்குழந்தைகள் காலையில் இப்படித்தான் உறுதிமொழி எடுக்கிறார்கள், எங்கள் முன்னோர்கள் கம்யூனிஸ்ட்டாக இருந்தார்கள் நாங்கள் சேகுவேராவைப் போல் இருப்போம் என்று. ஒரு புரட்சியாளனை இதைவிட சிறப்பாக எப்படி பெருமைப் படுத்திவிட முடியும்.
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை.நான் சாகடிக்கப் படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...