Thursday 26 April 2018

சீட்டு வாங்கலையோ சீட்டு, சீட்டு வாங்கலையோ சீட்டு

சீட்டு வாங்கலையோ சீட்டு, சீட்டு வாங்கலையோ சீட்டு
அம்மா சீட்டு வாங்கலையோ சீட்டு, ஐயா சீட்டு வாங்கலையோ சீட்டு. போனா வராது பொழுது போனா கெடைக்காது. 1 ஆம் வகுப்பு சீட்டு 1½ லட்ச ரூபாய்தான், சீட்டு வாங்கலையோ சீட்டு.
ஆம், கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் 1 ஆம் வகுப்பு சீட்டை ஒரு மாணவனுக்கு ஒதுக்கித்தருவற்கு அவரது தந்தையிடம் 1½ லட்ச ரூபாய் லஞ்சமாக கேட்டிருக்கிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர் என்பதும் அப்போதைய குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் தேசிய விருதை வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1½ லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு 1 ஆம் வகுப்பு சீட்டை ஒதுக்கும் அளவிற்கு அப்படி என்ன மகத்துவமானது அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியில் உயர்தரமான கல்வி வழங்குவார்களாம். உயர்தரமான கல்வி என்றதும் நல்லொழுக்கத்தையும் நன்னெறியையும் நன்னடத்தையையும் அறத்தையும் போதிப்பார்களோவென்று யாரும் தவறாக எண்ணி விட வேண்டாம். அங்கு பயிலும் மாணவர்களை அனைத்து பாடங்களிலும் உயர்மதிப்பெண் பெறவைப்பதே உயர்தரமான கல்வியாம். உயர்ந்த வாழ்வியல் நெறிகளை சொல்லித்தராத கல்வி எப்படி உயர்தரமான கல்வியாக இருக்கும் என்பதுதான் விடை தெரியாத கேள்வி.
சரி, இப்போது விசயத்திற்கு வருவோம். லஞ்சம் கொடுக்க விரும்பாத மாணவனின் தந்தை சி.பி.ஐ அதிகாரிகளிடம் புகார் செய்ததால் அதிகாரிகளின் திட்டப்படி லஞ்சப்பணம் கொடுக்கப்படும்போது அதைப் பெற்றுக்கொண்ட பள்ளி முதல்வர் பிடிபட்டுள்ளார்.
அவர் இதுபோல், எத்தனை மாணவர்களின் பெற்றோர்களிடம் லஞ்சப்பணம் பெற்றுள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டபோது, தன்னைப்போல எந்தெந்த கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்கள் எவ்வளவு லஞ்சப்பணம் பெறுகிறார்கள் என்ற தகவலையும் தந்திருக்கிறார்.
1 ஆம் வகுப்பில் 1½ லட்ச ரூபாய் லஞ்சமாக கொடுக்கும் ஒரு மாணவன் உயர் கல்விக்காக லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுக்கும் ஒரு மாணவன் தான் செலவு செய்த பணத்தை எப்படி நேர்வழியில் சம்பாதிப்பான். முறை தவறிதானே பொருள் ஈட்டுவான். மாணவர்கள் நெறி தவறி வாழ்வதற்குத்தான் வழிகாட்டுகிறார்களா இந்த கல்வியாளர்கள். இது போன்று தவறிழைத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை என்ன இனி கொடுக்கப்படப்போகும் தண்டனைதான் என்ன.
சில மாதங்களுக்கு முன்பு ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்தார், அவர் பெரிய பதவியில் இருந்ததால் பெரிய அளவில் லஞ்சம் பெற்றார் ஆகையினால் அவர் பெரிய திருடர். இவர் சிறிய பதவியில் இருப்பதால் சிறிய அளவில் லஞ்சம் பெற்றுள்ளார் ஆகையினால் இவர் சிறிய திருடர். இவர்களை மரியாதையுடன் திருடர் என்றே குறிப்பிட வேண்டும் ஏனென்றால் இவர்கள் அதிகம் படித்த அறிவாளிகள் அல்லவா. இவர்களைப் போன்று பெரு மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய பல திருடர்கள் பள்ளி முதல்வர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது கேந்திரியா பள்ளிகளில்.
ஆக அவரவர்கள் வாழ்கையில் அவரவர் அளவில் திருட்டுத்தனம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள், இவர்களை நம்பித்தான் இப்படியானதொரு கேடுகெட்ட கல்விச்சூழலில் நமது பிள்ளைகளை நாம் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறோம் நல்லொழுக்கத்தையும் நன்னெறியையும் நன்னடத்தையையும் அறத்தையும் பள்ளியிலிருந்து கற்று வருவார்கள் என்று எண்ணி.
க.ம.மணிவண்ணன்
11/04/18

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...