Wednesday 26 June 2019

இன்றைய தலைமுறை இழந்தது என்ன?

அனைவருக்கும் வணக்கம்.

சென்ற தலைமுறைக்கு பள்ளி விடுமுறையென்று ஒன்று இருந்தது, அவர்களுக்கு கிராமத்தில் ஆயா வீடோ அப்பத்தா வீடோ ஒன்று இருந்தது. அங்கே பச்சைப்பசேலென்ற வயல்கள் இருந்தன, ஊர் முழுவதும் மரங்கள் இருந்தன. தூய்மையான காற்றும் இருந்தது, மரங்களில் ஊஞ்சலும் இருந்தது. ஓடி விளையாட பெரிய பொட்டலும் இருந்தது, நீச்சலடித்து குளிக்க கண்மாய் இருந்தது, அங்கே கோவில்கள் இருந்தன திருவிழாக்களும் இருந்தன, பலூன்களும் வண்ண வண்ண கண்ணாடிகளும் கூடவே குச்சி ஐஸ்களும் இருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக மகிழ்ச்சி இருந்தது.

இந்த தலைமுறையில் எங்களுக்கும் பள்ளி விடுமுறையென்று ஒன்று இருக்கிறது. நாங்கள் செல்வதற்கு கணினி வகுப்புகள் இருக்கிறது, தனிப் பயிற்சி வகுப்புகள் இருக்கிறது, நீச்சல் பயில வகுப்பு இருக்கிறது, பாட்டு கற்கவும் இசை கற்கவும் கூட வகுப்புகள் இருக்கின்றன. இந்தி கற்க, பேச்சு ஆங்கிலம் பயிலவும் வகுப்புகள் இருக்கின்றன.

சென்ற தலைமுறையினர் குழந்தை வயதில் குழந்தைகளாகவும்  சிறுவயதில் சிறுவர்களாகவும் வளர்வதற்கு வரமளிக்கப்பட்டவர்கள். நாங்கள் இரண்டு வயதிலேயே பள்ளி செல்வதற்கும் குழந்தையிலேயே மேதையாகித் தொலைவதற்கும் என சபிக்கப்பட்டவர்கள்
சென்ற தலைமுறைக்கென ஏராளமான விளையாட்டுகள் இருந்திருக்கின்றன, ஆனால் அதுபற்றி எதுவுமே தெரியாது எங்களுக்கு. பட்டம் விட்டதில்லை நாங்கள், பம்பரம் சுற்றத் தெரியாது, கோலிக்குண்டு அடித்ததில்லை, கிட்டிப்புள் தெரியாது, மரக்குரங்கு ஏறியது இல்லை, ஒளிந்து பிடித்து ஆடியது இல்லை. சொக்கட்டான், தாயம், பல்லாங்குழி, பாண்டி ஒன்று கூட அறிந்ததில்லை.

எங்கள் விளையாட்டரங்கம் வீட்டின் நான்கு சுவர்களுக்கு உள்ளேயே இருக்கிறது, வீடியோ கேம்சிலும் செல்போனிலுமே முடிந்துவிடுகிறது எங்கள் விளையாட்டு, எங்களுக்கும் நண்பர்கள் உண்டு ஆனால் சேர்ந்துதான் விளையாடியதில்லை. விளையாட்டுக்குக் கூட விளையாடியதில்லை வெளியில் சென்று, விளையாடி வியர்த்ததும் இல்லை, வியர்க்க வியர்க்க விளையாடியதும் இல்லை.வெளியில் சென்று விளையாடச் சொல்வார்களாம் அப்போது, வெளியில் என்ன விளையாட்டு வீட்டிற்குள் வா என்கிறார்கள் இப்போது. ஆம் நாங்கள் தொட்டிகளில் வளர்க்கப்படும் குரோட்டன்ஸ் செடிகள், பறக்கத் தெரியாத பிராய்லர் கோழிகள், மதிப்பெண்ணைச் சொல்லியே வளர்க்கப்படும் மதிப்பிகுரியவர்கள். இனி எங்கள் பெயரை மறந்து விட்டு பெற்ற மதிப்பெண்களை சொல்லியே அழைப்பார்கள் போலிருக்கிறது.

