Saturday 7 October 2017

ஆயுத பூஜை

அன்பார்ந்தஅமெரிக்கக்காரர்கேளே,
இங்கிலாந்துக்காரர்களே,ஜெர்மன்காரர்களே,
ஜப்பான்காரர்களே மற்றும் இதர பிறநாட்டுக்காரர்களே உங்களுக்கு முதற்கண் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சைக்கிளை நாங்கள்தான் கண்டுபிடித்தோம்,மோட்டார்பைக்,பஸ்,வேன்,
லாரி,ஏரோப்ளேன்,ஹெலிகாப்டர்,ராக்கெட் அனைத்தையும் நாங்கள்தான் கண்டுபிடித்தோம்,டிவி,கம்ப்யூட்டர் முதல் செல்போன்வரை அனைத்தையும் நாங்கள்தான் கண்டுபிடித்தோம்,நவீன இயந்திரங்கள் அனைத்தையும் நாங்கள்தான் கண்டுபிடித்தோம் என பெருமையாகத் தம்பட்டம் அடித்துக்கொள்கிறீர்கள்,நீங்கள் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் அதே சமயத்தில் உங்களுக்கு நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இவ்வளவையும் நீங்கள் கண்டுபிடித்திருந்தாலும், நாங்கள்தான் ஆயுதபூஜை என்ற ஒன்றைக் கண்டுபிடித்து, காலம்காலமாக நீங்கள் கண்டுபிடித்த பொருட்களையெல்லாம் சுத்தம் செய்து, சந்தனம்,பொட்டு,பூ வைத்து,வாழை மரம் கட்டி, தேங்காய் பழம் வைத்து,கற்பூரம் காட்டி கும்பிட்டு வருகிறோம் என்ற நீண்ட வரலாற்றையும்,பெருமைமிகு பாரம்பரியத்தையும் கொண்டவர்கள் என்பதைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இதற்காக நாங்கள் வெட்கப்படவோ கூச்சப்படவோ மாட்டோம் என்பதையும் சொல்ல ஆசைப்படுகிறேன்.

பஸ்,வேன்,லாரி ஆகியவற்றை வேண்டுமானால் நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம் ஆனால் அதற்கு கருப்பு கயிறு கட்டவேண்டும் என்பதையும் டயருக்கு அடியில் எலுமிச்சம்பழத்தை வைத்து நசுக்க வேண்டும் என்பதையும் இந்த உலகத்திற்கே சொல்லிக்கொடுத்தவர்கள் நாங்கள்தான்,நவீன இயந்திரங்களைக் கண்டுபிடித்தவர்கள் நீங்களாக இருக்கலாம் ஆனால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தேங்காய் அல்லது பூசணிக்காயில் கற்பூரத்தை ஏற்றி இயந்திரங்களுக்கு காட்டிவிட்டு தெருவில் போட்டு உடைக்கவேண்டும் என்பதை கண்டுபிடித்தவர்கள் நாங்கள்தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

புதிய கண்டுபிடிப்புகளை உலகத்திற்கு அறிமுகம் செய்வதுமட்டும் தான் உங்கள் வேலை,அதற்கு பொட்டு,பூ வைத்து கற்பூரம் ஏற்றி கும்பிடவேண்டியது எங்களுடைய உரிமை, இதை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம் என்பதை ஆணித்தரமாகச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
இறுதியாக ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்,இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நீங்கள் கண்டுபிடிக்கும் பொருட்களுக்கு பூ,பொட்டு வைத்து,கற்பூரம் ஏற்றிக் கும்பிடுவோம் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன்.

சுண்டல்,பொரி,கடலை தின்பதற்கு நேரமாகி விட்டதால் என்னுடைய உரையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.மீண்டும் இதுபோன்ற இன்னொரு சமயத்தில் இதுபற்றி விரிவாகப்பேசுகிறேன் நன்றி வணக்கம்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...