Monday 9 October 2017

அன்புள்ள பெரியாரியல்வாதிகளுக்கு

அன்புள்ள பெரியாரியல்வாதிகளுக்கு பெரியாரியல்வாதி எழுதிக்கொள்வது,

நமக்கு நிறைய வேலை இருக்கிறது.கடவுள்,மதம்,சாதி,தீண்டாமை,
மூடநம்பிக்கைகள்,பெண்ணடிமை இவற்றிற்கு எதிராகவும்,மனித நேயத்திற்கு ஆதரவாகவும் நாம் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கிறது.

பெரியாரை இழித்தும் பழித்தும் கேவலமாக திட்டியும் பல இளைஞர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.அதைப் பார்க்கும்போது பெரியாரியல்வாதியான எனக்கும் கோபம் வருகிறது.நம் தோழர்களும் அவர்களுடன் சரிக்கு சரியாக மல்லுக்கு நின்று சண்டையிட்டு வருகிறார்கள்.அவர்கள் செய்வது அறியாமை என்றால் நாம் செய்வதும் அறியாமையே என்று எண்ணத் தோன்றுகிறது.

பெரியாரையும் பெரியார் கருத்துக்களையும் காத்துக்கொள்ள பெரியாரால் முடியும்.நாம் சண்டை போட்டு காப்பாற்ற வேண்டிய நிலையில் பெரியார் இல்லை.பல ஊடகங்களை தங்கள் கைகளில் வைத்துள்ள ,தங்களை அறிவாளிகள் கூட்டம் எனச் சொல்லிக்கொள்கிற அவர்களாலேயே பெரியாரை எதுவும் செய்ய முடியாதபோது இவர்களால் என்ன செய்து விட முடியும்.

நமது வேலையெல்லாம் பெரியாரையும்,அவரது கருத்துக்களையும்,அவரது போராட்டத்தையும் முன்னெடுத்து செல்வதுதான்.நாம் பெரியாரது கருத்துக்களை நம் தோழர்களிடம் மட்டுமே பகிர்ந்து கொள்கிறோமே தவிர,நமது அடுத்த தலைமுறையிடம் இளைஞர்களிடம் தம்பி தங்கைகளிடம் கொண்டுபோய் சேர்க்கத் தவறிவிட்டோம் என்றே எண்ணத் தோன்றுகிறது.

இளைஞர்கள் பலருக்கு பெரியாரைப்பற்றி சரியான புரிதல் இல்லை என்றால் அது யாருடைய தவறு. நம் தவறா அல்லது அந்த இளைஞர்களுடைய தவறா.நாம் தானே அவர்களிடம் பெரியாரை சரியாக கொண்டுபோய் சேர்த்திருக்க வேண்டும்.

தவறான செய்திகளையும்,பொய்களையும் நமது எதிரிகள் துணிச்சலாகவும் சத்தமாகவும் சொல்லும்போது,உண்மையைச் சொல்லும் நாம் சத்தமாகவும் துணிச்சலாகவும் சொல்ல தயக்கம் என்ன.இனி முக நூலில் சண்டையிடுவதையோ, ஒருமையில் திட்டிக்கொள்வதையோ விட்டு விடுவோம்.

கடவுளாலும் மதத்தாலும் சாதியாலும் ஆண்டாண்டு காலமாக நாம் அடைந்து வரும் இழிவுகளையும், அந்த இழிவுகளைத் துடைப்பதற்காக தோன்றிய திராவிட இயக்கத்தின் வரலாறுகளையும்,தலைவர்களையும் அவர்களது போராட்டங்களையும்,

பெரியாரின் கருத்துக்களையும் அவர் நடத்திய போராட்டங்களையும் அதனால் சமூகத்தில் விழைந்த மாற்றங்களையும் நன்மைகளையும்,

எதற்காக கடவுளை மதத்தை சாதியை தீண்டாமையை மூட நம்பிக்கைகளை பெண்ணடிமையை எதிர்க்க வேண்டும் என்பதையும்,மனித நேய கருத்துக்களையும் எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்பாக இளைய தலைமுறையினரும் தம்பி தங்கைகளும் புரிந்துகொள்ளும் வகையில் தோழர்கள் தங்களது பதிவுகளை இடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மனதில் தோன்றியதை எழுதிவிட்டேன் தவறிருந்தால் மன்னிக்கவும்.

அன்புடன்,
பெரியாரியல்வாதி
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...