Saturday 30 November 2019

தமிழ்நாடு நாள்

தமிழ்நாடு நாள் - நவம்பர் 1
-------------------------------------------
சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா,கர்நாடகா,கேரளம் ஆகியவை மொழிவாரி மாநிலங்களாக பிரிந்து சென்ற பிறகு, 1956 நவம்பர் 1 இந்த நாளில் தான் தமிழகம் தனி மாநிலமானது, சென்னை மாநிலம் ( மெட்ராஸ் ஸ்டேட் ) உருவானது. ஆம் அப்போது அதற்கு தமிழ்நாடு என்ற பெயரில்லை. மற்ற மாநிலங்கள் எல்லாம் அவர்கள் விரும்பியவாறே மாநிலத்திற்கு பெயர் வைத்துக் கொண்டனர். ஆனால் தமிழகம் மட்டும் மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பகுதிகள் கன்னியாகுமரி என்ற மாவட்டமாகத் தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.தமிழர்கள் அதிகளவில் வசித்துவந்த தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை ஆகிய சில பகுதிகள் தமிழகத்துடன் இணைந்தன.திருத்தணியும், சித்தூர் மற்றும் புத்தூர் மாவட்டங்களின் சிறுபகுதியும் தமிழகத்திற்கு கிடைத்தது.
தமிழுக்கென்று தனி மாநிலம் அமைந்தாலும், அதற்கு சென்னை மாநிலம் என்ற பெயரே தொடர்ந்தது. 1956-ம் ஆண்டிலேயே சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அரசியல் கட்சித் தலைவர்களும் தமிழறிஞர்களும் தொடர்ந்து இந்தப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தினர்.1957ல் தி.மு.க சட்டமன்றத்தில் கொண்டுவந்த பெயர் மாற்றத் தீர்மானம் தோல்வியைத் தழுவியது.
தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்ட சங்கரலிங்கனார் 78-ம் நாளில் உயிர்விட்டார். எந்தக் கோரிக்கைக்காகத் தியாகி சங்கரலிங்கனார் தனது உயிரை விட்டாரோ அதை அண்ணா முதல்வராகப் பதவியேற்றபோது நிறைவேற்றிவைத்தார். 1967 ஜூலை 18 அன்று பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டசபையில் முன்மொழிந்தார் அண்ணா, அத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. 1968 நவம்பர் 23 ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.1969 ஜனவரி 14 அன்று தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.
விடுதலைக்கு முன்னும் பின்னுமான காலகட்டத்தில் தமிழ்நாடு தனது மொழி, இன உரிமைக்காகக் கட்சி பேதமின்றி பெரும் போராட்டங்களை நடத்தியிருக்கிறது. தியாகங்களையும் புரிந்திருக்கிறது. அதன் விளைவாகவே இன்றைய தமிழ்நாடு, இந்த உரிமைகளைப் பாதுகாப்பதும் மேம்படுத்துவதும்தான் அந்த தியாகங்களுக்கான சரியான மரியாதை.
தமிழ்நாடு தனி மாநிலமாக உருவான நவம்பா் 1-ஆம் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆண்டு முதல் நவம்பா் 1-ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...