Monday 15 January 2018

திரு.வைரமுத்து அவர்களுக்கு

திரு.வைரமுத்து அவர்களுக்கு வருத்தமுடன் மணிவண்ணன் எழுதுவது,
ஆரியம் திராவிடம் ஒன்றாய்க் கலக்கட்டுமே என்று எழுதினீர்கள். இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் ஆரியமும் திராவிடமும் எப்போதும் ஒன்றாய்க் கலக்கவே கலக்காது என்பது.
நீங்கள் வேண்டுமானால் விளைந்த பயிர் வளைந்து நிற்பதைப் பார்த்தும்,நட்டு வைத்த வேலில் பொட்டு வைத்ததைப் போல் நிமிர்ந்து நிற்பதைப்பார்த்தும் புளகாங்கிதம் அடையலாம்.ஆனால், அவர்கள் உங்கள் தமிழையோ, சொல்லாட்சியையோ,படைப்புகளையோ தேசிய விருதுகளையோ கண்டு மகிழப்போவது இல்லை. இது ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் சூத்திரன் மீது அவர்கள் கொண்டுள்ள வன்மம். அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே ஒரு சூத்திரன்தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
உங்கள் தமிழையும் சொல்லாடலையும் கண்டு பெருமிதம் கொள்ளும் தமிழர்களில் நானும் ஒருவன் ஆனாலும் நீங்கள் எங்களுக்கானவராக இல்லை என்பதே என் வருத்தம்.நீங்கள் எங்களது வலிகளையோ வேதனையையோ,எங்கள் மீதான அடக்குமுறையையோ,எங்களது போராட்டங்களைப் பற்றியோ,எங்களது விடுதலைக்காகவோ ஒரு போதும் பாடியது இல்லை.
பாடகர் கோவன் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிராக எத்தனையோ குரல்கள் எழுந்தன ஆனால் உங்கள் விடயத்தில் அதுபோல் நிகழவில்லை அது ஏன் என்று இப்போது புரிகிறதா வைரமுத்து அவர்களே.
நீங்கள் இரு கண்களாக நினைக்கின்ற ரசினி கமல் இருவரிடமிருந்தும் குரல் வரவில்லை. நீங்கள் உச்சி முகர்ந்து பாராட்டும் சங்கரும் மணிரத்தினமும் வாயை இன்னும் திறக்கவே இல்லை.இப்போது உங்களுக்காக வரும் ஆதரவுக் குரல் எல்லாம் எங்கிருந்து வருகின்றன என்று யோசித்தீர்களா வைரமுத்து அவர்களே.
இந்த குரல்கள் எல்லாம் வைரமுத்து என்பவருக்காகவோ உங்கள் கவி ஆளுமைக்காகவோ இல்லை, அவமானப்படுத்தப்படுகிற சூத்திரனுக்கு நாமும் துணை நிற்போம் என்ற உணர்வினால் தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
உங்கள் மேட்டுக்குடி மனோபாவத்தை விட்டுவிட்டு எங்களிடம் வாருங்கள்,எங்களைப் பாடுங்கள் எங்களுக்காகப் பாடுங்கள், எங்களுக்கானவராக மாறுங்கள். மீண்டும் சொல்கிறேன் அவர்களுக்கு நீங்கள் எப்போதுமே சூத்திரன் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வைரமுத்து அவர்களே.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...