Thursday 10 May 2018

மனுநீதி – குலக்கல்வி – நீட் - ஒரு ஒப்பீடு

------------------------------------------------------------------
மனுநீதி – குலக்கல்வி – நீட் - ஒரு ஒப்பீடு
------------------------------------------------------------------
சூத்திரர்கள் வேதம் படிக்கக்கூடாது, காதால் கேட்கக்கூடாது, மனதில் நிறுத்தக்கூடாது. மீறினால் நாக்கை வெட்ட வேண்டும், ஈயத்தை காய்ச்சி காதில் ஊற்ற வேண்டும், நெஞ்சை பிளக்க வேண்டும். இதுதான் மனுநீதி. இங்கு வேதம் என்பது கல்வியையே குறிக்கிறது. இந்த அநீதியை மீறியதால் தான் ஏகலைவனின் கட்டை விரலும் சம்பூகனின் தலையும் பறிக்கப்பட்டது. கல்வி கற்ற பார்பனர்களுக்கும் கல்வி மறுக்கப்பட்ட ஏகலைவனுக்கும் சம்பூகனுக்கும் என்ன பெரிய வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களின் கல்விக்கொள்கைப்படி எல்லோரும் கல்வி கற்கலாம் என்ற நிலை உருவானது, அது எப்படி எல்லோரும் கல்வி கற்கலாம், தலையில் இருந்து பிறந்தவனும் காலில் இருந்து பிறந்தவனும் ஒன்றா மற்ற கல்வி எப்படியோ மிக உயர்ந்த கல்வியான மருத்துவமுமா, அது முடியாது மருத்துவக்கல்வி படிக்க வேண்டுமெனில் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும். ஆம் தமிழ்நாட்டில் இந்த அரசாணை 1920 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நீதிக்கட்சியின் பெருமுயற்சியால் தான் இந்த அரசாணை நீக்கப்பட்டது. மருத்துவம் பயின்ற பார்பனர்களுக்கும் மருத்துவக்கல்வி மறுக்கப்பட்ட மற்றவர்களுக்கும் என்ன பெரிய வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
பார்ப்பனியம் தோற்றுப்போனதுபோல் நமக்குத் தெரியலாம், ஆனால் ஒருபோதும் அது தன்னை மற்றவர்கள் வெல்வதை அனுமதிக்காது, ஆம் புத்தத்தால் அடித்து நொறுக்கப்பட்ட பார்ப்பனீயம் அந்த புத்தத்தையே உள்வாங்கி செரித்து அதை இந்தியாவில் ஒழித்தது. அதுதான் வரலாறு.
சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பார்ப்பனியம் ராஜாஜியின் பார்ப்பன மூளையை தட்டி எழுப்பியது. 6000 பள்ளிகளை இழுத்து மூடினார் எஞ்சியிருந்த பள்ளிகளில் குலக்கல்வி திட்டம் புகுத்தப்பட்டது அதாவது அவரவர் சாதித்தொழில் அவரவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. எதற்காக இந்த ஏற்பாடு, எல்லாச்சாதியினரும் உயர்கல்வி கற்று உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டால் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவித்து வந்த வசதிகளும் வாய்ப்புகளும் பறிபோகுமே அதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் அப்படி என்ன வேறுபாடு, ஒரு நூலளவு தான் வேறுபாடு ஆம் பூணூல் ஒன்றுதான் வேறுபாடு.
குலக்கல்விக்கு எதிராக பெரியார் மக்களை திரட்டி பெரும் போராட்டம் நடத்தினார். பயந்துபோன ராஜாஜி பதவி விலகினார், முதல்வராக பதவியேற்ற காமராஜர் குலக்கல்வித் திட்டத்தை நீக்கினார்.
இப்போது நீட்டை தூக்கிக்கொண்டு வந்திருக்கிறது பார்ப்பனியம் தகுதி திறமை என்று சொல்லிக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக கல்வி கற்று வருகின்ற ஒரு கூட்டத்திற்கும் காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்டு ஓரிரு தலைமுறைகளாக மட்டுமே கல்வி கற்கின்ற ஏகலைவர்களின் சம்பூகர்களின் கூட்டத்திற்கும் இவர்கள் சொல்கின்ற தகுதி திறமையில் சிறு வேறுபாடு இருக்கவே செய்யும், அதுவும் நூலளவுதான் ஆம் பூணூலளவு தான் வேறுபாடு.
குலக்கல்வித் திட்டத்திற்கு எதிராக பெரியார் பெரும்போராட்டத்தை நடத்தியபோது நமது மூத்த தலைமுறையினர் அந்த திட்டத்தின் கேட்டைப்பற்றி முழு அளவில் தெரியாது இருந்தபோதும் தலைவர்களின் பேச்சைக்கேட்டு நன்கு புரிந்து முழு வீச்சில் போராட்டங்களில் கலந்து கொண்டனர். அதனால் தான் குலக்கல்வித் திட்டம் தோல்வி அடைந்தது. அன்று நம்மவர்கள் பொருளாதாரத்தில் அடித்தட்டு மக்களாய் இருந்தார்கள் இருந்தாலும் நமது உரிமையை நாம் எதற்காகவும் விட்டுத்தரக்கூடது என்ற போர்குணம் இருந்தது அதனால் போராட்டங்களில் கலந்து கொண்டனர். போராட்டம் வெற்றி அடைந்தது.
ஆனால் இன்றைய நீட் எதிர்ப்பு போராட்டங்களில் நம்மக்கள் பெருமளவில் ஈடுபாடு காட்டுவதில்லை குறைந்தபட்சம் எதிர்ப்புக்குரல் கூட எழுப்புவதில்லை. காரணம் இன்றைய தலைமுறையில் நம்மவர்களில் பெரும்பாலனவர்கள் பொருளாதாரத்தில் உயர்நிலையில் உள்ளார்கள். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என நீட் பயிற்சி மையத்திற்கு பிள்ளைகளை அனுப்ப தயாராக உள்ளனர், வெளிமாநிலத்தில் என்ன வெளிநாட்டில் தேர்வு வைத்தாலும் பிள்ளைகளை விமானத்தில் அழைத்துச் சென்று தேர்வெழுத வைக்க தயாராக உள்ளனர். எதையும் பொருளாதாரத்தை கொண்டு பெற்று விடலாம் என்ற மேட்டுக்குடி மனநிலையை அடைந்துவிட்டனர் நம்மவர்கள். உரிமையும் தன்மானமும் காசு கொடுத்தால் கிடைக்குமா என்ன, கடைகளில் பெற முடியுமா சூடும் சொரணையும்.
ஏதுமற்ற அடித்தட்டு மக்கள் ஏக்கப்பெருமூச்சு விட்டபடி விரக்தி நிறைந்த முகங்களோடு தங்கள் கைகளை விட்டு நழுவிச் செல்லும் எதிர்காலத்தை எட்டிப்பிடிக்க வழிதெரியாமல் உலா வருகின்றனர்.
நேற்று வரை நீட் தேர்வே வேண்டாம் என்று குரல் எழுப்பி வந்த நாம், இன்று தமிழ்நாட்டிலேயே தேர்வெழுத விடுங்கள் என்ற இடத்திற்கு நகர்ந்து வந்து விட்டோம். நாளை.......?
க.ம.மணிவண்ணன்
07/05/2018

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...