அப்போது பெரிய வீடுகள் இருந்திருக்கின்றன, அதில் பாட்டி தாத்தா, அம்மா அப்பா, பெரியப்பா பெரியம்மா, சின்னம்மா சித்தப்பா, அண்ணன் அக்கா, தம்பி தங்கை என நிறைந்திருக்கிறது வீடு, கேலியும் கிண்டலும் இருந்திருக்கிறது அவ்வப்போது சிறு சிறு சண்டைகளும் கூட, ஒன்றாகவே சமைத்து ஒன்றாகவே உண்டும் இருக்கிறார்கள். நிலா வெளிச்சத்தில் நிலாச்சோறு உண்பார்களாம் படித்திருக்கிறேன் நானும். வசதி வாய்ப்பு குறைவாக இருந்த போதும் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைவாகவே இருந்திருக்கிறது அப்போது.

இப்போதும் வீடுகள் பெரிதாகவே இருக்கின்றன அதில் பாட்டி தாத்தா இல்லை, அம்மா அப்பா பிள்ளை ஒன்று அதிகம் போனால் இரண்டு. அம்மாவும் அப்பாவும் செல்கிறார்கள் வேலைக்கு பள்ளியிலிருந்து திரும்பும் எங்களை வரவேற்கிறது பூட்டு, உள்ளே சென்றமர்ந்து மோட்டை வெறிப்போம் இல்லையென்றால் தொலைக்காட்சிப் பெட்டியை முறைப்போம். அம்மா அப்பா வருவார்கள் முத்தம் தந்து தலையை தடவுவார்கள் என்று காத்திருப்போம் வந்ததும் தடவுவார்கள் செல்போனை, பேச வேண்டியவர்கள் பேசாமல் இருக்க பேச முடியாத விலங்குகள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன எங்களோடு கார்ட்டூன் சேனலில்.

சென்ற தலைமுறை குழந்தைகளுக்கு பாட்டியும் தாலாட்டும் கிடைத்திருக்கின்றன. ஆனால் எங்களோடு பாட்டிகள் இல்லை, பாட்டிகள் இருந்தாலும் அவர்களிடம் தாலாட்டு இல்லை, எங்கே தாலாட்டுப் பாடினால் தூங்கும் குழந்தை எழுந்துவிடுமோவென பாடுவதில்லை போல. அப்போது தாத்தாக்களும் பாட்டிகளும் பெரிய கதை சொல்லிகளாக இருந்திருக்கிறார்கள் ஆனால் இன்றைய தாத்தா பாட்டிகளுக்கு சொல்வதற்கு கதைகள் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் சரவணன் மீனாட்சி கதைகளும் ராஜா ராணி கதைகளும் தான். அவர்களுக்காவது இளையராஜா இருந்திருக்கிறார் எங்களுக்கு வெறும் டங்கா மாரி ஊதாரி புட்டுக்கிட்ட நீ நாறி மட்டும் தான்.

வகை வகையான சுவையான தின்பண்டங்களும் ஆரோக்கியமான உணவுகளும் இருந்திருக்கின்றன அப்போது, எங்களுக்கு சிப்சும் பர்கரும் தான், இழுத்தாலும் வராத பீட்சாவிலும் அஜினோமோட்டோ நிறைந்த ப்ரைட் ரைஸிலும் நூடுல்சுகளின் சிக்கல்களிலும் எங்கள் உடல் நலத்தை தொலைத்து கொண்டிருக்கிறோம் நாங்கள்.

பெரியார்,அண்ணா,காமராஜர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் சென்ற தலைமுறைக்கு. ஆனால் எங்களுக்கு வாய்த்ததெல்லாம், சொல்வதற்கு எதுவுமில்லை.

எங்கள் அம்மாக்கள் சிறுவயதில் அந்த வயதுக்கே உரிய அப்பாவித்தனத்தோடு பயமின்றி சுற்றித் திரிந்திருக்கிறார்கள் அப்போது ஆனால் எங்கள் தலைமுறைக்கு தினந்தோறும் ஆசிஃபாக்களின் கதை சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் எங்கள் தலைமுறை நடுநடுங்கியபடியே செல்கிறது எங்கேயும் காமவெறி பிடித்த கயவர்களுக்கு பயந்து.

இந்த தலைமுறைக்கு பொருளாதாரமும் வசதிவாய்ப்பும் கிடைத்திருக்கிறது. ஆனால் சென்ற தலைமுறையிடம் இருந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் இல்லை, அதுவும் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...