Monday 9 October 2017

குழந்தைகள்

எப்போதும் அம்மாவிடம்
உணவு வாங்கும் என் குழந்தை
என்னிடம் ஒரு வாய் வாங்கிக்கொண்டால்
மகிழ்ச்சியில் குதிக்கிறது மனது.

குழந்தைகளின் முகங்களில் ஒளிந்திருக்கும் 
தங்கள் அப்பா அம்மாவையே
தேடுகின்றனர்
எல்லோரும்.

அறிஞர்களின் செந்தமிழைவிட
குழந்தைகளின் மழலைத் தமிழிலில் தான்
மயங்கிக் கிடக்கிறது மனது.

குழந்தைகளுக்கு
உணவு ஊட்டும் நுட்பமும்
மருந்து கொடுக்கும் நுட்பமும்
அம்மாக்களுக்கு மட்டுமே
தெரிந்திருக்கிறது.

இப்பொழுதெல்லாம் நிறைய
படிக்க வேண்டியிருக்கிறது
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே.

என் மகளின் கேள்விகளிலிருந்து
தப்பித்து விடுவதற்காகவே
கண்களை மூடி தூங்குவது போல்
நடித்து விடுவேன்.

தேர்வுகளில் விடை எழுத
வினா விடை கையேடு போடுவது போல்
குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு
விடை சொல்ல
யாராவது ஒரு கையேடு போடுங்கப்பா.

என் மகளின் இன்றைய கேள்வி

நூறு எலுமிச்சைகளின்
சக்தி கொண்டது விம் பார் என்கிறார்களே
எலுமிச்சம் பழத்திற்கு பதிலாக
விம் பாரை கலக்கி குடிக்கலாமா
என்று கேட்கிறாள்
யாரிடமாவது கேட்டுச் சொல்கிறேன் என்று கூறியுள்ளேன்
தயவு செய்து யாராவது சொல்லுங்களேன்.

குழந்தைகள் என்னமோ
சாதாரணமாக கேட்டுவிடுகின்றன
கேள்விகளை
விடை சொல்வதற்குள் தான்
விழி பிதுங்கி விடுகிறது.

இப்படியெல்லாம் கேள்வி கேட்கச்சொல்லி
யார்தான் தூண்டி விடுகிறார்களோ
இந்த குழந்தைகளை.

சாதாரணமாக கேட்கப்படும்
குழந்தைகளின் கேள்விகள்
எப்போதுமே
சாதாரணமானாதாக இருப்பதில்லை.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...