Tuesday 1 January 2019

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்



கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
--------------------------------------------------------
நகைச்சுவை நடிகர்கள் என்பவர்கள் திரையில் சும்மா வந்துவிட்டுப்போகிறவர்கள் என்கிற எண்ணத்தை உடைத்து நொறுக்கிய திரையுலகப்போராளி அவர். நாற்பத்தி ஒன்பது ஆண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களின் மூலம் மக்களை சீர்படுத்த முயன்றவர் அவர்.
நாகர்கோவில் அருகே உள்ள ஒழுகினசேரி கிராமத்தில் 1908-ல் ஆண்டு நவம்பர் மாதம் 29-ம் நாள் பிறந்தார்.நாகர்கோவில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்பதன் சுருக்கமே என்.எஸ்.கே. கலைவாணரை செதுக்கியவர்கள் பெரியாரும், ஜீவானந்தமும். கலைவாணர் பிறந்தபோது நாகர்கோவிலை உள்ளடக்கிய நாஞ்சில்நாடு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுமையில் இருந்தது. சாதிக் கொடுமை அதிகம். நாயர்களுக்கும், நம்பூதிரிகளுக்கும் கீழ்தான் மற்ற அனைத்து சாதியினரும் அடிமைப்பட்டு இருந்தனர்.கலைவாணரின் நாடகங்களில் இது வெளிப்பட்டது. வன்மையாக அல்ல, மென்மையாக.
என்.எஸ்.கிருஷ்ணன் வருகைக்குப்பின் நகைச்சுவையின் தரம் உயர்ந்தது. நகைச்சுவை என்பது வெறுமனே உடல் மொழி மட்டுமல்ல; உடல் மொழி, வார்த்தை ஜாலங்கள் இவைகளைத் தாண்டி மக்களைச் சிந்திக்கவும் வைப்பது என்பதைத் தன் ஒவ்வொரு படத்திலும் ஆணித்தரமாக முன்வைக்க ஆரம்பித்தார் கலைவாணர்.
மக்களிடம் அவர் புகழ் கூட ஆரம்பித்தது. நகைச்சுவை நடிகனாக மட்டுமே அவர் சினிமாவைக் கடந்துசென்றுவிடவில்லை. எந்த விஷயத்திலும் தனக்கென ஒரு பார்வையை அவர் கொண்டிருந்தார். நடிப்பு பாடல் புதிய சிந்தனை பகுத்தறிவு என சினிமாவில் அவர் இயங்கினார். தனிப்பட்ட தன் வாழ்வில் அதிகபட்ச மனிதநேயத்தைப் பின்பற்றினார். திறமைசாலிகளைப் போற்றினார். அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்தார்.
கலை என்பது மக்களை மகிழ்விக்க மட்டுமன்றி மக்களைச் சிந்திக்கவைத்து அதன்மூலம் சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதே என்ற கொள்கையுடன் பெரியாரைத் தன் வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட கலைவாணர் தன் படங்களில் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுக்கருத்துகளையும் பரப்பினார். ஒரு பெரிய இயக்கம், பல தலைவர்கள் ஒன்றுகூடிச் செய்யவேண்டிய சமூகப்பணியைத் தனி ஒருவனாகத் திரைப்படங்களில் நிகழ்த்திக்காட்டினார் அவர். சுயமரியாதைத் தலைவர்கள், திராவிட இயக்கத்தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தவர்கள் என அத்தனை தலைவர்களாலும் கொண்டாடப்பட்டது ஒன்றே அவரது நேர்மையான சமூகத்தொண்டுக்கு அடையாளம். 'கலைஞன் கட்சிக்கு அப்பாற்பட்டவன்' என்ற தன் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார்.
சீர்திருத்த கருத்துகளை படங்களில் இயல்பாக கொண்டு சேர்த்தார் அவர். தன்னுடைய நிலம் முழுவதையும் ஊர் மக்களுக்குப் பொதுவாக்கி, கூட்டு உழைப்பால் கிடைக்கும் பலனை ஊர் மக்கள் ஒற்றுமையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நல்லத்தம்பி படத்தில் வலியுறுத்தினார். தீண்டாமை மற்றும் மதுவை எதிர்த்தும் அவர் குரல் கொடுத்தார். கிந்தனார் நாடகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க வேண்டும் என்று குரல் கொடுத்தார். இது எதுவும் அறிவுரை போல இருக்காது என்பது தான் கலைவாணரின் முத்திரைக்கு சான்று.
