Thursday 26 April 2018

ஒரு விவசாயியின் ஆதங்கக் குரல்.

ஒரு விவசாயியின் ஆதங்கக் குரல்.
தண்ணீரோடு இணைந்த எம் வாழ்க்கை இனி கண்ணீரோடுதான் தொடரும் போலிருக்கிறது.
வயலை உழுது விதைவிதைத்து நாற்றுநட்டு நீருக்காக வானத்தை அண்ணாந்து பார்ப்பதும் ஆற்று நீருக்காக ஏங்கித் தவிப்பதுவுமே தொடர் கதையாக இருக்கிறது எங்கள் வாழ்வில்.
வாழ்க்கையோடு பரமபதம் விளையாடிக்கொண்டிருக்கும் எங்களுக்கு உங்களின் வார்த்தை விளையாட்டுகள் என்றுமே புரியப்போவது இல்லை.உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புகள் தற்குறிகளான எங்களுக்குத்தான் புரியவில்லை நாட்டை ஆளும் அறிவாளிகளான உங்களுக்குமா புரியவில்லை. உண்மையிலேயே புரியவில்லையா இல்லை யாருக்குமே புரியாத விதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறதா.
வாழ்க்கையின் கூட்டல் கழித்தல் கணக்குகளுக்கே விடை தெரியாமல் விழி பிதுங்கிப் போய் இருக்கும் பாமரர்களாகிய எங்களுக்கு உங்களின் டி.எம்.சி கணக்கு மட்டும் புரிந்துவிடவா போகிறது.
நாங்கள் அறிந்ததெல்லாம் விவசாயமும் காவிரியும் தான், காவிரி எங்களுக்கு வெறும் நதி அல்ல, அது எங்கள் வாழ்கையின் ஆதாரம் அது எங்கள் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த சொந்தம். காவிரி எங்கள் உணர்வோடும் உயிரோடும் கலந்தவள், அவளை எங்களிடம் வர விடுங்கள்.
காவிரியாலே வாழ்ந்தோம் வாழ்கிறோம், இனி கிடைத்தால் வாழுவோம் இல்லையென்றால் எங்களோடு சேர்ந்து எங்கள் விவசாயமும் மாய்ந்து போகும். என் பாட்டன் காவிரியால் விவசாயம் பார்த்தான், நான் காவிரியை வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கிறேன், என் பிள்ளை காவிரியைப் பாடப்புத்தகத்தில் மட்டும்தான் பார்ப்பான் போலிருக்கிறது.
அரசியலாளர்களே உங்கள் வாக்கு அரசியலுக்காக எங்கள் வாழ்க்கையை பலிகடாவாக்கி விடாதீர்கள். காவிரியை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள், அவள் எங்களை கைவிடமாட்டாள் வாழ்வளிப்பாள். உலகம் உள்ளவரை நாங்களும் உங்களுக்கு உணவளிப்போம்.
நடந்தாய் வாழி காவிரி
இப்படிக்கு,
தமிழக விவசாயி

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...