Tuesday 23 January 2018

ஒரு சாமானியனின் உள்ளக்குமுறல்

ஒரு சாமானியனின் உள்ளக்குமுறல்.

தினந்தோறும் பேருந்தில் பயணம் செய்யும் சாமானியர்களில் நானும் ஒருவன், மாதந்தோறும் பேருந்திற்காக தொள்ளாயிரம் ரூபாய் செலவு செய்யும் நான் இனிமேல் ஆயிரத்து எண்ணூறு ரூபாய் செலவழிக்க வேண்டும். நிதி நெருக்கடியை சரி செய்வதற்காக பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக கூறுகிறீர்கள், கூடுதல் செலவின் காரணமாக ஏற்படப் போகும் எனது நிதி நெருக்கடியை யார் சரி செய்வது. எனக்கு ஏற்படப் போகும் கூடுதல் செலவைச் சரிக்கட்ட நான் வேலை பார்க்கும் இடத்தில் சம்பளத்தை உயர்த்தப் போகிறார்களா என்ன.
கனத்த இதயத்தோடு கட்டணத்தை உயர்த்துவதாகச் சொல்லும் நீங்கள் எந்த இதயத்தோடு உங்கள் சம்பளத்தை மட்டும் உயர்த்திக் கொண்டீர்கள். மக்களின் பொருளாதாரம் உயர்ந்து விட்டது அவர்கள் சமாளித்துக் கொள்வார்கள் என கேலி செய்கிறீர்கள். ஆமாம் கோடிக்கணக்கான ரூபாயை வங்கியில் வைத்துக்கொண்டு பொழுது போக்கிற்காக பேருந்தில் பயணம் செய்கிறோம் நாங்கள்.
பேருந்துக் கட்டணத்தை உயர்த்திவிட்டால் நிதி நெருக்கடியை சரி செய்து விடலாம் என்பது என்ன விதமான புரிதல் என்பது தான் புரியவில்லை. பயணிகள் அரசுப் பேருந்தில் ஏறிப் பயணம் செய்ய வேண்டுமல்லவா, நீங்கள் கட்டணத்தை உயர்த்துவதற்கு முன்பே தனியார் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும் ஆனால் அரசுப்பேருந்துகள் காலி இருக்கைகளுடனே சென்று வரும். அரசுப்பேருந்துகள் எல்லாம் வருவாய் இழப்புடன் இயங்கும்போது தனியார் பேருந்துகள் மட்டும் எப்படி நிறை வருவாயுடன் இயங்குகின்றன.
காலாவதியான, சுத்தமற்ற, பேரிரைச்சல் எழுப்புகின்ற, நல்ல இருக்கைகளற்ற, மழை பெய்தால் ஒழுகுகின்ற, போகும் வழியில் பாதியிலே நின்று விடுகிற, குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று சேராத பேருந்துகளை வைத்துக்கொண்டு, மேலே கூறிய எல்லாக் குறைகளையும் சரி செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தி விடுவதால் நிதி நெருக்கடியை சரி செய்து விட முடியுமா.
பேருந்துகளின் பராமரிப்பு சரியில்லை, பழுதுகளை உடனுக்குடன் சரி செய்வதில்லை, போதிய பழுது நீக்கும் தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாமை, தேவையான உதிரி பாகங்கள் இல்லாமை என சரி செய்ய வேண்டியவை எவ்வளோவோ உள்ளது இதை எதையுமோ சரி செய்யாமல் கட்டணத்தை மட்டும் உயர்த்தினால் பயணிகள் எப்படி அரசுப்பேருந்தில் ஏறிப் பயணம் செய்வார்கள் பிறகு எப்படி அதிக வருவாய் வரும்.
நிதி நெருக்கடி என காரணம் சொல்லி ஏன் எங்கள் தலையில் சுமையை ஏற்றுகிறீர்கள்,பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்யும் நாங்கள் இதற்கு எப்படி பொறுப்பாவோம், இந்த நிதி நெருக்கடிக்கு காரணமான நீங்கள் இப்படிப்பட்ட சூழலில் உங்கள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ளாமல் இருந்திருக்கலாமே.
அரசு நிர்வாகத்தில் பங்கு பெறும் அனைவரின் சம்பளத்தையும் உயர்த்துகின்ற நீங்கள் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு எதை உயர்த்தியுள்ளீர்கள். எங்கள் வாழ்கையையும் பொருளாதரத்தையும் உயர்த்தியுள்ளீர்களா இல்லையே மாறாக அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளீர்கள்,வரியை உயர்த்தியுள்ளீர்கள்,எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளீர்கள்,தற்போது பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு முறையும் சுமையை சாமானியர்களின் தலையில் தான் ஏற்றி வைக்க வேண்டுமா. ஒருவேளை நிதி நெருக்கடி சரியாகி பேருந்துகள் எல்லாம் அதிக வருவாய் ஈட்டும் போது மறக்காமல் எனக்குச் சேர வேண்டிய பங்கை தந்து விடுங்கள்.
இப்படிக்கு,
க.ம.மணிவண்ணன்


No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...