Monday 9 October 2017

சொந்த ஊர்

சாலையில் நடக்கும்போது
எதிரில் வருகின்ற
எனது ஊர் பேருந்து
சொல்ல முடியாத
ஏதோவொன்றை
சொல்லி விட்டுப் போகிறது.

பீச் இல்லை
பார்க்கும் இல்லை
ஷாப்பிங்மால் இல்லை
டைடல் பார்க்கும் இல்லை
ஏர்போர்ட் இல்லை
ரயில்வே ஸ்டேஷனும் இல்லை
அடுக்குமாடிக் கட்டிடங்கள் இல்லை
ஆறிருந்தும் தண்ணீர் இல்லை
ஆனாலும்
பிடித்திருக்கிறது
எனது ஊரை.


கடவுள் நம்பிக்கை
இல்லாதவனையும்
கோவில் திருவிழாக்களில்
குதூகலத்தோடு
கும்மிகொட்ட வைத்துவிடுகிறது
சொந்த ஊர்.


திருச்சிவாசி என்று என்னை
எல்லோரும் சொன்னாலும்
எந்த ஊரென்று யாரேனும்
கேட்டு விட்டால்
தேவகோட்டை என்று
முந்திரிக்கொட்டையைப்போல்
முந்திக்கொண்டு சொல்கிறது
வாய்.


ஏதோ ஓரிடத்தில்
யாரோ ஒருவர்
எனது ஊர் பெயரை
உச்சரிக்கும்போது
சட்டென்று
திரும்பிப் பார்க்கின்றன
கண்கள்.


புலம் பெயர்ந்த நாடுகளில்
வசிப்பவர்களிடம் போலவே
புலம் பெயர்ந்த ஊர்களில்
வசிப்பவர்களிடமும்
ஊர்ப்பாசம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.



No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...