Tuesday 1 January 2019

தந்தை பெரியாரும் - இட ஒதுக்கீடும் - முதல் சட்ட திருத்தமும்

தந்தை பெரியாரும் - இட ஒதுக்கீடும் - முதல் சட்ட திருத்தமும்
----------------------------------------------------------------------------------------------------
சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் முதல் மந்திரியாக ஓமந்தூர் பி. ராமசாமி அவர்கள் 1947-ல் பதவியேற்ற பிறகு, 1928-ல் பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ உத்தரவைப் பின்வருமாறு திருத்தி, ‘மொத்த உத்தியோகம் 14 என்றால், பார்ப்பனருக்கு 2, கிறிஸ்துவருக்கு 1, முஸ்லிமுக்கு 1, ஆதிதிராவிடருக்கு 2, பிற்பட்டோருக்கு 2, மற்ற பார்ப்பனர் அல்லாதாருக்கு 6 என்ற வீதத்தில் உத்தியோகம் வழங்கப்பட வேண்டும்' என்று உத்தரவிட்டார். இதைப் பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் ஓமந்தூர் ராமசாமியை "தாடியில்லாத ராமசாமி" என்று வசைபாடினார்கள் என்பது வரலாறு.
இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியின் சென்னை மாகாண அரசு, 24.03.1947 அன்று ஓர் ஆணையைப் பிறப்பித்தது. அந்த ஆணை மூலமாக, 14 பணியிடங்கள் இருந்தால், அவற்றில் இரண்டை, பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்டவருக்கு ஒதுக்கீடு செய்தது. ஓமந்தூர் பி. ராமசாமி அவர்களின் தலைமையிலான சென்னை மாகாண அரசுதான், இந்தியா விலேயே முதன்முறையாகத் தனி ஒதுக்கீடு வழங்கியது.நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, 21.11.1947 அன்று பிறப்பித்த அரசு ஆணையின்படி, இதற்கு முன் 12 என்று கணக்கிடப் பட்ட பணியிடங்கள் 14-ஆக உயர்த்தப்பட்டு, உயர்த்தப்பட்ட இரு பணியிடங்களும் பார்ப்பனர் அல்லாத, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு, ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது.
நீதிமன்றம் போட்ட தடை:
இந்தியா குடியரசு நாடாகி, இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நிலையில், இரண்டு பார்ப்பன மாணவர்கள் வகுப்புவாரி ஒதுக்கீட்டால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இந்த ஒதுக்கீட்டு ஆணை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 15-வது விதி மற்றும் 29(2)-வது விதி ஆகியவற்றுக்கு முரணானது' என்றும், ‘தனிநபர் உரிமையைப் பாதிக்கும் வகுப்புவாரி உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்' என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டத்தினை இயற்பியல், வேதியியல் பிரிவில் படித்த செண்பகம் துரைராஜன் என்ற பார்ப்பன மாணவர் சென்னை அரசு மருத்துவக் கல்லூயில் எம்.பி.பி.எஸ். படிப்பதற்கு மனு செய்திருந்ததாகவும் தனக்கு எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்காமல் தன்னைவிட குறைவாக மதிப்பெண் பெற்றிருந்த பாப்பனரல்லாத சமூகத்தைச் சோந்தவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட் கொடுத்துள்ளதாகவும் அது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 15ஆவது பிரிவின்படி இனம், மொழி, ஜாதி அடிப்படையில் எந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கும் கல்வியில் வேறுபாடு காட்டக்கூடாது என்று சொல்லியிருப்பதற்கு மாறாக சென்னை மாகாண அரசாங்கம் வகுப்புவாரி இடஒதுக்கீடுச் சலுகை கொடுத்து வருவதாகவும், அந்த அரசாணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தார். மேற்படி வழக்கில் ஆஜராவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும் குழுவில் உறுப்பினராயிருந்த சா. அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் செண்பகம் துரைராஜனுக்கு ஆதரவாக வாதாடினார்.
வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதை வரைமுறைப்படுத்தும் அரசாணை எண். 1254 (கல்வி) நாள் 17.05.1948 செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது. மேற்படி தீர்ப்பு வந்தவுடன் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் போர்க்குரல் எழுப்பி மாபெரும் போராட்டத்திற்குப் பார்ப்பனரல்லாதார் அணியமாக வேண்டுமென்று அறைகூவல் விடுத்தார். மேற்படி தீர்ப்பிற்கு எதிராக அன்றைய சென்னை மாகாண அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. 1950 ஆம் ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பையே உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேல்முறையீட்டிலும் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரே உச்ச நீதிமன்றத்தில் செண்பகம் துரைராஜனுக்கு வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குத் தொடுத்த ஒரு பார்ப்பனப் பெண்மணி, எழுத்து மூலம் உறுதிமொழிப் பத்திரம் தராமலேயே அவருடைய வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஏற்கப்பட்டு,விசாரிக்கப்பட்டு அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பும் வழங்கப்பட்டது. இதை உச்சநீதிமன்றம் பின்னால் கண்டுபிடித்துக் கூறியது என்றால்,இது எவ்வளவு பெரிய மோசடியானது என்பது விளங்கும்.
