Saturday 7 October 2017

குழந்தைகளின் விளையாட்டு

குழந்தைகளையும்
குழந்தைகளாய் 
மாறத்தெரிந்தவர்களையும் மட்டுமே
தங்கள் விளையாட்டில்
சேர்த்துக்கொள்கின்றன குழந்தைகள்

பார்வையாளர்களுக்கு மட்டுமே 
அனுமதி
நடுவர்களையோ 
பயிற்சியாளர்களையோ
விதிகளை வகுப்பவர்களையோ
வல்லுநர்களையோ
வர்ணனையாளர்களையோ 
உள்ளேயே விடுவதில்லை குழந்தைகள்
அதனாலேயே
அவர்களின் விளையாட்டு
ஊழலற்று உண்மையானதாக இருக்கிறது


எந்த விளையாட்டு விதிகளுமே
கட்டுப்படுத்துவதில்லை
குழந்தைகளை
விதிமீறல் இருப்பதாலேயே
ரசிக்கும்படியாக இருக்கிறது
அவர்களின் விளையாட்டு


வெற்றி என்பது இலக்கல்ல
விளையாடிக்கொண்டிருப்பதே இலக்கு
அதனாலேயே
குழந்தைகளின் விளையாட்டு
மகிழ்ச்சியானதாக இருக்கிறது


அவ்வப்போது அழுகை இருக்கும்
குழந்தைகள் விளையாட்டில்
ஆனால்
அழுகுணி ஆட்டம்
ஆடுவதில்லை ஒருபோதும்
மேட்ச் பிக்சிங்கோ
இல்லவே இல்லை எப்போதும்


ஒரு மணி நேரத்தில்
ஒன்பது விளையாட்டுகளை
விளையாடிவிடுகின்றன குழந்தைகள்
ஒன்றைக்கூட நிறைவு செய்யாமல்


எவ்விடத்திலும்
எந்நேரத்திலும்
எப்பொருளை வைத்தும்
பொருளே இல்லாமலும்
விளையாடிவிட முடிகிறது குழந்தைகளால்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...