Monday 26 February 2018

திரு.கமலகாசன் அவர்களுக்கு

திரு.கமலகாசன் அவர்களுக்கு கவலையுடன் மணிவண்ணன் எழுதுவது.
நீங்கள் விரும்பியபடியே உங்கள் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டீர்கள் அதுவும் திரு.அப்துல் கலாம் அவர்களின் இல்லத்தில் இருந்து. கலாம் அவர்கள் பார்பனிய இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த விடயம். ஆகையால் உங்களது அரசியல் பயணம் எப்படிப்பட்டது என்பது நீங்கள் சொல்லாமலேயே எங்களுக்கு நன்றாக விளங்குகிறது. உங்கள் நிறமும் காவிதான் என்பதை நாங்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளோம் கமலகாசன் அவர்களே.
இனி ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டோம் என்று வீரமாக முழங்கி உள்ளீர்கள். இதற்கு முன்னர் ஊழல்கள் நடைபெற்ற போதெல்லாம் உங்கள் வீரம் எங்கே போயிருந்தது, வாயை மூடிக்கொண்டு வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது எதனால், ஊழல் புரிந்தவர்கள் மீதிருந்த பாசமா இல்லை பயமா கமலகாசன் அவர்களே.
சாராயக்கடைகளை அரசே நடத்துவதாக வருத்தப்பட்டீர்கள் இப்போது மட்டுமல்ல பல ஆண்டுகளாகவே அப்படித்தான் நடக்கிறது. அரசின் மதுக்கொள்கைக்கு எதிராக உண்மையான மக்கள் கலைஞன் கோவன் அவர்கள் குரல் எழுப்பி அரசு அடக்குமுறைக்கு ஆளாகி சிறை சென்றபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள் உங்கள் படப்பிடிப்பு வேலைகளில் பம்பரமாய் சுற்றிக்கொண்டு இருந்தீர்களா கமலகாசன் அவர்களே.
நான் படிக்காதவன் அதனால் எனக்கு “நீட்”டைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று முன்பு ஒரு முறை சொல்லி இருந்தீர்கள். இப்போது அரசியலுக்கு வந்து விட்டீர்கள் முதலமைச்சராகவும் ஆகப் போகிறீர்கள் இப்போதாவது சொல்லுங்கள் நீட்டை பற்றிய உங்கள் கருத்து என்ன, அப்படியே சமூகநீதி, இடஒதுக்கீடு பற்றியும் உங்கள் மனதில் உள்ளதை தெளிவாகச் சொல்லுங்கள் கமலகாசன் அவர்களே.
நாங்கள் கூடங்குளம்,கதிராமங்கலம்,நெடுவாசல்,காவிரி,முல்லைப்பெரியார்,மீனவர் போராட்டம்,விவசாயிகள் போராட்டம் என்று நாள் தோறும் போராடிக்கொண்டிருந்த போது நீங்கள் எங்கே போய் பதுங்கி இருந்தீர்கள் கமலகாசன் அவர்களே.
உரையாடினால் தீர்ந்து விடும் காவிரிச் சிக்கல் என்கிறீர்கள்,உரையாடலை முன்னெடுத்துச் சென்று யாருக்கும் தீங்கு இல்லாத வகையில் நல்ல தீர்வினைக் காட்ட வேண்டிய நடுவண் அரசு கள்ள மவுனம் சாதித்து நழுவல் போக்கை கடைபிடிக்கிறதே அதற்கும் ஏதாவது சொல்லுங்கள் கமலகாசன் அவர்களே.
சாதி மதத்தை வைத்து விளையாடுவது நிறுத்தப்பட வேண்டும் என்கிறீர்கள், விளையாடுவது யார் என்று தெளிவாகச் சொல்லுங்கள். தேவர் மகன்,விருமாண்டி,சபாஷ் நாயுடு என்று சாதியை வைத்து விளையாடும் உங்களுக்கு இதைப் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது கமலகாசன் அவர்களே.
தமிழ்நாட்டின் சிஸ்டம் பற்றி மட்டும் தான் எப்போதும் பேசுவீர்களா, இந்தியாவின் சிஸ்டம் பற்றி எதுவும் பேச மாட்டீர்களா, ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, கருப்புப்பண ஒழிப்பு, வங்கி மோசடி இவைகளை பற்றியும் கொஞ்சம் வாய் திறவுங்கள் கமலகாசன் அவர்களே.