பெரியார் நடத்திய மாநாடும் பேரெழுச்சியும்:
சமூக நீதிக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியை எதிர்த்து தந்தை பெரியார் 14.08.1950-ல் நாடெங்கும் ‘வகுப்புரிமை நாள் கொண்டாடுங்கள்!’ என வேண்டுகோள் விடுத்தார். தந்தை பெரியாரின் வேண்டுகோளை ஏற்றுத் தமிழகமே திரண்டெழுந்தது. மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் கட்சி வேறுபாடின்றி, ‘அரசியல் சட்டம் ஒழிக! ‘வகுப்புவாரி உரிமை வேண்டும்!’ என முழங்கினார்கள்.
டெல்லி உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் வகுப்புவாரி உரிமைக்கு எதிராக அமைந்தது. அந்தத் தீர்ப்பைத் துணையாகக் கொண்டு ,‘வகுப்புவாரி உத்தரவை அமல்படுத்துவது இந்திய அரசியல் சட்டத்திற்கு முரணானது; ஆதலால், அதனை அமல்படுத்தக்கூடாது’ – என மத்திய அரசு 1950 செப்டம்பர் மாதம் மாகாண அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியது.
அனைத்துக் கட்சியிலும் உள்ள வகுப்புவாரி உரிமை ஆதரவாளர்களைத் திரட்டினார் பெரியார்; திருச்சியில் 03.12.1950-ல் ‘வகுப்புவாரி உரிமை மாநாடு’ ஒன்றைப் பெரிய அளவில் நடத்திப் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். நடுவணரசு அமைச்சர்கள் சென்னை மாகாணத்திற்கு வரும்போது கறுப்புக்கொடி காட்டி நம் வெறுப்பை,எதிர்ப்பை உணர்த்த வேண்டும் என தமிழக மக்களுக்கு தந்தை பெரியார் அறைகூவல் விடுத்தார். களத்தில் குதித்தது மாணவர் பெரும் படை. ஊர்தோறும் உணர்ச்சி பெருக்கு! மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டினார்கள் திராவிடர்கழகத்தினர். அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பரித்து போராட்டங்களை நடத்தின.
பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் அனைவரும் அவரவர்க்கு உரிய முறையில் வகுப்புரிமை காக்க போராடினார்கள், வாதாடினார்கள் என்றாலும் போராட்டப் புயலின் மய்யமாய் திகழ்ந்தவர் பெரியாரே.
அரசியலமைப்பு சட்டத்தில் முதல்திருத்தம்:
தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் கிளர்ச்சியின் விளைவால், மக்கள் சக்தியின் வலிமையையும், இந்தக் கோரிக்கையின் நியாயத்தையும் இந்திய அரசு உணர வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று. ஜனநாயகவாதியான பிரதமர் நேரு, உண்மை நிலையை அறிய, காமராஜரைக் கலந்தாலோசித்தார். காமராஜர் தந்த தெளிவான ஆலோசனைக்குப் பிறகு, இட ஒதுக்கீட்டிற்காக முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு திருத்தப்படும் தீர்மானம் பிரதமர் நேரு அவர்களால் கொண்டு வரப்பட்டு 01/06/1951 அன்று 15வது விதியில் 4வது உட்பிரிவாக சேர்க்கப்பட்டது.வகுப்புரிமைக்கு வந்த ஆபத்து நீங்கியது. இந்திய அரசியல் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஓராண்டு காலத்திற்குள் 1951, பிப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட இந்த திருத்தமே அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட ‘முதல்’ திருத்தம் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை முன்மொழிந்து நாடாளுமன்றத்தில் 29.05.1951-ல் நேரு இவ்வாறு பேசினார்.
“இந்தக் குறிப்பிட்ட விஷயமானது இந்தக் குறிப்பிட்ட வடிவத்தில் இங்கு முன் மொழியப்படக் காரணம் சென்னையில் அண்மையில் நடந்துவிட்ட சில நிகழ்ச்சிகளே ஆகும். இது பற்றி அவையினருக்கு நன்கு தெரியும். இதைமூடி மறைப்பது அவசியமற்றது. சென்னை மாகாண அரசு குறிப்பிட்ட வகுப்பினருக்கு,ஏன் எல்லாச் சாதியினருக்குமே இடஒதுக்கீடு தந்து ஆணை பிறப்பித்துவிட்டது.அந்த ஆணை முறையானதாக இல்லையென்றும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் கருத்துக்கு விரோதமாக உள்ளதென்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்புக் கூறியதே இந்த திருத்தம் வரக் காரணமாகும்” இவ்வாறு மூடி மறைக்காமல்,நாடாளுமன்றத்தில் நேரு இதைப் போட்டு உடைத்து விட்டார்.
