Thursday 23 July 2020

என் பார்வையில் மனிதநேயம்


என் பார்வையில் மனிதநேயம் எதுவென்று கேட்டால் நான் இப்படிச் சொல்வேன். ஒடுக்கப்பட்டோரின் பக்கமே நான் நிற்பேன் என்றுரைத்து அவர்களின் உரிமைக்காய், கல்விக்காய், வேலைவாய்ப்பிற்காய், பெண்களின் உரிமைக்காய், இழிநிலையைப் போக்குதற்காய் இறுதிவரை களம் கண்டு போராடினாரே நம் தந்தை பெரியார் அந்தப் போரட்ட குணத்தையே மனிதநேயமென்று அடித்துச் சொல்வேன் நான்.

ஒடுக்கப்பட்டோரின் பாதுகாப்பிற்காக பல சட்டங்கள் இயற்றினாரே நம் அண்ணல் அம்பேத்கர் அந்த சட்ட அறிவை நான் மனித நேயம் என்பேன்.
ஏழைத் தொழிலாளர்களின் உயர்வுக்காக அல்லும் பகலும் சிந்தித்தாரே காரல் மார்க்ஸ் அந்த சிந்தனையை மனித நேயம் என்பேன் நான்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனும் வள்ளுவத்தை, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் புறநானூற்று வரிகளை, அறம் செய விரும்பெனும் ஆத்திசூடியை, வாடிய போதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் வரிகளை நான் மனித நேயம் என்றுரைப்பேன்.

வெளிநாட்டில் பிறந்திட்டாலும் இந்திய மண்ணில் வந்து தொண்டு பல செய்த அன்னை தெரசாவின் சேவையை, கருப்பின மக்களின் விடுதலைக்காய் பாடுபட்ட மண்டேலா, லூதர்கிங், மால்கம் எக்ஸ் தியாகத்தை மனிதநேயம் என்று சொல்லாமல் வேறெப்படி சொல்ல முடியும்.

மனிதநேயமென்ன மரித்தா போய்விட்டது கோபத்தோடு சிலர் கேட்கக்கூடும். மனிதநேயமுள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் சமூகத்தில் ஒரு சிறு விழுக்காடு. கல்விக்காகவும் நற்செயல்களுக்காகவும் செல்வத்தையும் பொருளையும் உழைப்பையும் அளிக்கின்ற நல்லவர்கள் சிலரே உண்டு. ஆனால் பெரும்பாலோர்?

ஆயிரம் நண்பர்களை முகநூலில் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறும் நாம் அண்டை வீட்டாரின் பெயரை அறிந்து வைத்திருக்கிறோமா? ஆதரவாய் எப்போதாவது பேசியிருக்கிறோமா? நெடுஞ்சாலை விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடுவோரை காணொலி எடுத்து வலைத்தளத்தில் இட்டு விருப்பக்குறி பெறுவது மனிதநேயமா? மருத்துவமனை சேர்த்து குருதி கொடுத்து உயிரைக் காப்பது மனிதநேயமா?

சம்புகனின் உயிர் பறித்த ஏகலைவன் விரல் பறித்த வர்ணாசிரமம், நீட்டின் பெயரால் அக்கா அனிதாவின் உயிர் பறித்த போதும், ஜாதியின் பெயரால் அண்ணன் வெமுலாவின் உயிர் பறித்த போதும், உங்கள் மனிதநேயம் என்ன செய்தது? எளிதாகக் கடந்து போய் வீட்டின் முகப்பறையில் அகன்ற ஒளித்திரையில் திரைப்படம் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது அப்படித்தானே?

யானை இறந்து போனதற்காக கண்ணீர் விட்டு கதறி அழும் நம் மனிதநேயம் பசிக்காகத் திருடியவனை கொன்றதுதான் வரலாறு. மதத்தின் பெயரால் படுகொலைகள் நிகழ்ந்த போது மனிதநேயம் என்ன மரத்தா போனது? குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டல் புரியும் மிருக மனம் படைத்தவர்களை மனிதக் கூட்டத்தில் எப்படிச் சேர்ப்பது?

சங்கர்களும் இளவரசன்களும் கோகுல்ராஜ்களும் கொலை செய்யப்பட்டபோது போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டுதானே இருந்தது உங்கள் மனிதநேயம்? சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத மனித நேயம், தன் சுய ஜாதியிலேயே வரன் பார்த்துத் திருமணம் செய்துவைக்கத் துடிக்கும் நம் மனிதநேயம் வெட்கக்கேடானது, அது மனித அறமற்றது.

மனிதநேயம் பற்றி பேசுகையில் நான் எழுதிய கவிதை ஒன்று நினைவிற்கு வருகிறது.

பஞ்சமனென்றாய்
தாழ்ந்தவனென்றாய்
சூத்திரனென்றாய்
இழிபிறப்பென்றாய்
தொட்டால் தீட்டென்றாய்
பார்த்தாலே பாவமென்றாய்
ஏகலைவன் விரலொடித்தாய்
சம்புகனின் தலை பறித்தாய்
தீண்டத்தகாதவனென்றாய்
சேரியிலே வாழவைத்தாய்
வெட்டுவேன் நாக்கையென்றாய்
ஈயம் காதில் ஊற்றுவேனென்றாய்
தகுதி திறமை இல்லையென்றாய்
இடஒதுக்கீடு எதற்கென்றாய்
காதலிக்கக் கூடாதென்றாய்
கழுத்தறுத்துக் கதற வைத்தாய்
உயிர் பறித்தாய்
உடைமைகளை எரித்தாய்
மலம் தின்ன வைத்தாய்
சிறுநீர் பருக வைத்தாய்
கோயிலுக்குள் வராதேயென்றாய்
தேர் இழுக்கத் தடையென்றாய்
நீ பற்ற வைத்த சாதித்தீயில்
கொழுந்துவிட்டு எரிந்தன குடிசைகள்
நாங்கள் கதறியழும்போது
ஏனென்று கேட்காத
உங்கள் சாமிகளும் எமக்கு வேண்டாம்
உங்கள் மதங்களும் எமக்கு வேண்டாம்

என் பார்வையில் மனிதநேயமென்பது ஜாதி மதம் கடவுளைத் துறந்து, நிற இன மொழி பாலின வேறுபாடு களைந்து ஒவ்வொரு மனிதரும் தன் சக மனிதர்களுடன் எல்லையற்ற அன்பையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சமூகநீதியையும் பேணுவதுதான்.

அறிவை நம்புவோம்   மனிதரை நினைப்போம்
மனிதராய் வாழுவோம் மனிதநேயம் காப்போம்.  

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...