Tuesday 1 January 2019

சுயமரியாதை வீராங்கனை அன்னை மீனாம்பாள்

சுயமரியாதை வீராங்கனை அன்னை மீனாம்பாள்
---------------------------------------------------------------------------
பெண் விடுதலைக் காகவும், தலித் விடுதலைக் காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத் தலைவியாக விளங்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி களில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். தலித் மக்களுக்கு அகில இந்திய அளவில் தலைமையேற்ற முதல் பெண்மணி, கௌரவ நீதிபதியாகப் பணியாற்றியவர், பல்கலைக்கழக செனட் அமைப்புகளில் பங்கேற்று வழிநடத்தியவர் எனப் பல குறிப்பிடத்தக்க சமூகப்பணிகளையாற்றிய மீனாம்பாள் அவர்கள் புகழ்பெற்ற தாழ்த்தப்பட்டோர் இயக்கத் தலைவர் சிவராஜ் அவர்களின் துணைவியாரும் ஆவார்.
மிகச் சீரிய சுயமரியாதை வீரங்கனை. ஆம், அன்றைய காலக்கட்டங்களில் தந்தை பெரியார் அவர்களோடு பல்வேறு கூட்டங்களில், திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றியவர். அண்ணல் அம்பேத்கர் இயக்கத்திலும் பங்கேற்று அகில இந்திய அரசியலிலும் முத்திரை பதித்தவர்.
ராஜாஜி அவர்கள் பிரதமராக இருந்த சமயம் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க ஏற்பாடு செய்தார். அப்போது சென்னை தியாகராயர் நகரில் கூட்டத்தைத் தொடங்கி வைத்து அன்னை மீனாம்பாள் இந்தி திணிப்பை எதிர்த்து உரையாற்றி முதன் முதலில் இந்தி திணிப்பு போரை தொடங்கி வைத்தார்.
வரலாற்றில் தந்தை பெரியார் அவர்களுக்கு பெரியார் எனும் பட்டம் அளித்த பெருமை அன்னை மீனாம்பாள் அவர்களையே சாரும். 1938 இல் சென்னையில் நடந்த பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
இதனை நீதிக்கட்சி பவள விழா மலர் ஒன்றில் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறுகிறார்.
“நான், நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்மாள் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார்கள். நாம் நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்கவேண்டும் என்று முடிவு செய்தோம். அப்பொழுதுதான் ‘பெரியார்’ என்று அழைப்பது என்ற முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி ‘பெரியார்’ என்று பட்டம் கொடுத்தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக என் வாழ்நாளில் கருதுகின்றேன்”. என்றார்.
அதே போன்று, மும்பையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் வீட்டில் தன் இணையர் தந்தை சிவராஜ் அவர்களுடன் கலந்து கொண்ட போது, அண்ணல் அவர்களே விருந்து சமைத்து பரிமாறினார்கள் என்பது மிகச் சிறப்பான செய்தி. அண்ணல் அவர்கள் எப்போதும் அன்னை மீனாம்பாள் அவர்களை தன் தங்கை என்றே அழைத்து வந்தார்கள்.
மிகச் சீரிய பெண்ணியவாதியாக திகழ்ந்த அன்னை மீனாம்பாள் அவர்களின் முழக்கம், “பெண்களின் விடுதலையே ஆண்களின் விடுதலை” என்பது.
31 -1 -1937 இல் திருநெல்வேலியில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் இவ்வாறு பேசினார்கள்.
“ஓர் சமுகமோ, ஓர் நாடோ விடுதலையடைய வேண்டுமானால் “கல்வி”, “ஒற்றுமை”, “மகளிர் முன்னேற்றம்” இம் மூன்றும் மிகவும் அவசியமானவை. இந்தியாவின் கல்வி மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது; சாதி வேற்றுமைகளால் சமூகத்தில் ஒற்றுமையும் குறைவு; உலக அளவில் ஒப்பிடுகையில் இந்திய மகளிர் கேவலமாக நடத்தப்படுகிறார்கள், மகளிரின் பிற்போக்கான நிலை நாட்டையும் பிற்போக்கான நிலையில் வைத்திருக்கிறது”.
“பெண்கல்வி என்பது குழந்தைகளை வளர்த்துப் பராமரித்து அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதன் அருமையை உணர்த்தி அக்குடும்பத்தை உயர்த்தும். பெண்களின் அரசியல் பங்களிப்புகளுக்கு வழி வகுத்து சமூக முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இது நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும். இதனை மனதில் கொண்டு பெண்கல்விக்கு வழிவகுப்பது இன்றியமையாதது”.
“ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான், எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிரூபிக்க வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார் அன்னை மீனாம்பாள்.
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...