Saturday 7 October 2017

நான் என்ன செய்ய

வெளியில் சென்று வந்தால்
ஊர் சுற்றி என்கிறாய்
வீட்டிலேயே இருக்கிறேன்
அடைக்கோழி என்கிறாய்
நான் என்ன செய்ய

கவலையாக இருக்கும்போது
அருகில் வந்து
எதையும் 
சீரியசாக எடுத்துக்கொள்ளாதே என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நீ சொல்வது சரிதானென்று
கவலையின்றி சிரித்துக்கொண்டிருந்தால்
உனக்கு கொஞ்சம் கூட
சீரியஸ்னெஸ் இல்லை என்று கோபப்படுகிறாய்
நான் என்ன செய்ய


யாருக்கும் உதவுவது இல்லையென்று
விமர்சனம் செய்கிறாய்
ஓடிப்போய் உதவினால்
நடிப்பு என்கிறாய்
நான் என்ன செய்ய


மதிப்பெண் குறைவென்றால்
மக்கு என்கிறாய்
அதிகம் எடுத்தால்
அதுவொன்றும்
அறிவின் அடையாளமல்ல என்று
அறிவுரை சொல்கிறாய்
நான் என்ன செய்ய


பேசாமல் இருக்கிறேன்
திமிர் பிடித்தவன் என்கிறாய்
பேசினால்
அதிகபிரசங்கி என்று
ஏளனம் செய்கிறாய்
நான் என்ன செய்ய


கோபம் கொள்கிறேன்
ஆத்திரக்காரன் என்கிறாய்
பொறுமையாய் இருந்தால்
சொரணை அற்றவன் என்று
சொல்லிவிட்டுப் போகிறாய்
நான் என்ன செய்ய


பயந்துபோய் ஒளிந்து கொள்கிறேன்
கோழை என்கிறாய்
தைரியமாக சண்டை போட்டால்
வம்புக்காரன் என்று
வசை படுகிறாய்
நான் என்ன செய்ய


எனது வார்த்தைகள்
உன்னைக் காயப்படுத்தி விடுமோ என்று பயந்தே
நான் அமைதியாக இருக்கிறேன்
ஆனால்
என் மௌனம் தான்
உன்னை மிகவும் காயப்படுத்துவதாக
நீ சொன்னால்
நான் என்ன செய்ய

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...