Friday 23 November 2018

அக்டோபர் 11, உலகப் பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர் 11, உலகப் பெண் குழந்தைகள் தினம்.
----------------------------------------------------------------------------
“பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா பத்து மாதமாப் போராட்டம், இதுவும் பொண்ணாப் பொறந்தா கொன்னுடுவேன்னு புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்”
பெண் சிசுக்கொலை முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று சொல்ல முடியாவிட்டாலும் முன்பு இருந்ததை விட வெகுவாக குறைத்திருக்கிறது என உறுதியாகச் சொல்லலாம். இதற்கு பெற்றோரிடையே ஏற்பட்டிருக்கும் மனமாற்றம் ஒரு காரணமென்றால் பெண் குழந்தைகளுக்கான அரசு நலத்திட்டங்கள் மற்றொரு காரணம்.
இருந்த போதிலும் இன்னும் நம் மக்களிடையே பெண் குழந்தையை விட ஆண் குழந்தை உயர்வானது என்ற எண்ணம் மேலோங்கியே இருக்கிறது. உணவு,உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள் என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பைச் சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்று செரிக்க முடியாமல் தான் வளர்கிறாள்.
குழந்தைகளிடையே பாகுபாடு காட்டும் எண்ணத்தை முதலில் துடைத்தெறிய வேண்டும், எந்தக் குழந்தையாக இருந்தாலும் அது நம் குழந்தை தான் ஆணும் பெண்ணும் சரி நிகர் சமானம் தான் என்ற உணர்வோடு குழந்தைகளை வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.
இன்று பெண் குழந்தைகள் சிசுக்கொலை எனும் பேராபத்திலிருந்து தப்பி வந்தாலும் பாலியல் சீண்டல்கள்,வன்முறைகள்,வன்புணர்வுகள்,கொலைகள் என்ற கொடுமைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலின் தான் வாழ்ந்து வருகிறார்கள். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சினைகளுக்குப் பொறுப்பையும் பழியையும் அவர்கள் மீதே திணிப்பது மிகவும் கொடுமையானது.பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான அனைத்து வன்முறைகளும் முற்றிலும் ஒழிய வேண்டும் அதுவே காலத்தின் தேவை.
இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம். சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக்கொள்வோம். மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலை அனுபவிக்கப் பழகிக்கொள்வோம்.பெண்மையைப் புனிதப் படுத்துவதாகச் சொல்லி, கீழ்மைப்படுத்திய காலங் களுக்கு விடைகொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வோம்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...