Monday 9 October 2017

பேச்சு

எதையுமே செய்யாத 
உங்களது பேச்சுக்களை விட
எனது பேசாதிருத்தல் மேலானது என்ற திமிர்
எப்போதுமே எனக்கு உண்டு.

உன்னுடைய பேச்சுக்களால்
நான் வலி அடைந்திருக்கிறேன்
என்னுடைய மௌனத்தால்
என்றாவது நீ காயப்பட்டிருக்கிறாயா.

எனது பேசாதிருத்தல்
திமிர், அவமதிப்பு ,அலட்சியம் என்று
தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது.
அது எனது ஆயுதம் மட்டுமல்ல
கேடயமும் தான்.

நீ எல்லோருடனும் மகிழ்ச்சியுடன்
பேசுகிறாயா
அம்மா,அப்பா,சகோதர சகோதரிகள்,
மனைவி,குழந்தைகள்,உறவினர்கள் உட்பட,
இல்லை என்றால்
என்னை விமர்சனம் செய்யாதே
நான் யாருடனும் பேசுவதில்லை என்று.

நீ பேசாதே என்று நான் சொல்லியதில்லை
உன் பேச்சு எனக்கு பிடிக்காவிட்டாலும்
என்னைப் பேசு என்று சொல்லாதே
என் மௌனம் உனக்குப் பிடிக்காவிட்டாலும்.

உன் பேச்சு இந்த சமுதாயத்தில்
மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அல்லது
ஏற்படுத்தப்போகிறது என்பதால் 
நீ எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கிறாய்
அது இல்லாததால் 
நான் யாருடனும் பேசாமலிருக்கிறேன்.

எப்படி பேசினால் பிடிக்குமென்ற
நுட்பம் தெரிந்ததால்
நீ எல்லோருடனும் பேசிக்கொண்டிருக்கிறாய்
அது தெரியாததால்
நான் யாருடனும் பேசாமலிருக்கிறேன்.

எதையுமே செய்யாத 
உங்களது பேச்சுக்களை விட
எனது பேசாதிருத்தல் மேலானது என்ற திமிர்
எப்போதுமே எனக்கு உண்டு.


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...