Saturday 7 October 2017

முகமூடியுடன் முகங்கள்

முகமூடியுடன் முகங்கள்

வணக்கம் குவிக்கும் 
கைகளுக்கிடையே
மறைத்தே வைத்திருக்கிறேன் 
கத்தியை

உன்னைப்பற்றி
எந்த அக்கறையுமில்லை எனக்கு
ஆனாலும்
நலமாவென்று கேட்கத்தவறியதில்லை
ஒருபோதும்

புன்னகைக்கும்
உதடுகளின் ஓரத்தில்
ஒழுகி வழியும் நஞ்சை
துடைத்துக்கொள்கிறேன்
உனக்குத் தெரியாமலேயே

வஞ்சத்தை
நெஞ்சில் வைத்து
தேன் தடவி வருகிறேன்
நாக்கில்

தோளில் கைபோட்டு
குறிவைக்கிறேன்
உன் கழுத்துக்கு,
காத்திருக்கிறேன்
சரியான நேரத்திற்காக
கூரியக் கோரப்பற்களோடு

பாராட்டுகிறேன்
வாழ்த்துகிறேன்
கைதட்டுகிறேன்
உன்னைப்போல் யாருமில்லையென்று
உன் பெருமை பேசுகிறேன்
சற்றுத் தள்ளிச்சென்றதும்
கேலி பேசுகிறேன்
பொறாமை கொள்கிறேன்
மட்டம் தட்டுகிறேன்
சதி செய்கிறேன்

அவ்வப்போது
சரிசெய்து கொள்கிறேன்
கிழிந்து தொங்கும்
முகமூடியை

என்னிடம் மட்டும் சொல்
நீயாவது முகத்துடன் இருக்கிறாயா
இல்லை
முகமூடியுடன்தானா

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...