உங்கள் வழிகாட்டி காமராசரா,காந்தியா,பெரியாரா,அம்பேத்கரா என்ற கேள்விக்கு எல்லோரையும் பிடிக்கும் என்று திருவாய் மலர்ந்துள்ளீர்கள், பெரியாரும் அம்பேத்கரும் ஏறக்குறைய ஒரே திசையில் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்தவர்கள். ஆனால் காந்தி இவர்களிடமிருந்து முற்றிலும் விலகி எதிர்த் திசையில் பயணித்தவர். ராமபக்தர் காந்தி, ராமர் படத்தை எரித்தவர் பெரியார். தனித்தொகுதி இரட்டை வாக்குரிமையை ஆதரித்தவர் அம்பேத்கர், எதிர்த்தவர் காந்தி. பிறகு எப்படி உங்களுக்கு எல்லோரையும் பிடிக்கிறது. இதில் உங்கள் ஞான குரு பாரதியை விட்டு விட்டீர்கள். எல்லோரையும் எனக்கு பிடிக்கும் என்பவனும், எல்லோருக்கும் என்னை பிடிக்கும் என்பவனும் காரியவாதிகளே. நீங்களும் காரியவாதி தான் கமலகாசன் அவர்களே.
உங்கள் கொள்கை எதுவெனக் கேட்டால் கொள்கையை தெளிவாகச் சொல்ல வேண்டும் அதை விடுத்து இதுவரை செய்யாமல் விட்டதைச் செய்வதுதான் கொள்கை என்கிறீர்கள். எங்களை குழப்புவது ஒன்றே தான் உங்கள் கொள்கையா. விளங்க முடியாக் கவிதை நீங்கள் மட்டுமல்ல உங்கள் பேச்சும் தான். உங்கள் கொள்கையையே தெளிவாகச் சொல்ல முடியாத நீங்களா கட்சியை நடத்தி ஆட்சி செய்யப் போகிறீர்கள் கமலகாசன் அவர்களே.
வலது சாரியா இடது சாரியா என்று கேட்டதற்கு நான் நடுநிலையாளன் என்கிறீர்கள். நடுநிலையாளர்கள் தான் மிகவும் ஆபத்தானவர்கள், இவர்கள் சாலைகளில் எந்த ஓரத்திலும் செல்லாமல் நடுவிலேயே செல்பவர்களைப் போன்றவர்கள், திடீரென்று ஏதாவது ஒரு பக்கம் திரும்பி பெரும் விபத்தையும் பேரிழப்பையும் உண்டாக்குபவர்கள். நீங்களும் மிகவும் ஆபத்தானவர்தான் கமலகாசன் அவர்களே.
நீங்கள் உங்களை நடுநிலையாளர் என்று சொல்லிக்கொண்டாலும் உங்களது கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள, இணைந்த வலது கரங்களைப் பார்க்கும்போது உங்களது அரசியல் கொள்கை வலதுசாரிக் கொள்கையாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது கமலகாசன் அவர்களே.
சொகுசான வாழ்கையை தந்த இம்மக்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே என்ற குற்ற உணர்ச்சியில் கட்சியை தொடங்கியதாகச் சொல்கிறீர்கள். நாங்களும் உங்களைப் போன்றவர்களின் பேச்சைக் கேட்டு வாக்களித்து விட்டு ஏன் வாக்களித்தோம் என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டு தான் இருக்கிறோம். நீங்கள் எந்த குற்ற உணர்ச்சியும் அடையத் தேவை இல்லை உங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது இளம் வயது நடிகைகளுடன் மரத்தைச் சுற்றி டூயட் பாடுவதற்கு, நீங்கள் இந்த கலைச்சேவையை தொடர்ந்து செய்து ஆஸ்கார் விருது பெற முயலுங்கள். இதுவே நீங்கள் எங்களுக்கு செய்யும் மிகப்பெரிய சேவை கமலகாசன் அவர்களே.
க.ம.மணிவண்ணன்
23/02/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...