சென்னையில் 'சந்திரோதயம்' நாடகம் பெரியார் தலைமையில் நடந்தது. 'நாடகம். சினிமாவால்தான் மக்கள் பாழாகிறார்கள்!' என்று அடித்துப் பேசி அமர்ந்தார் பெரியார். அடுத்துப் பேசிய என்.எஸ்.கே.'பெரியார் சொன்னவை அனைத்தும் சரியே. நாங்கள் கொள்ளை அடிக்கிறோம். எங்களால் நன்மையைவிட கேடுகளே அதிகம்!' என்றார். அந்த நேர்மையும் துணிச்சலும் கலைவாணர் கைவண்ணம்!
அக்ரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. பெரியார் வரிசையில் கலைவாணர் என்று எழுதி விட பெரியாரிடம் இது குறித்து கருத்து கேட்டார்கள் . ” தனக்கே உரிய வகையில் நானும் சீர்திருத்தக் கருத்துகளைச் சொல்கிறேன்; கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனும் சொல்றாரு. நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலியையும் வீசி எறிகிறார்கள். ஜனங்க, இதையே கலைவாணர் சொன்னா காசு குடுத்துக் கேட்டுக் கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டு அதை ஒத்துக்கிட்டுப் போறாங்க. அந்த வகையிலே என்னைவிட அவரு உசந்துட்டாரு ” என்றது வரலாறு.
தினமும் ஒரு பிச்சைக்காரர் கலைவாணர் வீட்டு வாசலில் வந்து நிற்பாராம். இவரும் பணம் கொடுப்பார். 'அவன் உங்களை ஏமாற்றுக்கிறான்' என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்லவே, 'அவன் ஏமாத்தி என்ன மாடி வீடா கட்டப்போறான். வயித்துக்குத்தானே சாப்பிடப்போறான். ஏமாத்திட்டுப் போகட்டுமே' என்பாராம்!
ஒரு கட்டத்தில் கொடுத்துக் கொடுத்தே இல்லாமல் ஆகிப்போனார். அப்போது அவரிடம் வேலை செய்த ஒருவர், 'எனக்குத் திருமணம்' என்று வந்து நிற்கிறார். சுற்றும்முற்றும் பார்த்தபோது கண்ணில்பட்டது. ஒரு வெள்ளி கூஜா. அதை எடுத்துக் கொடுத்து, 'இதை விற்றுத் திருமணச் செலவுக்கு வைத்துக்கொள்'என்றாராம். எவரேனும் என்னிடம் உதவி கேட்டு, நான் இல்லை என்றும் கூறும் நிலை வந்தால், நான் இல்லாமல் இருக்க வேண்டும்!' என்று அடிக்கடி கூறுவாராம்.
கலைவாணர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயம், அவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வதந்திகள் பரவின, 'மதுரம், நான் சாகலேன்னா இவங்க விட மாட்டாங்கபோல. இவங்க திருப்திக்காகவாவது ஒரு தரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கே என்றாராம்!
தன் மனைவி மதுரத்திடம் இப்படிச்சொன்னார் ,"நான் ஐம்பது வயசுக்குள்ள இறந்துடணும் மதுரம். ஒரு கலைஞன் தன்னோட கலை வறண்டு போறதுக்கு முன்னாடி இறந்துடணும் !" என்று.சொன்னபடியே நாற்பத்தி ஒன்பது வயதில் மரணமடைந்தார்.
“இனி என்.எஸ்.கே. செத்தாலும் சரி, அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி. நாடக புரட்சி உலகைப் பற்றி சரித்திரம் எழுதப்பட்டால், அந்தச் சரித்திரத்தின் அட்டைப் படத்தில் கிருஷ்ணன் படம் போடாவிட்டால் அந்தச் சரித்திரமே தீண்டப்படாததாகி விடும்”--(குடிஅரசு 11.11.1944)
கலைவாணர் என்.எஸ்.கே. பற்றி தந்தை பெரியார்.

No comments:

Post a Comment

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது ஊடகங்களே

குழந்தைகளின் மனதில் மூடநம்பிக்கைகளை வளர்ப்பது சமூக ஊடகங்களே, சமூக ஊடகங்கள் என்பதை திரைப்படங்கள் தொடங்கி புலனம் வரையிலான அனைத்து ஊடகங்களையு...