Monday 9 October 2017

நான்கு மாடுகளும் நரியும்

நான் எனது மகள் பாட புத்தகத்தில் உள்ள நான்கு மாடுகளும் நரியும் என்ற கதையை என் மகளுக்கு சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அந்த கதையை கதாசிரியரின் அனுமதி இல்லாமல் சற்று மாற்றி இங்கு பதிவிட்டுள்ளேன்.

இந்தக் கதை முற்றிலும் கற்பனையே. இதில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.

ஒரு காட்டில் நான்கு மாடுகள் இருந்தன.அவைகளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் அவை ஒற்றுமையாகவே வாழ்ந்துவந்தன.ஒரே தாய் வயிற்றில் பிறந்த சகோதர்கள் என்பதாலும், அவர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதாலும், அவர்கள் அனைவருக்கும் எதிரிகள்(சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை) ஒன்றுதான் என்பதாலும் அந்த நான்கு மாடுகளும் தங்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் எதிரிகளை எதிர்த்து போராடி வந்தன.

அவர்களது தாயும் எதிரிகளின் சூழ்ச்சி பற்றியும் அவற்றை எதிர்த்து எவ்வாறு போராட வேண்டும் என்பது பற்றியும் அவர்களுக்கு நன்றாகவே சொல்லிக் கொடுத்திருந்தாள்.தாய் சொல்லிக் கொடுத்தபடியே அந்த நான்கு மாடுகளும் தங்களது கூரிய கொம்புகளால் எதிர்த்து வரும் எதிரிகளை குத்தி விரட்டி ஓடச் செய்தன.ஆனால் எதிரிகளுக்கோ எப்படியாவது இந்த நான்கு மாடுகளையும் கொன்று தின்று விட வேண்டும் என்ற தணியாத ஆசை.

காலங்கள் சென்றன. கருத்து வேறுபாடுகளுடன் இருந்த அந்த நான்கு மாடுகளும் தங்களது எதிரிகளை மறந்து விட்டு தனித்தனியாக பிரிந்து ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தன.தங்களது கொம்புகளால் ஒன்றை ஒன்று தாக்க ஆரம்பித்தன.சிறியதாக ஆரம்பித்த அவர்களது சண்டை பெரிதாக மாறியது.

யாருக்கும் தெரியாமல் சண்டை போட்டு வந்த அந்த நான்கு மாடுகளும் எல்லோருக்கும் தெரியும் வகையில் பெரிய களம் அமைத்து தங்களது நீண்ட கூர்மையான கொம்புகளால் ஒன்றை ஒன்று தாக்கிக் கொண்டன.அவர்களது உடம்பிலிருந்து குருதி, வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.இதனை பார்வையாளர் பகுதியிலிருந்து இரசித்துக் கொண்டிருந்த சிங்கம்,புலி,கரடி,சிறுத்தை போன்ற எதிரிகள் கை தட்டி ஆரவாரம் செய்தன.

அவை தங்களுக்குள் இவ்வாறு பேசிக்கொண்டன, நாம் இவர்களை கொன்று தின்ன வேண்டும் என்று நீண்ட நாட்களாக முயற்சி செய்கிறோம் நம்மால் முடியவில்லை. ஆனால் தற்போது நம்முடைய வேலை மிகவும் எளிதாகி விட்டது, இவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் தீவிரமாக எதிர்த்துத் தாக்கிக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். பாருங்கள் எவ்வளவு இரத்தம் வருகிறதென்று, இன்று நம்முடைய ஆசை கண்டிப்பாக நிறைவேறும்.இனி நமக்கு நல்ல விருந்துதான்.

இந்தக் கதை முற்றிலும் கற்பனையே. இதில் வரும் பெயர்களோ சம்பவங்களோ யாரையும் குறிப்பிடுவன அல்ல.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...