Wednesday 29 January 2020

திருவள்ளுவர் திருவுருவம் உருவான வரலாறு

திருவள்ளுவர் திருநாளான இன்று திருவள்ளுவர் திருவுருவம் உருவான வரலாற்றையும் தெரிந்து கொள்வோம்.
உலகம் போற்றிக் கொண்டாடும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரின் திரு உருவம் தமிழருக்கு கிடைக்கவில்லையே என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் நாளும் ஏங்கினார். திருவள்ளுவரின் உருவம் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் திளைத்திருந்தார், அந்த கற்பனை வடிவத்தை சரியாக படம்பிடித்து தந்தவர் அவரின் உண்மை தொண்டரான ஓவியர் வேணுகோபால் சர்மா.
வேணுகோபால் சர்மா படம் வரையும் போது அது எவ்வாறு இருக்கவேண்டும் என்று தனது அபிப்ராயத்தை கூறியதோடு அந்தப்படம் அச்சேறுவதற்கும் பெரும் துணையாய் நின்றவர் பாவேந்தர்.
ஓவியர் வரைந்து காட்டிய சிறிய படத்தை செல்வந்தரான திரு.ராம.தமிழ்ச்செல்வனிடம் காட்டி இதைப் பெரிய அளவில் வரைவதற்குப் பொருளுதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார் பாவேந்தர், அவரது கட்டளையை ஏற்று பொருளுதவி செய்ய ஒப்புக்கொள்கிறார் தமிழ்ச்செல்வன்.
பாவேந்தர் எண்ணத்தின் படியே திருவள்ளுவர் உருவத்தை ஓவியமாக்கி உள்ளத்தை கவர்கிறார் சர்மா. இந்த ஓவியத்தை அப்போதைய முதல் அமைச்சராக இருந்த காமராஜரிடம் காண்பிக்க காமராஜரும் அந்த ஓவியத்தை மகிழ்ந்து பாராட்டுகிறார்.
கரந்தையில் முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் தலைமையில் நடைபெற்ற புலவர் குழு கூட்டத்தில் இப்படத்தை காட்சிக்கு வைத்த பாவேந்தர் குழுவிலிருந்த புலவர்களிடம் ஒப்புதலை பெறுகிறார்.
இந்த கூட்டத்தில் தான் பாவேந்தரை யானைமீது அம்பாரியில் உட்காரவைத்து தஞ்சை நகர வீதிகளில் ஊர்வலமாக அழைத்து வந்து முத்தமிழ் காவலரும் புலவர்களும் சிறப்பித்தனர் என்பது வரலாற்று பெருமைக்குரிய செய்தி.
அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், டாக்டர் மு.வ.சிலம்புச் செல்வர், கலைஞர் கருணாநிதி பேராசிரியர் அன்பழகன், கவியரசர் கண்ணதாசன் என பலதரப்பினரும் திருவள்ளுவர் திருவுருவத்தைக் கண்டு மகிழ்ந்து ஏற்றுக்கொண்டனர்.
திருவள்ளுவர் திருவுருவப் பட வெளியீட்டு விழா பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அப்போதைய கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த டாக்டர். சுப்பராயன் திருவள்ளுவர் உருவப்படத்தை கண்டு மகிழ்ந்து தபால் தலையை வெளியிட்டு வரலாறு படைத்தார்.இப்படித் தொடங்கியது திருவள்ளுவர் உருவப்பட வரலாறு.
பாவேந்தர் எண்ணத்தில் இயக்கத்தில் ஊக்கத்தில் பிறந்த திருவள்ளுவர் திருவுருவம், ஓவியர் வேணுகோபால் சர்மா கைவண்ணத்தில், குடியாத்தம் ராம.திருச்செல்வன் வள்ளல் தன்மையில் உருவாகி, இன்று உலகம் கண்டு மகிழும் திருவள்ளுவர் திருவுருவமாக நிலை பெற்றுள்ளது. உண்மை வரலாறு இப்படித்தான் பதிவாகியிருக்கின்றது.
க.ம.மணிவண்ணன்
16/01/2020

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...