இந்த சட்ட திருத்தத்தின் மீது நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் நடைபெற்றன. விவாத முடிவில் 01.06.1951-ல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அரசியல் சட்டவிதி 15-ல் உட்பிரிவு 4என்பதைச் சேர்த்து நேரு கொண்டு வந்த திருத்தத்துக்கு ஆதரவாக 243 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் பதிவாயின.
இந்தியாவில் அரசியல் சட்டத்தின் ‘முதல்’திருத்தம், வகுப்புவாரி உரிமைக்கான ‘சமூக நீதிக்காக’ செய்யப்பட்டது. மக்கள் எழுச்சிகளும், போராட்டங்களும் மக்கள் நலனுக்குப் புறம்பான தீர்ப்புகளையும்,தடைகளையும்,உடைத்தெறியும் என்பதே வரலாற்று உண்மையாகும்.
அம்பேத்கரின் அறிவாற்றல் :
அரசியலமைப்புச் சட்டம் திருத்தம் செய்வதற்கு அண்ணல் அம்பேத்கர் முழுமையான ஆதரவினை அளித்து தன்னுடைய தேர்ந்த வாதத்திறமையினால் மிகப்பெரும்பான்மையினர் ஆதரவளிக்க அண்ணல் அவர்கள் ஆற்றிய அரிய உரையே காரணமாகும். கிட்டத்தட்ட 90 நிமிடங்களுக்கும் மேலாக தன்னுடைய உரையில் மிகவும் இடர்பாடான நுட்பமான அரசியல் சட்டம் மற்றும் சட்டங்கள் குறித்த சிக்கல்கள் பற்றி விளக்கி கூர்மையான அறிவு நுட்பத்துடனும் தெளிவுடனும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய உரைகளிலெல்லாம் தலைசிறந்தது என்று 19.05.1951 ஆம் நாளிட்ட தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் வெகுவாகப் பாராட்டியிருந்தது.
பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புரிமைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தது அண்ணல் அம்பேத்கரின் அறிவு! அம்பேத்கருக்கு முன்பே அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு ஒன்றை பி.என்.ராவ் என்பவர் உருவாக்கியிருந்தார்.அதில் விதி 12ல் 3வது பிரிவு "அரசு பணிகளில் எந்த வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும் அரசு இட ஒதுக்கீடு செய்யலாம்" என்று இருந்தது. இதன் மூலம் அதிகார செல்வாக்கு பெற்ற உயர்குடியினரே அரசு பணிகளை அபகரித்து கொள்வார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட அண்ணல் அம்பேத்கர் "எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும்" என்று திருத்தி அதை அரசமைப்பு சட்டத்தின் விதி 16ல் 4வது உட்பிரிவாக சேர்த்தார். இதனால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்திட அரசியல் சட்டத்தை இலகுவாக திருத்த முடிந்தது.இன்று ஆண்டபரம்பரை எனும் மயக்கத்தில் திரியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அம்பேத்கரின் அரிய பணியை அறிந்து கொள்ள வேண்டும்.அவருக்காக அல்ல...நமக்காக!
இன்றைய நிலை:
விரிவு கருதி சுருக்கமாக சொன்னால்....அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டு வந்ததுதான் இன்று மாநில அரசில் 69% இட ஒதுக்கீடு!திராவிடர் இயக்கத்தினர், மற்றும் வடபுலத்திலுள்ள சமூகநீதி சிந்தனையாளர்களின் இடைவிடாத முயற்சியால், மண்டல் கமிசன் மூலமாக வி.பி.சிங் அவர்களின் பெரும்பணியால் பெற்றதுதான் மத்தியஅரசில் 27% இட ஒதுக்கீடு!ஆனால் இந்த ஒதுக்கீடுகளின் பலனையும் முழுமையாக அனுபவிக்க இயலாத வகையில் நீதிமன்றத்தின் குறுக்கீடுகள்,நீட் தேர்வுகள், தனியார் மயமாக்கல் என இன்றுவரை பார்ப்பனீயம் முயன்று கொண்டே இருக்கிறது.இன்று ஓரளவிற்காவது நாம் கல்வி வேலைவாய்ப்புகளில் நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர்களை வந்தேறி என்று தூற்றுதல் எளிது! ஆனால் வரலாற்றை மாற்றுவது கடினம்!
க.ம.மணிவண்ணன்

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...