Friday 23 November 2018

உன்னத புகழுக்கு உறுப்புகள் தானம்

உன்னத புகழுக்கு உறுப்புகள் தானம்
----------------------------------------------------------
அக்டோபர் 14, உடல் உறுப்புகள் தானம் மற்றும் சிகிச்சை தினம்.
உடல் உறுப்புகள் தானம் ஆங்கிலத்தில் ‘கெடாவர் டொனேஷன்’ அல்லது ‘கெடாவர் ட்ரான்ஸ்ப்ளான்ட்’ என்று அழைக்கப்படுகிறது
.
உடல் உறுப்புகள் தானம் என்பது உடலின் உறுப்புகளில் ஒன்றையோ,பலவற்றையோ ஏதேனும் ஒரு உறுப்பின் பகுதியையோ ஒருவர் தானம் செய்யும் செயல் ஆகும்.
ஒருவர் உயிரோடு இருக்கும்போதே உடல் உறுப்பு தானம் செய்ய இயலும். இரு சிறுநீரகங்களில் ஒன்று, கல்லீரல் திசு, கணையத் திசு, நுரையீரல் திசு, போன்றவற்றை உயிருடன் இருப்பவர் தானமாகக் கொடுக்க முடியும். இதே போல் எலும்புத் திசு, எலும்பு மஜ்ஜைத் திசு, இதய வால்வுப் பகுதிகள் போன்றவற்றையும் கொடுக்கலாம், இரத்தம் கொடுப்பதைக்கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம்.
இறந்து விட்ட ஒருவரின் உறுப்புகளையும் தானமாகக் கொடுக்கலாம், அவற்றை எடுத்துத் தேவைப்படுவருக்குப் பொருத்தலாம். கண்கள், சிறுநீரகங்கள், கல்லீரல், கணையம், சிறுகுடல், இரைப்பை, இதய வால்வுகள், நுரையீரல், எலும்புத் திசு, தோல் பகுதிகள் போன்ற உறுப்புகளையும் திசுக்களையும் இவ்வாறு கொடுக்கலாம். வெளிநாடுகளில் ஆண் விந்தகப் பகுதிகளைக்கூட இவ்வாறு பொருத்துகிறார்கள்.
இறப்புக்குப் பின்னரான உறுப்பு தானத்தில் மூளைச்சாவு முக்கிய பங்காற்றுகிறது. மூளைச்சாவு என்பது மூளை தனது செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விடுவதாகும். விபத்துகளில் தலையில் ஏற்படும் காயங்கள் மூளைச்சாவுக்கான முக்கிய காரணம். மூளைச்சாவு அடைந்த பிறகும் இதயமும் நுரையீரலும் செயல்படும், இரத்த ஓட்டமும் நடைபெறும் இதனால் பிற உறுப்புகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.
மூளைச்சாவு அடைந்தவர் அதற்கு மேல் சாதாரணமான வாழ்க்கையை வாழ முடியாது என்ற நிலையிலும் இனி சில மணிநேரங்களிலோ சில நாட்களிலோ இதயமும் தனது செயல்பாட்டை நிறுத்தி மரணம் நிகழும் என்ற நிலையிலும் அவருடைய உறுப்புகளை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு பொருத்துவதே உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் அடிப்படையாகும்.
இயற்கை மரணம் அடைந்தவர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முடியும் என்பது பற்றி மருத்துவ உலகில் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இயற்கை அடைந்து விட்ட ஒருவரின் உடலை இறந்து ஒரு சில நிமிடங்களுக்கு உள்ளாக அல்லது இறக்கப் போகிறார் என்று தெரிந்து விட்ட நிலையில் உடனடியாக செயற்கை முறையில் இரத்த ஓட்டத்தை நீட்டித்து அந்த நிலையில் அவருடைய உறுப்புகளை இன்னொருவருக்கு மாற்றக்கூடுமா என்பது பற்றியும் ஆய்வாளர்கள் சிந்தித்து வருகிறார்கள். இப்போதிருக்கும் நிலையில் இயற்கை மரணம் அடைந்தவரின் முழு உடலையும் மருத்துவ கல்விக்காகவும் மருத்துவ ஆய்வுகளுக்காகவும் கொடுக்கலாம் இது உடல் தானம் ஆகும்.
விபத்து நேர்ந்து மூளைச்சாவு அடையும் நிலையில் தன்னுடைய உறுப்புகளை தானமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒருவர் முன்னரே தன்னுடைய விருப்பத்தை பதிவு செய்து வைக்கலாம்.
மூளைச்சாவு அடைந்துவிட்ட ஒருவருடைய உறுப்புகளை எடுப்பதற்கு அவருடைய நெருங்கிய உறவினர்கள் அனுமதியும் சம்மதமும் வழங்க வேண்டும். உயிருடன் இருக்கும்போது கொடுக்கப்படும் சிறுநீரக தானம் போன்றவற்றிற்கு தானம் கொண்டுப்பவரே தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கலாம்.
உடல் உறுப்புகள் தானத்தில் இந்தியாவில் தமிழகம் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...