Tuesday 1 January 2019

டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் நாள்

டிசம்பர் 3, உலக மாற்றுத்திறனாளிகள் நாள்
--------------------------------------------------------------------
மாற்றுத்திறனாளிகள் மன உறுதியாலும் தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் வாழ்க்கையை சிறப்பாக்கிக் கொள்ளும் திறனாளிகள்.
மாற்றுத்திறனாளிகள் மனதால், எண்ணங்களால் உயர்ந்தவர்கள்தான். மற்றவர்களிடம் இல்லாத தன்னம்பிக்கை மனஉறுதி, வாழவேண்டும் என்கிற வைராக்கியத்தை அவர்களுக்குத் தருகிறது. அந்த வைராக்கியம்தான் வலிகளைத் தாங்கி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழிகளைத் தந்து சாதனையாளர்களாய் சாதிக்க வைக்கின்றது.
ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் இன்னொரு மாற்றுத்திறன் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். தேடலில்தானே வாழ்க்கையின் வெற்றி அடங்கி இருக்கிறது. அந்த வெற்றிதான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துகின்றது.
கொடிய நோய் பறித்துக் கொண்ட பேச்சுத்திறனை, எழுத்துத்திறனை, தளராத முயற்சியால் மீட்டுக்கொண்ட,அதிசயமே அதிசயத்துப் போகும் மிகப்பெரும் சாதனைக்குரியவர் ஹெலன் கெல்லர். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, துணிச்சல், ஆர்வம், அன்பு, பரிவு, பாசம், தேடல் இதன் மறு பெயர்தான் ஹெலன்கெல்லர். தன் உடல் குறைபாடுகளை மலைபோன்ற மன உறுதியால் வெற்றி கண்டவர்.
ஸ்டீபன் ஹாக்கிங் கை, கால், வயிறு, தலை என உடலின் எந்தப் பாகமும் செயல்படாத நிலையில் நம்பிக்கை இழக்காமல் வலக்கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துகளை அடையாளம் காட்டி பாடம் நடத்தி, புத்தகம் எழுதி புகழின் உச்சிக்கு உயர்ந்தவர். தன்னம்பிக்கைப் பயிற்சியாளர்.
ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு முறை தொலைக்காட்சியில் கேட்ட கேள்விகளுக்கு கணினி மூலம் விடை சொன்னார் இப்படி,
“வாழ்க்கை எப்படி இருக்கிறது” என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறார் தொகுப்பாளர்.
“முன்பைவிட மகிழ்ச்சியாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கிறது” என்கிறார் ஹாக்கிங்.
“இந்த உடல் நிலையில் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்கிறார், தொகுப்பாளர்.
“எதை இழந்தீர்கள் என்பதல்ல, என்ன மிச்சம் இருக்கிறது என்பதுதான் முக்கியம்” என்றார் ஸ்டீபன் ஹாக்கிங்.
‘அசைக்கமுடியாத உறுதியும் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டவன் உலகத்தைத் தன் வழியில் தானே உருவாக்கிக் கொள்வான்’ என்பார் தத்துவமேதை கதே.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...