Friday 23 November 2018

சபரிமலையில் வழிபட பெண்களுக்கு அனுமதியும் – 12 வயது சிறுமி ராகவி படுகொலையும்

சபரிமலையில் வழிபட பெண்களுக்கு அனுமதியும் – 12 வயது சிறுமி ராகவி படுகொலையும்.
------------------------------------------------------------------------------------------------------
சபரிமலையில் வழிபடுவதற்கான உரிமையை பெண்கள் போராடி வெற்றிபெற்ற அதே வேளையில், தேனி அல்லிநகரைச் சேர்ந்த 12 வயது சிறுமி ராகவி ஆதிக்க சாதி வெறியிடம், வாழ்வதற்காகப் போராடி தோற்றுப்போய் தனது உயிரை இழந்திருக்கிறாள்.
ஆணும் பெண்ணும் சமம், பாலின வேறுபாடு கிடையாது, அனைத்திலும் சமத்துவம் என நீதிமன்றம் சொன்னதும், நமது சமூகம் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியிருக்கிறது என்று நாமெல்லாம் மகிழ்ச்சியோடு கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், சமத்துவம் என்பதெல்லாம் இல்லவே இல்லை பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு உண்டு உயர்ந்தவன் தாழ்ந்தவன் எங்கேயும் உண்டு என்று சொல்லி ஆதிக்க சாதி வெறி தனது கோரப்பசிக்கு உணவாக சிறுமியின் உடலையும் உயிரையும் தின்று செரித்திருக்கிறது.
எந்த சமத்துவத்திற்கும் எப்போதும் எதிரிகளாக இருக்கும் சாதிகளையும் மதங்களையும் ஒழிக்காமல், சமத்துவம் கிடைத்துவிட்டதென்று எண்ணும் நமது கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் தற்காலிகமானதே. மனித மனங்கள் ஏற்காத சமத்துவத்தை சட்டம் மட்டும் எப்படி கொண்டுவந்து சேர்க்கும். வழிபடும் உரிமையை மதம் தடுக்குமென்றால் வாழ்கின்ற உரிமையை சாதி பறிக்குமென்றால் வீணாய்ப்போன மதங்களும் சாதிகளும் எதற்கு. சாதிகளும் மதங்களும் ஒழிந்தால் மட்டுமே எல்லா சமத்துவங்களும் நம்மிடையே வந்து சேரும்.
சாதி மதத்தை ஒழிப்பதற்கான மருந்து அவரவரிடமே இருக்கிறது அதை உட்கொள்வதற்கு பெரும்பாலானோர் உடன்படுவதில்லை என்பதே மிகப்பெரிய வேதனை. சாதி மத ஒழிப்பு எனும் நமது இலக்கை நோக்கி நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. சாதி மத ஒழிப்பிற்கான போராட்டங்களை நீட்டிப்பதற்கான தேவையும் அதிகமாகவே இருக்கிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...